PUBLISHED ON : ஆக 05, 2019

கலிபோர்னியாவில் உள்ள ஜெட் புரொபல்ஷன் லேபரட்டரியில், யூஜீன் லால்லி என்னும் விஞ்ஞானி அவர். போட்டோ சென்சார்ஸ் (photosensors) என்னும் சிறிய தகடுகளைக்கொண்டு, கணினியில் ஏற்றக்கூடிய புகைப்படங்கள் எடுப்பது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினார்.
விண்வெளியின் கடுமையான தட்பவெட்ப நிலைக்கும், மிகச்சிறிய வாழ்விடத்திற்கும், வித்தியாசமான தொழில்நுட்பத்திற்கும் ஏற்றாற்போல், குட்டி கேமராக்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர் பொறியியலாளர்கள். அதன் விளைவாகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் image sensors - ஒளிக்கதிர்களை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய pixel என்னும் கருப்பொருளைக் கொண்ட தகடுகள்.
1990களில், எரிக் பாஸ்ஸம் என்னும் ஆராய்ச்சியாளர், Complementary metal-oxide semiconductor (CMOS) என்னும் புதுமாதிரியான image sensorகளைக் கண்டுபிடித்தார். தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட பாஸ்ஸம், விண்வெளியில் மட்டுமன்றி, நிலவெளியிலும் கேமராக்களுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பது புரிய, 1995இல் போடோபிட் (Photobit) என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார்.
மில்லியன் கணக்கில் image sensors தயாரிப்பதில் முனைந்தார். அவரது உழைப்பும், தொலைநோக்குப் பார்வையும் விரைவிலேயே பலன் அளித்தன. 2001இல், மைக்ரான் டெக்னாலஜி என்னும் நிறுவனம் போடோபிட்டை கைப்பற்றியது. அப்பொழுது புதிதாகப் பிரபலமடைந்து கொண்டிருந்த ஒரு தொழில்நுட்ப சாதனத்தில், பாஸ்ஸம் உருவாக்கிய மென்தகடுகளைப் பயன்படுத்தும் திட்டமும் உருவானது.
அது என்ன தொழில்நுட்பச் சாதனம் என்கிறீர்களா? செல்போன்தான்.
- பவித்ரா ஸ்ரீனிவாசன்
