PUBLISHED ON : ஜூலை 04, 2016

நீண்ட தூரம் நடந்தாலோ, கடினமான வேலை செய்தாலோ நமக்கு வியர்த்து வழியும். நம் உடலின் வெப்ப நிலையில் மாற்றம் நிகழ்வதால் வியர்வை சுரக்கிறது. அதை விடுங்கள்... பள்ளியில் ஆசிரியர் கேள்வி கேட்கும்போது சிலருக்கு வியர்க்கிறதே... பேய்ப்படம் பார்க்கும்போது வியர்ப்பது போல் இருக்கிறதே... ஏன்? அதிர்ச்சிக்கும் உணர்ச்சிக்கும் உள்ளாகும்போதும் வியர்ப்பது ஏன்?
நம் தோலில் நுண்ணிய வியர்வைச் சுரப்பிகள் (ஸ்வெட் கிளாண்ட்ஸ் - Sweat Glands) இருக்கின்றன. இவை உடலில் பல மில்லியன்கள் உள்ளன. இவற்றின் மூலமாகத்தான் நம் உடலில் வியர்வை ஏற்படுகிறது. உடல் வெப்ப நிலையைச் சீராக வைத்துக்கொள்வது வியர்வைதான். உடலில் வெவ்வேறு வகையான வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. இச்சுரப்பிகள் மனித உணர்ச்சிகளின் தூண்டுதல்களுக்கு (ஸ்டிமுலி - Stimuli) உட்படக்கூடியவை.
* 'எக்ரைன்' (Eccrine) வியர்வைச் சுரப்பிகள் மனித உடல் முழுதும் இருக்கின்றன. உடலின் வெப்ப நிலைக்குத் தகுந்தவாறு மிகுதியாகவோ, குறைவாகவோ வியர்வையை வெளியேற்றுகின்றன. நடக்கும்போதும், கடின வேலைகளின் போதும் வியர்வை சுரக்க இவையே காரணம்.
* 'செபாஷியஸ்' (Sebaceous) வியர்வைச் சுரப்பிகள் உள்ளங்கை, கால் தவிர பிற எல்லா இடங்களிலும் உள்ளன. தலையில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் 'சீபம்' (Sebum) எனும் எண்ணெய்த் திரவத்தைச் சுரக்கின்றன. இதற்கு, தண்ணீரை உள்நுழைய விடாத தன்மை இருக்கிறது. இதன் மூலம் தலையில் ஏற்படும் காயத்தை, கிருமிகள் அண்டாத வகையில் இந்தச் சுரப்பிகள் பார்த்துக்கொள்கின்றன.
* 'அபோக்ரைன்' (Apocrine) வியர்வைச் சுரப்பிகள் கழுத்து, நெற்றி, அக்குள், தொடையிடுக்கு ஆகிய உடற்பகுதிகளில் அமைந்திருப்பவை. இச்சுரப்பிகள் பதற்றம், பயம், கோபம் முதலிய தீவிரமான உணர்ச்சிகளுக்கு உட்பட்டு, வியர்வையை வெளிக்கொணர்பவை. நாம் அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த உணர்ச்சிக்கும் ஆட்படும்போது இச்சுரப்பிகள் வியர்வையைச் சுரக்கும். மழை நாட்களிலும், குளிர்காலத்திலும் கூட நமக்கு வியர்ப்பதற்குக் காரணம் இதுவே.
