PUBLISHED ON : மே 09, 2016

பிரெஞ்சு இயற்பியலாளராகிய நான் பாரிஸில் பிறந்தேன். தந்தை ஒரு பொதுநல மருத்துவர். ஆரம்பக் கல்வியை, பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே அப்பாவிடம் கற்றேன். பல்கலைக்கழகத்தில் 16 வயதில் சேர்ந்து, 18 வயதில் பட்டம் பெற்றேன். சகோதரருடன் சேர்ந்து அழுத்த மின் விளைவை (Piezo Electric Effect) என் 21ஆவது வயதில் கண்டறிந்தேன். சார்போன் (Sorbonne) கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி, பின்பு அந்தக் கல்லூரியின் இயற்பியல் ஆய்வுக்கூடத்தின் தலைவரானேன். தொடர்ந்த ஆராய்ச்சிகளின் மூலம் 'பிசோ மின் குவார்ட்ஸ் மின்னோட்டமானி'யை உருவாக்கினேன். இந்தத் தத்துவம்தான் மைக்ரோபோன், குவார்ட்ஸ் கடிகாரங்கள், மின் கருவிகள் பலவற்றிலும் பயன்படுகிறது. அது மட்டும் இல்லாமல், காந்தப் பொருள்கள் வெப்பத்தால் மாற்றம் அடையும் என்று நான் கண்டறிந்த விதிமுறைதான் 'கியூரி விதி' என்று குறிப்பிடப்படுகிறது. அதிக வெப்ப நிலையில் இரும்புக் காந்தப் பொருள்கள் காந்தத் தன்மையை இழந்துவிடுகின்றன என்பதையும் கண்டறிந்தேன். இதுதான் 'கியூரி பாயின்ட்' எனப்படுகிறது. என் மனைவியுடன் இணைந்து ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டேன். நாங்கள்தான் கதிரியக்கம் (Radioactivity) என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினோம். கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததால் 1903ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றோம். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி வெளியேறும் துகள்களில் நேர் மின் தன்மை, எதிர் மின்தன்மை, நடுநிலைத் தன்மை இருப்பதைக் கண்டறிந்தேன். இவைதான் ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் எனப்படுகின்றன. என் மூத்த மகள் ஜோலியட் நோபல் பரிசு வென்றவள். அவரது கணவரும் நோபல் பரிசு வென்றவர்தான். இதனால் எங்கள் குடும்பம் 'நோபல் பரிசுக் குடும்பம்' என்ற புகழ்பெற்றது.
விடை: பியரி கியூரி
பிறப்பு: மே 15, 1859
மறைவு: ஏப்ரல் 19, 1906
