
ஆங்கிலப் பெயர்: ஃபாரஸ்ட் வக்டெய்ல் (Forest wagtail)
உயிரியல் பெயர்: டெண்ட்ரோனன்தஸ் இண்டிகஸ் (Dendronanthus indicus)
குடும்பம்: மோட்டாசில்லிடே (Motacillidae)
அளவு: 18 செ.மீ.
காணப்படும்இடங்கள்: வடகிழக்கு இந்தியா, தென்மேற்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம்
வாழிடம்: வெப்பமண்டல மழைக்காடுகள்
குளிர்காலத்தில் வலசை வரும் பல பறவைகளுள் ஒன்று, காட்டு வாலாட்டி. இந்த வகைப் பறவை பெரும்பாலும் நீர்நிலைகளில் வாழாது. வெப்ப மண்டல மழைக்காடுகளைத் தேர்வு செய்யும் இவை, அலையாத்திக் காடுகளில் இருக்கும். அதேபோல், காப்பி, ஏலக்காய் தோட்டங்களிலும் காணப்படும். காட்டு வாலாட்டியைத் தவிர மற்ற எல்லா வகை வாலாட்டிகளும் அதன் வாலை எப்போதும் மேலும் கீழுமாக ஆட்டும். ஆனால், காட்டு வாலாட்டியோ அதன் வாலை ஒருபக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்கு ஆட்டும். அப்படி வால் ஆடும்போது, அதன் முழு உடலும், வாலோடு சேர்ந்து ஆடும்; இதில் ஒரு முக்கிய விசித்திரம் என்ன என்றால், அதன் தலை மட்டும் ஆடாது.
ஆண், பெண் பாலினத்தில் வித்தியாசம் இருக்காது. இதன் முதுகுப் பகுதி,ஆலிவ் பழுப்பு நிறத்தில் இருக்கும்; வயிற்றுப்பகுதி வெளிர் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் காணப்படும். இதன் இறக்கைகளில் வெளிர் பட்டைகள் இருக்கும், தொண்டையில் பிறை வடிவில் கருப்புத் திட்டுகளைக் காண முடியும். இதன் இறக்கைகள் மூலம் இந்தப் பறவையை எளிதில் அடையாளம் காண முடியும். இவை செடிகள், தரையில் விழும் இலைகளுக்கு அடியில் இருக்கும் புழுக்களை உண்ணும்.

