PUBLISHED ON : ஆக 05, 2019

பழங்கால கணினிகள், மிகப் பெரியவை. ஓர் அறை முழுவதையும் அடைத்துக்கொண்டு ஏகப்பட்ட மின்சாரத்தையும் விழுங்கிக் கொண்டிருந்தன.
பணியில் சுறுசுறுப்பு இருந்தாலும், மெமரி அதிகம் இல்லை. 1960களில் விண்வெளிப் பிரயாணங்களும், நிலவில் கால்பதிப்பதும், வேற்றுக்கிரக பிரவேசமும் அதிவேகமாக நடந்துகொண்டிருந்தன. அதற்கேற்றாற்போல் தொழில்நுட்பமும் முன்னேறவேண்டியிருந்தது. குறிப்பாக, கணினி. சிறிய விண்கலத்திற்குள் ஒரு மிகப்பெரிய பிரபஞ்சப் பிரயாணத்திற்கான சகல விவரங்கள், சிக்கலான கணக்குகள் என, அனைத்தும் அடங்கவேண்டும். எப்படி?
பதில் அளித்தவர், பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி பில் மாக்ரிட்ஜ் (Bill Moggridge).
பற்பல பகுதிகள் கொண்ட மகத்தான கணினிகள் போலல்லாமல், சிப்பி (clamshell) போல் மேல்மூடி திறக்கும் ஒரு பெட்டி. அதன் அடியில் விசைப்பலகை. உள்ளே Intel 8086 processor; 320x240 pixel display; 340 KB memory அனைத்தும் இருந்தன. ப்ளாப்பி (floppy) போன்றவற்றை இணைத்து, மெமரியை அதிகப்படுத்தலாம்.
ஏப்ரல் 1982இல் 1101 என்ற மாதிரி வடிவத்தில் வெளியான இச்சிறிய கணினி, விண்வெளிக்கலன்களில் உடனடியாக இடம்பெற்றது.
கைக்கு அடக்கமான வடிவம், எங்கும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய வசதி என, கணினி உலகில் புதிய யுகத்தைத் தொடங்கியது இந்த கிரிட் (Grid) கம்ப்யூட்டர்.
இன்று உங்கள் மடியில் குழந்தைபோல் அமர்ந்திருக்கும் மடிக்கணினி உருவான வரலாறு இதுதான்.
- ஏலங்குழலி
