PUBLISHED ON : அக் 09, 2023

பொதுவாக, சாக்குப் பைகள் சணலால் பின்னப்பட்டு இருக்கும். ஆனால், இவை எப்பொழுது பல வண்ணங்களில் வெளிவரத் தொடங்கின எனத் தெரியுமா? இதற்கும் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு.
1929ஆம் ஆண்டு, உலகம் முழுக்க பொருளாதார பெருமந்த நிலை ஏற்பட்டது. அப்போது, பணத்திற்குத் தடுமாறிய அமெரிக்க மக்கள் உணவுப் பொருட்கள் வரும் சாக்குப் பைகளிலிருந்து ஆடைகளைத் தயாரிக்கத் தொடங்கினர். மாவுப் பொருட்களை கொண்டு வரும் சாக்குப் பைகளிலிருந்தும், உருளைக்கிழங்கைக் கொண்டு வரும் சாக்குப் பைகளிலிருந்தும் ஆடைகள் தயாரிக்கத் தொடங்கினர்.அனைத்து சாக்குப் பைகளையும் ஆடைகளாக மாற்றி உடுக்கத் தொடங்கினர். இதனால், உணவுப்பொருள் விநியோகஸ்தர்கள், மக்கள் கொஞ்சம் நாகரிகமாக இருக்க உதவும் வகையில், தங்கள் சாக்குப் பைகளை அழகான, கெட்டியான, துணிச் சாக்குகளாக விற்கத்தொடங்கினர். அப்பொழுது முதல் சாக்குகளும் வண்ணயமயமாகத் தொடங்கின. நம்மூரிலும் தாத்தா, பாட்டி காலத்தில், சாக்குகளை மழைக்காலங்களில் குடைக்கு மாற்றாகப் பயன்படுத்தினர்.
