ஓர் ஊரில், ஒரு கஞ்சர் இருந்தார். மறந்தும் பிறருக்கு எந்த உதவியும் செய்துவிடமாட்டார். ஆனால், அவருடைய பெயர்மட்டும் கர்ணன்.
அவர் பிறந்தபோது, தங்கள் மகன் இப்படிக் கஞ்சனாக வளர்வான் என்று அவருடைய பெற்றோருக்குத் தெரிந்திருக்குமா? ஒருவேளை தெரிந்திருந்தால், இப்படிப் பெயர்சூட்டியிருக்க மாட்டார்கள் அல்லவா?
மனிதர்களுடைய பெயர்கள் பெரும்பாலும் காரணத்தோடு அமைவதில்லை. 'கண்ணாயிரம்' என்று பெயர் சூட்டப்பட்டவருக்கு, இரண்டு கண்கள்தான் இருக்கும், 'செந்தாமரை' என்ற பெயர்கொண்ட பெண், மாநிறத்தில் இருக்கலாம்.
ஆக, இந்தப் பெயர்களெல்லாம், அவர்களை அடையாளம் காண்பதற்காகச் சூட்டப்பட்டவை, அவ்வளவுதான்.
மாறாக, அவர்களுக்குத் தரப்படும் பட்டப் பெயர்களைப் பற்றிச் சிந்தியுங்கள். அவை காரணத்தோடு அமைந்திருக்கும்.
உதாரணமாக, 'குழந்தைக் கவிஞர்' அழ. வள்ளியப்பா என்கிறோம். இதில் 'குழந்தைக் கவிஞர்' என்ற பெயர், அவர் குழந்தைகளுக்காகப் பல பாடல்களை எழுதினார் என்பதைச் சுட்டுகிறது.
இதேபோல், 'மகாத்மா' காந்தி என்கிறோம். இதில் 'மகாத்மா' என்பது, அவர் ஒரு சிறந்த ஆத்மாவாகத் திகழ்ந்தார் என்பதைச் சுட்டுகிறது.
இலக்கணத்தில், 'மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி' என்பதை, இடுகுறிப்பெயர் என்பார்கள். அதாவது, இவரை இப்படிக் குறிப்பிடலாம் என்று இடப்பட்ட பெயர். இடு + குறி + பெயர் => இடுகுறிப்பெயர்.
ஆனால், 'மகாத்மா' என்பது இடுகுறிப்பெயர் அல்ல; அது காரணத்தோடு சூட்டப்பட்டது. ஆகவே, அது காரணப்பெயர்.
மனிதர்களின் பெயர்களுக்கு மட்டுமல்ல; பொருட்களின் பெயர்களையும் இவ்வாறு பிரித்துக் காணலாம். உதாரணமாக: கல் என்பது இடுகுறிப் பெயர்
செங்கல், கருங்கல் என்பவை, காரணப் பெயர்கள். ஏனெனில், அவை சிவப்பாக, கருப்பாக இருக்கின்ற காரணத்தால், அவற்றுக்கு இந்தப் பெயர் அமைந்துள்ளது.
தமிழில் பல பெயர்கள் காரணப் பெயர்களாக அமைந்துள்ளன. நாம் இடுகுறிப் பெயர் என்று நினைப்பவைகூட, பிரித்துப் பார்த்தால், ஆழமாகச் சிந்தித்தால், காரணப் பெயர்களாக மாறும்.
உதாரணமாக: 'கோவில்' என்ற சொல், கோ + இல் எனப் பிரியும். அரசனின் இல்லம், உலகை ஆளும் அரசனாகிய இறைவன் வசிக்குமிடம் என்பதால், அதனைக் 'கோவில்' என்கிறோம். இது காரணப் பெயர்.
'கட்டுமரம்' என்ற சொல், கட்டு + மரம் எனப் பிரியும். மரத்தைச் சேர்த்துக்கட்டி உருவாக்கப்படும் படகு என்பதால், அது 'கட்டுமரம்' ஆனது. இதுவும் காரணப் பெயர்.
இப்படிச் சொற்களைப் பிரித்து, வேர்ச்சொற்களையும் காரணங்களையும் அறிவது, ஒரு சுவையான பயிற்சி. நமது மொழிவளமும் அறிவும் மேம்பட அது உதவும்.
-என்.சொக்கன்

