தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பிளஸ் 1 பொதுத் தேர்வு தேவையா?

பிளஸ் 1 பொதுத் தேர்வு தேவையா?

பிளஸ் 1 பொதுத் தேர்வு தேவையா?


PUBLISHED ON : ஜூன் 05, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இனி, பிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு கட்டாயம். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள். மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்? சென்னை, வில்லிவாக்கம் என்.எஸ்.பி. வித்யா பீடம் பள்ளியின் மாணவர்களிடம் கேட்டோம்:

தீக் ஷிதா:

பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு வைப்பது சரியானதுதான். இதுக்கு முக்கியக் காரணம் தற்போதுள்ள மருத்துவத் தேர்வு. 'நீட்' தேர்வில் அறுபது சதவீதம் கேள்விகள் பிளஸ் 1 பாடத்திட்டத்தில இருந்து கேட்கப்படுகிறது. பத்தாவது முடிச்சதும், ஒரு விளையாட்டு மனநிலை வந்துடும். இதோட பிளஸ் 2 தான், அதுவரை ஃப்ரீயா இருக்கலாம்னு சிலர் நினைப்பாங்க. பிளஸ் 1 பாடங்களை பொதுத்தேர்வுக்காக படிக்கிறபோது, பொறுப்புணர்வு அதிகமாகும். பிளஸ் 2 பாடங்கள் படிக்கறப்ப, எளிதா இருக்கும். பிளஸ் 2 தேர்வுக்கான நெருக்கடி குறையும். ஒரேயடியா பிளஸ் 2ல் அழுத்தம் கொடுக்காம, கொஞ்சம் பளுவை குறைக்கறதால பிளஸ் 1 பொதுத்தேர்வு நல்லது.

அஸ்வின் குமார்:

பிளஸ் 1 பொதுத்தேர்வு என்ற முடிவு சரியானதுதான். கல்லூரி படிப்புக்கு பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்களில் உள்ள பாடங்கள்தான் அடிப்படையா இருக்கு. பிளஸ் 1 பாடங்களை படிக்காமலே போறதால கல்லூரியில் மீண்டும் அடிப்படையான பாடங்களைப் படிக்க வேண்டிய தேவை இருக்கு. மேலும் பல நுழைவுத் தேர்வுகளில் பிளஸ் 1 பாடங்கள்தான் அடிப்படை.

சுவலஷ்மி:

பெரும்பாலான பள்ளிகளில், பிளஸ் 1ல், பிளஸ் 2வுக்கான பாடங்களைத்தான் நடத்தறாங்க. அப்படியே பிளஸ் 1 பாடங்களை நடத்தினாலும், முதல் மூணு மாசத்துல முடிச்சுடறாங்க. மாணவர்களும் பிளஸ் 2 தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை மட்டும்தான் படிக்கறாங்க. இதைச் சரி செய்யறதுக்காக, பிளஸ் 1ல் பொதுத்தேர்வு வைக்கறது, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கூடுதல் மன அழுத்தத்தைக் கொடுக்கும். அதைவிட பள்ளிகளில் பிளஸ் 1 பாடங்களை முறையா எடுக்கணும்னு உத்தரவு போட்டு அதை நடைமுறைப்படுத்தலாம்.

விக்னேஷ்வர்:

பிளஸ் 1ல் பொதுத்தேர்வு தேவையில்லை. பத்தாவது, பிளஸ் 1, பிளஸ் 2ன்னு தொடர்ந்து மூணு வருஷம் பொதுத்தேர்வு எழுதணும்னா மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்னு எல்லாருமே கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாவாங்க. புற்றீசல் போல நிறைய டியூஷன் சென்டர்கள் பெருகிவிடும். கல்வி தரமில்லாததாக ஆகி, பாடங்களை உள்வாங்கிப் படிக்காம, அவசர அவசரமா மனப்பாடம் பண்ணி எழுதற நிலைமைக்கு மாணவர்கள் தள்ளப்படுவாங்க. மதிப்பெண்களுக்காகத்தான் கல்வி என்ற நிலை வந்துடும்.

ரேவதி ரேஷ்மா:

பிளஸ் 1ல் பொதுத்தேர்வு தேவையில்லை. இதற்குப் பதிலாக பாடத்திட்டத்தை மறு சீரமைப்பு செய்து, பிளஸ் 1க்குத் தேவையான முக்கியமான அடிப்படைப் பாடங்களை, பள்ளிகள் கட்டாயம் நடத்தும்படி செய்யலாம். இதனால, முக்கியமான தேவையுள்ள பாடங்களை மாணவர்கள் படிச்சுடுவாங்க.

முகமது அஸ்ரத்:

பிளஸ் 1 பொதுத்தேர்வு அவசியம்தான். இதுக்குக் காரணம் பிளஸ் 1ல் வர்ற பாடங்கள் கல்லூரியின் முதலாண்டில் மறுபடியும் வருது. பிளஸ் 1ல படிக்காததால, கல்லூரியில படிக்கிறப்ப கஷ்டமா தெரியும். இதனால மாணவர்கள் அந்தப் பாடங்களில் தேர்ச்சி பெறுவது இல்லை. பிளஸ் 1 பாடத்திட்டத்தில இருக்கற கருத்துகள்தான், பிளஸ் 2 பாடங்களுக்கான அடிப்படை. அதைப் படிக்காம நேரடியா பிளஸ் 2 பாடங்களைப் படிக்கறது, அரைகுறையானதா ஆகிடுது.

சுவலஷ்மி:

நம்ம கல்வித் திட்டமே, மதிப்பெண் அடிப்படையிலதான் எல்லாவற்றையும் தீர்மானிக்குது. மாணவர்களோட திறமை, அறிவு இவற்றைப் பற்றிய அக்கறையில்லாம இருக்குது. இந்த நிலையில, 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மூன்று ஆண்டுகளும் பொதுத்தேர்வு வெச்சா, மாணவர்கள் எளிதில் சோர்வடைஞ்சுடுவாங்க. பத்தாம் வகுப்புக்குப் பிறகு, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு பிறகு பிளஸ் 2 தேர்வுக்குத் தயாராக, பிளஸ் 1 காலகட்டம் உதவியா இருக்கு. இப்போ பொதுத்தேர்வு வைக்கணும்னு முடிவு பண்ணா, அது எங்களை ரொம்ப மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும்.

அஸ்வின் குமார்:

பத்தாவதுல சிலர் சரியா படிச்சிருக்க மாட்டாங்க. அவங்கள்லாம் இதோட பிளஸ் 2தான்னு நினைச்சிட்டு இருப்பாங்க. அவங்களுக்கு பிளஸ்1ஐ பொதுத் தேர்வா எழுதும்போது, அது பிளஸ் 2க்கான ரிகர்சல் போல இருக்கும். அந்தந்த ஆண்டுக்கான பாடத்தை, அந்தந்த ஆண்டில் படிக்கறதுதான் சரி. பிளஸ் 2 பாடங்களை பிளஸ் 1ல் படிக்கறதால, அந்த ஆண்டுக்கான பாடங்களைப் படிக்க முடியறதில்ல.

ரேவதி ரேஷ்மா:

பிளஸ் 1ல் பொதுத்தேர்வு வெச்சாதான், பசங்க பிளஸ் 1 பாடங்களை ஒழுங்கா படிப்பாங்கன்னு நினைக்கறாங்க. ஆனா, பிளஸ் 1 பாடங்களை, அந்த ஆண்டிலேயே நடத்தறதுக்கான வழிமுறைகளைப் பத்தி யோசிக்கலை. கட்டாயம் பிளஸ் 1 பாடங்களை நடத்தணும்னு விதிமுறைகளை உருவாக்கினாலே, எல்லா பள்ளிகளும் அந்தந்த ஆண்டுக்கான பாடங்களை நடத்த ஆரம்பிச்சுடுவாங்க. பொதுத்தேர்வு வெச்சுத்தான் இதைச் சரி செய்யணும்னு அவசியமில்ல. அப்படி பொதுத்தேர்வு வெச்சா, மாணவர்களுக்கு பளு அதிகமாகும். மார்க் மார்க்குன்னு எந்நேரமும் யோசிச்சு, அதுக்காகவே படிச்சு, பாடங்களை முழுமையா புரிஞ்சுக்காம மனப்பாடம் பண்ணி எழுதற நிலைக்கு ஆளாகிடுவாங்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us