PUBLISHED ON : ஜூலை 04, 2016

எல்லோருக்கும் பிடித்தது குச்சி ஐஸ்! குச்சி ஐஸைக் கண்டுபிடித்தது ஒரு சிறுவன்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? கலிபோர்னியாவின் ஓக்லாண்டில் வசித்த ஃபிராங்க் எப்பர்சன் (Frank Epperson) என்ற 11 வயது சிறுவன்தான் அந்த விஞ்ஞானி! ஒரு குளிர்கால மாலை நேரம். ஃப்ராங்க் குடிப்பதற்காக தனக்குக் கொடுக்கப்பட் இனிப்பு கலந்த குளிர்பான டம்ளரை, அதை கலக்கக் கொடுத்த குச்சியுடன் மறந்து வீட்டின் வெளியே வைத்து விடுகிறான். மறுநாள் காலையில் பார்த்தால் அந்த டம்ளரில் இருந்த பானம் ஐஸாக மாறியிருந்தது. சாப்பிட்டுப் பார்த்ததில் சுவையாகவும் இருந்தது. இது நடந்தது 1905ஆம் வருடம்!
அதன் பிறகு அதைப் போல வெவ்வேறு ருசிகளில் செய்துபார்த்தான். நண்பர்களிடம் சாப்பிடக் கொடுத்தான். பல சோதனைகளைச் செய்து குச்சி ஐஸை நண்பர்களிடையே பிரபலப்படுத்திய ஃபிராங்க், பதினேழு வருடங்களுக்குப் பின்னர் 1923ல் தனது கண்டுபிடிப்பிற்கு 'குச்சியில் உறைந்த ஐஸ் (Frozen Ice on a Stick)' என்ற பெயரில் காப்புரிமை பெற்றார். அதை 'எப்சிகிள்' (Epsicle) எனப் பெயரிட்டு அழைத்த அவர், பின்னர் பல்வேறு சுவை, நிறம், மணங்களில் விதம் விதமாக ருசியான குச்சி ஐஸ்களை உருவாக்கினார். பின்னர் 'பாப்சிகிள் கார்ப்பரேஷன்' (Popsicle Corporation) என்ற பெயரில் அவற்றை சந்தைப்படுத்தினார். ஆரம்பித்த ஓரிரு வருடங்களிலேயே 'பாப்சிகிள்' (Popsicle), 60 மில்லியன் டாலர் அளவிற்கும் மேலாக விற்பனையாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்று உலகம் முழுவதும் பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது, குச்சி ஐஸ். இது ஒரு சிறுவனின் சிந்தனையில் உதித்த எண்ணம் என்பது நமக்கெல்லாம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க உற்சாகம் தருகிற செய்திதானே!
