PUBLISHED ON : டிச 26, 2016

கூவல் என்பதை, கோழி கூவுவதாக நினைக்க வேண்டாம். கூவல் என்பது, கிணற்றை குறிக்கும். கிணற்றுக்கு, அசும்பு, உறவி, குழி, கூபம், கேணி, பூவல், வாவி, துரவு என்ற பெயர்களும் உள்ளன.
நீர் நிலைகளைப் பற்றி அறியும் நூல், கூவ நூல் என்று அழைக்கப்படுகிறது.
'வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி' (நற்றிணை)
எனும் பாடலில், காட்டிடையே பயணம் போவோர், கூவல், நீரைப் பருகிச் செல்வர் என்கிறது.
'பூவற்படுவில் கூவல் தோண்டிய
செங்கண் சில் நீர் பெய்த சீறில்'
என்பது (319) புறநானூற்றுப் பாடல். வறண்ட நிலத்தில் வாழ்ந்தவர்கள், கூவல் தோண்டி நீர் எடுத்துள்ளனர். அந்த நீரை மண் பானையில் இட்டு, கடுக்காய் முதலியவற்றைப் போட்டு தெளிய வைத்து, குடிநீராக பயன்படுத்தி இருக்கிறார்கள். கூவல் என்ற பொருள் வரும்படியான பாடல்கள், சங்க இலக்கியங்களில் உள்ளன.
'தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு' என்னும் குறளில், கேணி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
'வாவியுறை நீரும் வடநிழலும்' என்பது நீதிவெண்பா. வட நிழல் என்பது, ஆலமரத்து நிழலைக் குறிக்கும்.
'வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பு' என்று கிணற்றடியில் வளர்ந்த வாழை மரங்களை குறிப்பிடுகிறது. அகநானூறு (அகம் 8).
'கூபர முழங்கை 'கூபம்' கூவலென்றரையலாமே' என்ற சிந்தாமணி நிகண்டு பாடலில் (175) கிணறு, கூபம் என்ற சொல்லில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
'நீரில்லா கிணறு இருந்தென்ன?'
என்னும் சித்தர் பாடல், நீரற்ற கிணறு இருந்து பயனில்லை என்கிறது. அந்தக் காலத்தில் எதிரிகளின் படையெடுப்பு அதிகம். படை எடுத்து வருவோர் கோயிலில் இருக்கும் சிலைகளை சேதப்படுத்தி, ஆபரணங்களை கவர்ந்து செல்வர்.
அவர்களிடமிருந்து சிலைகளை பாதுகாக்க, நீர் நிறைந்த கிணற்றுக்குள் போட்டு பாதுகாத்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. எதிரிகள் சென்றபின் அவற்றை எடுத்து வழிபாடு நடத்தி உள்ளனர்.