PUBLISHED ON : செப் 19, 2016

உலகிற்கு வெளிச்சம் தந்த நான் லண்டனில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். அப்பா ஒரு கொல்லர். இளம் வயதிலிருந்தே எனது படிப்புக்கு ஆகும் செலவுக்காக நான் வேலை பார்க்கவேண்டி இருந்தது. ஆகவே, பழைய புத்தகங்கள் வாங்கி, பைண்டிங் செய்து விற்று வந்தவரிடம் உதவியாளராக 14 வயதில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே வேலை பார்த்த 7 வருடங்களில் ஏறக்குறைய எல்லாப் புத்தகங்களையும் படித்திருப்பேன். இதனால், அறிவியலில் குறிப்பாக மின்னியலில் அதிக ஆர்வம் வளர்ந்தது.
அப்போது எனக்கு 20 வயது இருக்கும், புகழ்பெற்ற வேதியியல் மற்றும் இயற்பியலாளரான ஹம்ப்ரி டேவியின் விரிவுரைகளைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது எழுதிய குறிப்புகளை டேவிக்கு அனுப்பிவைத்து, உதவியாளராக என்னைச் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டேன். சில நாட்கள் கழித்து, ஒரு வேதியியல் சோதனையின்போது டேவி தனது கண் பார்வையை இழந்தபோது அவருடைய உதவியாளராகச் சேர்ந்துகொண்டேன்.
மின்சாரத்தைக் கண்டுபிடிக்க எனக்கு முன்பாகப் பலர் பல முயற்சிகளைச் செய்துள்ளார்கள். ஆனால், 1831ஆம் ஆண்டு மின்சாரம் பற்றி நான் செய்த ஆய்வுகள் மற்ற ஆய்வுகளை விட மேம்பட்டதாக இருந்தது. ஏதோ ஒரு இடத்தில் ஷாக் அடிக்கிறதே அங்கு என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்தேன். மின்சாரத்தைக் கம்பி வழியே அனுப்பும்போது, பக்கத்தில் இருக்கும் திசைகாட்டிக் காந்தம் திரும்பியது. இதைவைத்து, காந்தத்தின் மூலமும் மின்சாரத்தை இயக்க முடியும் என்பதைக் கண்டறிந்தேன்.
அதன்பிறகு, 25 ஆண்டுகள் கழித்தே சீமென்ஸ் என்ற விஞ்ஞானி மின்சாரத்தை உற்பத்தி
செய்யும் கருவியைக் கண்டறிந்தார். அதற்கும்,
23 ஆண்டுகளுக்குப் பிறகே தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்குகளைக் கண்டுபிடித்தார். மின்சாரம், மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கருவி, மின்சாரத்தால் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்ற இந்த மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாகக் கண்டறியப்படுவதற்கு ஏறத்தாழ 50 ஆண்டுகள் தேவைப்பட்டன!
எனது ஆய்வுகள் அனைத்தும் மின்சாரம், காந்தம் தொடர்புடையவையாகவே இருந்தன. 'எலக்ட்ரோ மேக்னட் துறையின் தந்தை' என்றும் அழைக்கப்பட்டேன். எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும் சாதித்தேன். தற்போது உலகம் முழுவதும் உள்ள சோதனைச் சாலைகளில் பொருட்களைச் சூடாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுவரும் புன்சன் சுடர் அடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டறிந்ததும் நான்தான்.
பல அவமானங்களைக் கண்டு தளராமல் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது புத்திக்கூர்மையும் மேதைமையும் விடா முயற்சியும்தான் என்னைப் புகழ்பெற்றவராக ஆக்கின. பாதியிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தி இருந்தாலும் நான் கண்டுபிடித்த விஷயங்கள், ஆய்வுகளின் பலன்களை உலக மக்கள் இன்று அன்றாடம் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதுதான் மகிழ்ச்சியான விஷயம்!
மைக்கேல் ஃபாரடே
பிறப்பு: செப்டம்பர் 22, 1791
மறைவு: ஆகஸ்ட் 25, 1867
