
மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. பாதாளச் சாக்கடையின் கழிவுநீர் கடலில் கலந்தால் அது மாசுபடும். அதுபோல வேறு என்ன பிரச்னைகள் இதில் உண்டு?
எஸ்.இஷ்வா, 6ஆம் வகுப்பு, கே.எம்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி, நாகமலை, மதுரை.
கடல் பெரியது என்பதால், கழிவுநீர் கலப்பதால் அவ்வளவு ஆபத்து இல்லை என்று பலர் கருதினர். நீர் மாசுபடுதல், நீர் வாழ் உயிரினங்கள் அழிதல் போன்ற பாதிப்புகள் கடலிலும் ஏற்படுகின்றன என்பதை சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
எவ்வித சுத்திகரிப்புமின்றி நேரிடையாக சாக்கடை நீர் கடலில் கலப்பதால், கடல் நிறம் மாறுவதைப் பல்வேறு இடங்களில் காணலாம். சாக்கடை நீரில் உள்ள தாதுக்கள் கலந்து, கடல் நீரில் ஊட்டம் நிறைதல் வினை ஏற்படும். இதன் காரணமாக, பைட்டோ பிளாங்டான் (Phyto Plankton) போன்ற பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள் அளவுக்கு அதிகமாக வளரும். இதனால், அந்தக் கடலில் உள்ள வேறு உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். சாக்கடை நீரில் உள்ள கிருமிகள் பாதித்து, கடல் வாழ் உயிரினங்களுக்கு உடல்நலம் கெடும்.
நுண் பிளாஸ்டிக் துகள்களைச் சிறிய மீன்கள் விழுங்கிவிடும். பல்வேறு சிறிய மீன்களைப் பிடித்து உண்ணும் பெரிய மீனின் உடலில் நுண்பிளாஸ்டிக் துகள் செறிவு கூடும். இதன் தொடர்ச்சியாக, நாம் உண்ணும் மீனும் ஆபத்தானதாக மாறிவிடும்.
2. நடக்கும்போது நம் கைகள் தாமாக அசைவது ஏன்?
தேஜஸ்வினி, 8ஆம் வகுப்பு, விஸ்வேஷ்வரா மெட்ரிகுலேசன் பள்ளி, ஊத்துக்கோட்டை.
வலது காலை முன் வைக்கும்போது இடது கையும், இடது காலை முன் வைக்கும்போது வலது கையும் முன்னே செல்கிறது. நாலு காலில் நடக்கும் விலங்குகளின் நடக்கும் பாணியிலும் இதைக் காணலாம். இதைப் பரிணாமத்தின் மிச்சம் என சிலர் கூறுகின்றனர்.
கை அசைத்துச் செல்வது புவியீர்ப்பு மைய உயரம் கூடாமல் இருக்க உதவுகிறது. நடக்கும்போது, உடலை முன்னே கொண்டு செல்கிறோம். அதில் ஒரு சுழல் இயக்கம் உள்ளது. இதனால் ஏற்படும் சுழல் உந்தத்தைக் குறைக்க இது உதவுகிறது. சுழல் உந்தம் கூடுதலாக இருந்தால், முன்னே கவிழ்ந்து விழுந்துவிடுவோம். தரையில் கால் பதித்து விசை செலுத்தும்போது, நியூட்டனின் மூன்றாம் விதியின்படி, நிலம் நம் மீது எதிர்த் திசையில் விசையைச் செலுத்துகிறது. அதன் காரணமாக, உடல் எழும்பி உயர்கிறது. அதன் தொடர்ச்சியாகவே நம்மால் நடக்க முடிகிறது. இதெல்லாம் ஒரு காலத்தில் இருந்த கற்பனை விளக்கங்கள்.
மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வின்படி, மேலே கூறிய எந்த விளக்கமும் சரியல்ல. கால் செல்லும் திசைக்கு எதிர் திசையில் கையை அசைத்து நடப்பதன் விளைவாக, குறைவான ஆற்றலில் நடக்கிறோம் என கண்டுபிடித்துள்ளனர்.
கால் செல்லும் திசைக்கு எதிர் திசையில் கையை ஆட்டி நடத்தல், உடலோடு இறுக்கிக் கட்டி கையை ஆட்டாமல் நடத்தல், விரைப்பாக பக்கவாட்டில் வைத்தபடி நடத்தல், கால் செல்லும் திசையில் கையை ஆட்டி இயல்புக்கு மாறாக நடத்தல் என, நான்கு நிலைகளில் ஆராய்ச்சி செய்தனர்.
சாதாரணமாக நடக்கும்போது குறைவான ஆற்றலும், இயல்புக்கு எதிர் திசையில் கையை அசைத்து நடக்கும்போது கூடுதல் ஆற்றலும் செலவாகிறது என அந்த ஆய்வு கூறியது.
3. டிசம்பர் 26, 2019 அன்று நிகழ்ந்த சூரியகிரகணத்தின்போது, மர இலைகளின் நிழல் விநோதமாக விழுந்ததற்கான காரணம் என்ன?
இ.அம்பிகா, 11ஆம் வகுப்பு, பெ.சி.சிதம்பரம் ஆங்கில மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
எங்கெல்லாம் வளைய வடிவில் சூரிய கிரகணம் தென்பட்டதோ, அங்கெல்லாம் வளையம்போல நிழல் ஒளியும் ஏற்பட்டது. இதற்குப் பின்னணியில் உள்ளது ஊசித்துளை கேமரா தத்துவம் தான்.
அட்டைப் பெட்டியை எடுத்து, அதன் எல்லா பக்கமும் பேப்பர் கொண்டு ஒட்டிவிடுங்கள். ஒரு பக்கத்தில் சிறிய ஊசியால் துளையிடவும். இந்தத் துளை வழியே ஒளிக்கற்றைகள் பெட்டிக்குள் செல்லும். துளையிடப்பட்ட பக்கத்துக்கு எதிர்ப்பக்கத்தில் உள்ள அட்டையை வெட்டி எடுத்துவிடுங்கள். அந்தப் பகுதியில் பட்டர் பேப்பர் போன்ற மெல்லிய வெள்ளைத் தாளில் எண்ணெய் தடவி ஒட்டவும். இது தான் திரை.
பெட்டியை ஒரு மேஜை மீது வைத்து, துளை உள்ள பகுதிக்கு சற்றே தொலைவில் மெழுகுவத்தியை ஏற்றவும். அட்டைப் பெட்டியை மெழுகுவத்திக்கு அருகிலும் தொலைவிலும் நகர்த்திச் சரிசெய்து பார்க்கவும். ஒளியின் நேர்கோட்டு இயக்கம் காரணமாக, அந்தப் பேப்பர் திரையில் தலைகீழாக மெழுகுவத்தி தென்படும். இவ்வாறே கிரகணத்தின்போது, நிலா மறைத்து சூரியன் பிறையாகக் காட்சி தரும் உருவம் நிலத்தில் விழுந்தது.
4. குளிரில் உருகும் பொருட்கள் ஏதேனும் உண்டா?
காவ்ய சுதா, 12ஆம் வகுப்பு, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை.
எது குளிர்? பூஜ்ஜியம் டிகிரிக்கு குறைவான வெப்பநிலையைக் குளிர் என்று ஏற்றுக்கொண்டால், பல தனிமங்களின் உருகு வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கும் குறைவு. எடுத்துக்காட்டாக, இயல்புநிலையில் திரவ வடிவில் இருக்கும் பாதரசம், மைனஸ் 39 டிகிரி வெப்பநிலையில் உருகிவிடும். அதற்கும் குறைவான வெப்பநிலையில், திட நிலையில் இருக்கும். அதேபோல மைனஸ் 218 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் திடமாக இருக்கும் ஆக்சிஜன், அந்த வெப்பநிலையில் உருகும். கார்பன் உருகி திரவ நிலையை அடைய 3,500 டிகிரி அளவுக்குக் கடும்வெப்பம் தேவை.
திட நிலையில் உள்ள பொருட்கள் திரவ நிலைக்கு வருவதை, உருகுதல் என்கிறோம். வெப்பம் கூடுவதால், திடநிலைப் பொருட்களின் அணுக்கள் இடையே இடைவெளி கூடுவதையே இப்படிச் சொல்கிறோம்.

