
டிசம்பர் 26, 1791: சார்லஸ் பாபேஜ் பிறந்த நாள்
கணினியின் தந்தை. நவீன கணினிகளின் முன்னோடியான எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தார். கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்து, 'பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை உருவாக்கினார்.
டிசம்பர் 26, 1893: மா சே துங் பிறந்த நாள்
சீன வல்லரசின் சிற்பியாகப் போற்றப்படுகிறார். இவரது ஆட்சிக் காலத்தில், தொழில்மயமாக்கல், கல்வி வளர்ச்சி, விவசாயம், பொது சுகாதாரம் ஆகியவற்றில், சீனா முன்னேற்றம் கண்டது. அரசியல் பொருளாதாரப் புரட்சி மட்டுமின்றி சமூகப் புரட்சியையும் தூண்டினார்.
டிசம்பர் 27, 1822: லூயி பாஸ்டர் பிறந்த நாள்
நுண்ணுயிரியலின் தந்தை. பாலை புளிக்கச் செய்வது ஒருவகை பாக்டீரியா என்று நிரூபித்தார். உணவுப் பொருளை பதப்படுத்தும் முறை, அவரது பெயரால் 'பாஸ்ச்சரைசேஷன்' என்று அழைக்கப்படுகிறது. வெறிநாய் கடியால் உண்டாகும் ரேபிஸ் நோய்க்கு, தடுப்பு மருந்தைக் கண்டறிந்தார்.
டிசம்பர் 28, 1932: திருபாய் அம்பானி பிறந்த நாள்
இந்திய நவீனத் தொழில்துறையின் முன்னோடி. மும்பையில் ஒரு துணி வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் நிறுவனத்தை உருவாக்கியவர். 2000ம் ஆண்டில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட பட்டியலில், சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனவரி 1, 1894: சத்யேந்திர நாத் போஸ் பிறந்த நாள்
இயற்பியலில் குவாண்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ் எனும் துறையை உருவாக்கினார். அண்ட வெடிப்புக்குக் காரணமான துகளைக் கண்டறியும் ஆய்வான, 'ஹிக்ஸ் போஸான்' என்ற பெயரில் இருக்கும் 'போஸான்' என்பது இவரின் நினைவாக சூட்டப்பட்டது. பத்ம விபூஷண் விருது பெற்றிருக்கிறார்.
ஜனவரி 1, 1582: ஆங்கில புத்தாண்டு நாள்
கிரிகோரியன் நாட்காட்டி, உலக அளவில் பயன்படுத்தப்படும் நாட்காட்டி. இது ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புத்தாண்டு, ஜனவரி முதல் தேதி தொடங்குகிறது. இந்தப் புத்தாண்டு நாள்தான் உலகில் அதிகமாகக் கொண்டாடப்படும் பொது விடுமுறை நாளாகும்.