PUBLISHED ON : மே 09, 2016

சாந்தி: என்ன மஞ்சு, ஸ்கூல் போகும்போதுதான் சோகமா இருப்ப, இப்போ என்ன லீவுலயும் சோகமா இருக்குற.
மஞ்சு: சுத்தம் சோறு போட்டா, எது குழம்பு ஊத்தும்? எது பொரியல் வைக்கும்? நீ சொல்லு!
சா: நான்தான உன்னைக் குழப்புவேன். இப்போ நீ ஏன் என்னைக் குழப்புற? என்ன கொடுமை மஞ்சு இது?
ம: அது வந்து... என்னோட ரூம் சுத்தமா இல்லன்னு அம்மா திட்டுறாங்க. ஒரே குப்பையா இருக்குதாம்.
சா: சுத்தமா இருக்குறது நமக்குத்தான் நல்லது. அதான் சொல்லிருப்பாங்க. குறைஞ்சபட்சம் உன் கையைக் கழுவி சுத்தமா வச்சுக்கோ.
ம: பிரச்னைன்னு வந்தா நான் உன்னைக் கைகழுவிடுவேன்னு பேசிக்கறாங்களே... அதுக்கும் இதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?
சா: இன்னிக்கு ஒரு முடிவோட வந்திருக்கே போல!
ம: பின்ன! கை கழுவாமச் சாப்பிடுவேன்னு நெனைக்கிறயா. அதெல்லாம் இல்ல, நான் ரொம்ப சுத்தமா இருக்கேன்.
சா: அடிக்கடி காய்ச்சல், வயிற்றுப்போக்கு அப்படின்னு பல நோய்கள் கை கழுவாம இருக்குறதாலதான் வருதுன்னு உலக சுகாதார நிறுவனம் சொல்லுது.
ம: நீ சொல்ற மாதிரி அடிக்கடி கை கழுவுனா கை தேஞ்சி ரேகை எல்லாம் அழிஞ்சுடாதா?
சா: ஹி… ஹி... இப்பத்தான் பழைய மஞ்சு மாதிரி பேச ஆரம்பிச்சிருக்கே. தண்ணில லேசா கையை நனைச்சுட்டு கழுவிட்டேன்னு சொல்லிடக் கூடாது. புறங்கை, உள்ளங்கை எல்லாம் நல்லாத் தேய்ச்சுக் கழுவணும்.
ம: 'இப்போ பலபேரு ஸ்பூன் யூஸ் பண்றாங்களே... அப்புறம் ஏன் கை கழுவிட்டு சாப்பிடணும்'ன்னு கேள்வி கேட்டா என்ன பண்ணுவ?
சா: 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' ஆனா, நான் என்ன சொன்னாலும் உனக்கு சாதகமாத்தான் நீ பேசுவ.
ம: அப்படி இல்ல சாந்தி. நாம மட்டும் சுத்தமா இருந்து என்ன செய்ய? பொது இடத்துல எச்சில் துப்புறது, குப்பை போடுறது இப்டில்லாம் பண்ணாம இருந்தால்தானே சுத்தம் இருக்கும்.
சா: முதல்ல நாம சுத்தமா இருப்போம். அப்புறம் நம்மைச் சுத்தி இருக்குறவங்களுக்கும் சுத்தமா இருக்க கத்துக்கொடுப்போம்.
ம: ரைட். இப்பவே வீட்டுக்குப் போறேன். என்னோட சுத்தத்தைப் பாத்து அம்மா கிளீன் போல்ட் ஆகணும். நான் மிஸ். க்ளீன் அப்படின்னு பேரு வாங்கணும்.
