PUBLISHED ON : அக் 03, 2016

கடலில் படகுகள், கப்பல்கள் போன்ற மிதவைகள், மிதந்து செல்வதைப் பார்க்கும்போது, 'அடடா! மனிதர்களாகிய நாம், அறிவியல் அறிவைப் பயன்படுத்தி எவ்வளவு பெரிய படைப்பை உருவாக்கி இருக்கிறோம்!' என்று நினைக்கலாம். உலகில், சுமார் 8 லட்சம் வருடங்களுக்கு முன்னரே, மிதவைகள் பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
நாம் எல்லாம் நவீன மனிதர்கள். நாம் தோன்றி இரண்டு லட்சம் வருடங்கள்தான் ஆகின்றன. அப்போது இந்த மிதவைகளை வேறு எந்த உயிரினம் பயன்படுத்தி இருக்கும்? என்ற கேள்வி எழும்.
ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens) எனப்படும், நமது நவீன மனித இனம் தோன்றுவதற்கு முன்னர், நியன்டார்தால் மனிதன் (Neanderthal Man),ஹோமோ எரெக்டஸ் (Homo Erectus)போன்ற மனித இனங்கள் பூமியில் வாழ்ந்து இருக்கின்றன. அவற்றில் ஹோமோ எரெக்டஸ்கள் எட்டு லட்சம் வருடங்களுக்கு முன்னர், ஆப்பிரிக்கப் பகுதியில் இருந்து இந்தோனேஷியப் பகுதிக்கு இடம் பெயரத்தொடங்கின. நிலவழியாகப் பயணித்து இவற்றால் இந்தோனேஷியாவின் பாலி வரை மட்டுமே வந்திருக்க முடியும். பாலியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ஃப்ளோர்ஸ் (Flores)எனும் தீவு இருக்கிறது. இங்கு இந்த ஹோமோ எரெக்டஸ்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் இருக்கின்றன. மிதவைகள் இன்றி இந்தத் தீவுக்கு வருவது சாத்தியமே கிடையாது. ஆகையால், ஹோமோ எரெக்டஸ்கள் மிதவைகளை வடிவமைத்தே இந்தத் தீவுக்கு சென்றிருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
மூங்கில் அல்லது மரக்கட்டைகளைப் பிணைத்தோ, அல்லது ஒரு நீளமான மரத்தைக் குடைந்தோ இந்த மிதவைகளைச் செய்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
