PUBLISHED ON : மார் 05, 2018
ரோஜா, மல்லிகை, சாமந்தி -ஆகிய பூக்களைக்கொண்டு, இந்த மாலை தொடுக்கப்பட்டுள்ளது.
ரோஜா, மல்லிகை, சாமந்தி -போன்ற பூக்களைக்கொண்டு, இந்த மாலை தொடுக்கப்பட்டுள்ளது.
மேலுள்ள இரண்டு தொடர்களுக்கும் உள்ள வித்தியாசம் 'ஆகிய, போன்ற' என்னும் சொற்கள்.
முதல் தொடரில் 'ஆகிய' என்னும் சொல் வருகிறது. அதாவது- ரோஜா, மல்லிகை, சாமந்தி இந்த மூன்று பூக்களை மட்டும் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை என்பது பொருள். அதற்கு மேல் வேறு எந்தப் பூக்களும் இல்லை என்று உறுதிபடச் சொல்வதற்கு 'ஆகிய' பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவது தொடரில் 'போன்ற' என்னும் சொல் வருகிறது. அதாவது, -ரோஜா, மல்லிகை, சாமந்தி போன்ற மேலும் சில பூக்கள் இந்த மாலையில் தொடுக்கப்பட்டிருக்கின்றன என்று பொருள். அரளி, சம்பங்கி என மேலும் சில பூக்களும் அதில் இருக்கலாம் என்பதுதான் இதற்கான பொருள்.
ஒரு தொகுப்பில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களையும் எடுத்தாளும்போது, 'ஆகிய' பயன்படுத்தவேண்டும்.
ஒரு தொகுப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் கூறாமல் குறிப்பிட்டவற்றை மட்டும் சொல்லி வாக்கியத்தை அமைக்கும்போது, 'போன்ற' என்பதைப் பயன்படுத்தவேண்டும்.
'முதலிய' என்னும் சொல் எங்கு வரும்?
பலவற்றை வரிசையாகச் சொல்லும்போது, அனைத்தையும் சொல்லாமல், அவற்றில் முதலில் உள்ள ஒன்றிரண்டை மட்டும் சொல்வதற்கு 'முதலிய' பயன்படுகிறது. முதலிய என்பதற்கு இணையாக உள்ளிட்ட என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். அதற்கு மேலும் அந்த வரிசை நீள்கிறது என்று பொருள்.
பேருந்து, ரயில் முதலிய வாகனங்கள்...
குதிரை, நாய், பூனை முதலிய வீட்டு விலங்குகள்...
- நிலா அரசன்

