PUBLISHED ON : அக் 09, 2017

நவீன மயமாக மாறிக்கொண்டு வரும் தற்போதைய காலத்தில், பண்டிகைகள் கொண்டாட்டங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. பண்டிகைக் காலம் வரும்போது நமக்கு விடுமுறை கிடைக்கிறது என்பது மட்டுமல்ல; உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்களைச் சந்திக்கவும் அவர்களோடு நல்லுறவுகளைப் பேணுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. பண்டிகைகள் புதிய அர்த்தங்களைத் தருகிற இன்றைய காலகட்டத்தில், பண்டிகைகள் கொண்டாடுவது என்ன மாதிரியான நன்மைகளைத் தருகின்றன என்று சென்னை, திருவல்லிக்கேணி, இந்து மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். பண்டிகைகள் பற்றி என்றவுடன் குதூகலமாகவும், உற்சாகமாகவும் அவர்கள் தெரிவித்த கருத்துகள் இதோ!
பண்டிகைகள் என்று சொன்னதும், முதலில் எங்களுக்கு விடுமுறை என்பதுதான் ஞாபகத்துல வரும். ஒவ்வொரு பண்டிகைக்கும் நிறைய அர்த்தங்கள் இருக்கு. விடுமுறை என்பதோடு விழாக்களுக்கான கொண்டாட்டங்கள் மனதுக்கு உற்சாகம் கொடுக்குது. நண்பர்களைச் சந்திப்பதும், வாழ்த்துகளைப் பரிமாறிக்கறதும் நட்பையும், உறவுகளையும் புதுப்பித்துக்கொள்ள உதவுது. எனவே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள, உறவு, நட்பு வளர பண்டிகைகள் காரணமா இருக்கு.
ச.வ.அருண்குமார், 12ம் வகுப்பு
பண்டிகைங்க நம்ம பண்பாடு, கலாசாரம் இதையெல்லாம் நமக்கு நினைவுபடுத்துது. குடும்பத்தினர் உறவினர்களை நாம சந்திக்க ஒரு வாய்ப்பாவும், குடும்ப உறவுகளைப் பேணவும் பண்டிகைகள் முக்கியப் பங்கு வகிக்குது. பொதுவாகவே நம் நாட்டிலே பல பண்டிகைகள் இலையுதிர்காலத்துல ஆரம்பிக்குது. விவசாயத்தைக் கொண்டாட ஒரு பண்டிகை, நன்மைகள் விளைவதை, தீமைகள் அழிஞ்சதை நினைவுகூர என ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு தனியான காரணத்தோட இருக்கு. பொதுவா பண்டிகைகளோட நோக்கம் தீமைகள் அகன்று நன்மை விளைவதை பத்தியதா இருக்கு. பலரோட பழகவும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் பண்டிகைகள் உதவியா இருக்கு.
த.பார்த்திபன், 12ம் வகுப்பு
நம்முடைய பண்டிகைகள் முக்கியமா செய்யறது என்னன்னா அக்கம்பக்கத்தில் உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து வாழ்த்துகளையும், இனிப்புகளையும் பகிர்ந்துகொள்ளச் செய்யுது. இதனால மனித உறவுகளில் மேம்பாடு ஏற்படுது. எல்லா நாட்களிலும் நாம எல்லாரையும் சந்திக்க முடியாம போனாலும் பண்டிகை, திருவிழா போன்ற காலத்துல எல்லாரும் ஒன்னா கூடி சந்திச்சு மகிழ்கிறோம். விடுமுறை என்பதால எங்களுக்கும் கூடுதல் மகிழ்ச்சியும், உற்சாகமும் தருது. இதுதவிர, வெளியூர்களில் இருந்து வேலை காரணமாக வேற ஊர்களுக்கு வந்திருக்கறவங்க தங்களோட சொந்த ஊருக்குப் போகவும், அங்கே உள்ள உறவினர்களைச் சந்திக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தற நன்மையை பண்டிகைகள் தருது.
மு.விஷால், 11ம் வகுப்பு
நகரங்களில் வசிக்கிறவங்க பெரும்பாலும் பக்கத்து வீட்டுல இருக்கறவங்க கிட்டகூட பேச நேரம் இருக்கறதில்ல. கூடப்படிச்சவங்க, வேலை பார்க்கிறவங்க, நண்பர்கள் இப்படி எல்லாரையும் சந்திக்கிற வாய்ப்புக் கொடுக்கிற பாலமா பண்டிகைகள் இருக்கு. பரபரப்பான, இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில், பண்டிகைகள் என்பது மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் தர்ற ஒண்ணா இருக்கு. நண்பர்களைச் சந்தித்து உரையாடி மகிழ வாய்ப்புகளை பண்டிகைகள்தான் தருது. அதனால பண்டிகைகளை தவறாம நாம கொண்டாடணும்.
க.வெங்கடேசன், 11ம் வகுப்பு
எனக்கு பண்டிகைன்னா முதல்ல நினைவுக்கு வரது, நாங்க எங்க சொந்த ஊருக்குப் போவோம் என்பதுதான். தொடர்ச்சியான விடுமுறைகள் பண்டிகையின் போதுதான் கிடைக்குது. தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா போன்ற உறவுகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் பண்டிகைகள் காலத்தில்தான் சந்திக்கிறோம். உறவுகள் சிதைந்து வரும் இன்றைய காலகட்டத்தில, பண்டிகைகள் மூலமா உறவுகளைப் புதுப்பிக்கிறோம். இது வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தைத் தருது.
ம.பாலமுருகன், 12ம் வகுப்பு
என்னைப் பொறுத்தவரை, பண்டிகைகள் கொண்டாடுவதன் முக்கியமான நோக்கம் நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வதுதான். இனிப்புகளைப் பரிமாறிக் கொள்வதும், விழாக்களைக் கொண்டாடுவதும் ரொம்ப உற்சாகமா இருக்கு. குறிப்பா, நம்முடைய கலாசாரத்தின் அருமை, பெருமைகளை உணரச் செய்யுது. இயற்கையை வணங்குவதும், நமக்கு மீறிய சக்தி என்பதை வழிபடுவதும் என்று பண்டிகைகள் இருந்தாலும் பண்டிகைகளோட அடிப்படையான விஷயம் அன்பு, நட்பு, உறவு, ஒற்றுமை இவற்றைப் பேணுவதுதான். எல்லோரும் அன்பாகவும், நட்புறவோடும் இருக்கணும் என்பதைத்தான் பண்டிகைகள் உணர்த்துது.
சி.சதிஷ், 12ம் வகுப்பு

