PUBLISHED ON : ஜூலை 04, 2016

தமிழ் மொழியை மிகவும் நேசித்தேன். அதனால், தனித் தமிழில் பேச முடியும் என்பதையும் பிற மொழிப் பெயர்களை அழகிய தமிழில் மாற்றிக்கொள்ளலாம் என்ற சிந்தனையையும் ஏற்படுத்தினேன்.
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் பிறந்தேன். தந்தையிடம் சமஸ்கிருதம் கற்றேன். மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழ் படித்தேன். மதுரை உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றேன். இளங்கலை பயில, ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் உதவித் தொகை பெற்று, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தேன். தமிழ் மொழி மற்றும் தத்துவத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றேன். படித்த கல்லூரியிலேயே தத்துவத் துறை ஆசிரியர் பணியை ஏற்காமல், குறைந்த சம்பளமாக இருந்தாலும் தமிழ்த் துறைப் பணியை விரும்பி ஏற்றேன்.
செந்தமிழ் நடையில் நான் பாடம் நடத்துவதால், பிற துறை மாணவர்களும் என் வகுப்புக்கு வந்து பாடம் கேட்பார்கள். தமிழ் ஆர்வம் கொண்ட மாணவர்களை இல்லத்துக்கு அழைத்துச் சென்று, சாத்திர நூல்களைக் கற்பித்தேன். சென்னை செந்தமிழ் உரைச் சங்கத்தை நிறுவி, கல்லூரித் தமிழ்ப் பாடங்களுக்கு உரை எழுதினேன்.
மதுரையில் 4ஆம் தமிழ்ச் சங்கம் நிறுவ முயற்சி மேற்கொண்டேன். அத்தோடு, குழந்தைகள் 12 வயது வரை தமிழில் கல்வி கற்பதை வலியுறுத்தினேன். எனது தமிழ்ப் புலமை, கவிபாடும் திறன் இவற்றைக் கண்டு 'திராவிட சாஸ்திரி' என்னும் பட்டத்தை, தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி, யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளை வழங்கினார்.
என் எதிர்ப்பால், பல்கலைக்கழக வகுப்புகளில் தமிழை விலக்கி சமஸ்கிருதத்தைக் கொண்டுவரும் முடிவு கைவிடப்பட்டது. நாவல், உரைநடை நாடகம், செய்யுள் நாடகம், கவிதை நூல், ஆய்வு நூல், நாடக இலக்கண நூல் என, பல நூல்களை எழுதியுள்ளேன்.
ஞானபோதினி, விவேகசிந்தாமணி ஆகிய இதழ்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'தமிழ் வியாசங்கள்' என்ற பெயரில் வெளியிட்டேன்.
நான் எழுதிய 'தனிப்பாசுரத் தொகை' நூலில், சூரியநாராயண சாஸ்திரியார் என்ற எனது வடமொழிப் பெயரை சுத்தத் தமிழில் மாற்றிக்கொண்டேன்.
சூரியநாராயண சாஸ்திரி என்ற பரிதிமாற் கலைஞர்
பிறப்பு: ஜூலை 6, 1870
மறைவு: நவம்பர் 2, 1903
