PUBLISHED ON : மே 09, 2016

கைவினையில் விலங்கு பொம்மைகள் செய்வது மகிழ்ச்சியான விஷயம். பாம்பு, நண்டு, கம்பளிப்பூச்சி மாதிரியான பயமுறுத்தும் பிராணிகள்கூடப் பொம்மை வடிவில் சாதுவாகத் தெரியும். இந்த வாரம் உல்லன் நூலில் ஆக்டோபஸ் செய்யலாம்.
தேவையான பொருட்கள்: சிறிய பந்து, உல்லன் நூல், சிறிய உறுதியான புத்தகம், கத்தரிக்கோல், கூக்ளி கண்கள் 2, பசை.
01. புத்தகத்தைச் சுற்றி, நூலை இறுக்கமாகச் சுற்ற வேண்டும். 84 சுற்றுகள் சுற்றிய பிறகு, புத்தகத்தில் இருந்து நூல் கற்றையைக் கவனமாகக் கழற்றி, நடு பகுதியில் கட்டிவிடுங்கள்.
02. முடிச்சுக்கு நேர் எதிரே, நூல்களை ஒரே சீராக வெட்டவும்.
03. முடிச்சுக்குப் பக்கத்தில் பந்தை வைத்துத் தலைப் பகுதி செய்து, இறுகக் கட்டிவிடவும்.
04. கீழே தொங்கும் நூல்களை கற்றைக்கு 21 நூல்கள் வீதம், 8 கற்றைகளாகப் பிரித்துக்கொள்ளவும்.
05. ஒவ்வொரு கற்றையையும் 7 நூல்கள் கொண்ட 3 சிறிய கற்றைகளாக மீண்டும் பிரிக்கவும். மூன்றையும் சடைப் பின்னலாகப் பின்னி, அடியில் நூலால் கட்டிவிடவும்.
06. தலைப்பகுதியில் கூக்ளி கண்களை ஒட்டிவிட்டால் கியூட் ஆக்டோபஸ் நம்மைப் பார்த்து கண்ணடிக்கத் தொடங்கிவிடும்!
ஓவியா டீச்சர்
