PUBLISHED ON : மே 20, 2019

ஒரு புத்தகத்தை எடுத்தால் அதன் மேல்மூலையிலோ கீழ்மூலையிலோ பக்க எண்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். பன்னிரண்டாம் பக்கம் என்பதைக் குறிக்க அதன் மேல் மூலையில் 12 என்று எண்ணால் எழுதப்பட்டிருக்கும். நூறாண்டுகளுக்கு முந்திய தமிழ்ப்புத்தகம் எங்கேனும் கிடைத்தால் அதனை எடுத்துப் பாருங்கள்.
அப்புத்தகத்திலும் மேல் அல்லது கீழ் மூலையில் பக்க எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இன்றுள்ள எண்களைப்போல 1,2 என்று குறிப்பிடப்பட்டிருக்காது க,உ என்று இருக்கும். அதே போல் பன்னிரண்டு என்பது 'கஉ' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தக் 'கஉ' என்பதுதான் தமிழ் எண் வடிவமாகும்.
இன்றுள்ளவாறு எண்களை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்று எழுதும் முறை ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்வரை, தமிழ்நாட்டு வழக்கில் இல்லை.
நமக்குத் தமிழ் எண்கள் என்று தனியாகவே இருந்தன. காலப்போக்கில் கணக்கியல் அறிவானது உலகப்போக்குகளோடு பெரிதும் கொடுக்கல் வாங்கலுக்கு உட்பட்டது. அதனால் உலகம் ஏற்றுக்கொண்ட
1, 2, 3 என்று தொடங்கு எண் வழக்கினை நாமும் ஏற்றுக்கொண்டோம்.
1, 2, 3, என எண்களை எழுதும் முறைக்கு இந்திய - அரேபிய முறை என்று பெயர். ஒவ்வொரு தொன்மையான மொழிக்கும் தனியே எண் வடிவங்கள் இருந்தன.
இலத்தீன எண் முறை என்று ஒன்று உண்டு. சில கடிகாரங்களில்கூட அவற்றைப் பார்க்கலாம். வகுப்பு எண்களைக் குறிப்பிடவும் இலத்தீன் எண் வடிவங்களைப் பயன்படுத்துவார்கள். I, II, III, IV, V, VI, VII, VIII, IX, X, XI, XII என இலத்தீன் எண்கள் எழுதப்படும்.
தமிழ்மொழியிலும் தனித்த எண் வடிவ எழுத்துகள் இருந்தன. அவை நாம் மொழி எழுத்துகளை எவ்வாறு எழுதுகிறோமோ அவ்வடிவத்தினையே ஒத்து இருக்கும்.
தமிழ் எண்கள் எனப்படுபவை இவை :
1- க
2- உ
3- ங
4- ச
5- ரு
6- சா
7- எ
8- அ
9- கூ
தமிழ் எண்களுக்கும் எழுத்துகளுக்கும் வடிவத்தில் சிறு சிறு மாறுதல் உண்டு. எடுத்துக்காட்டாக, 3 என்பது 'ங' என்று எழுதப்படுவதைப்போன்றே இருக்கும். ஆனால், கடைசியாக மேல்நோக்கி இழுக்கும் கோடு இருக்காது.
நான்கு என்பதற்குச் 'ச' என்ற வடிவத்தின் ஈற்றில் மேல்நோக்கிய கோடு இருக்கும்.
ஆறாம் எண்ணாகிய 'சா' என்பதன் துணைக்கால் 'ச' என்ற எழுத்தை ஒட்டியவாறு பாதி உயரத்தில் காணப்படும். ஒன்பதைக் குறிக்கும் 'கூ' என்பது ஈற்றுக் கீற்றில்லாமல் இருக்கும்.
தமிழ் எண்களில் தனியே சுழியம் இல்லை. பிறகு அதனையும் ஏற்றனர். இதுவரை தமிழில் காணப்படும் கணக்கு அச்சு நூல்களில் 'கணித தீபிகை' என்ற நூல் கிடைத்திருக்கிறது. அதில்தான் தமிழ் எண்களோடு சுழியத்தைச் சேர்த்தார்கள். அதற்கு முன்பு வரை பத்து என்பதைக் குறிக்க 'ய' என்ற புதிய எண்ணைப் பயன்படுத்தினர்.
இருபது என்பதை எழுத உய (உ - 2, ய - 10) என்று எழுதினார்கள். 'உய' என்பது இரண்டு- பத்து என்ற பொருளைத் தரும். பிறகு சுழியம் சேர்க்கப்பட்ட பிறகு 'உ0' என்று எழுதத் தலைப்பட்டனர்.
தமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள ஒரு சொற்றொடர் உண்டு. அத்தொடரின் முதல் எழுத்துகள் ஒவ்வொன்றும் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண் வடிவங்களைக் குறிக்கும். “(1) கடுகு (2) உளுந்து (3) ஙனைச்சு (4) சமைச்சு (5) ருசிச்சு (6) சாப்பிட்டேன் (7) என்று (8) அவன் (9) கூறினான்.” இந்தத் தொடரினை மனப்பாடம் செய்துகொண்டால் எண் வடிவங்கள் மறவாமல் நினைவில் நிற்கும்.
- மகுடேசுவரன்

