PUBLISHED ON : மார் 13, 2017

உடல் மற்றும் மனதை சமநிலைப்படுத்துவதற்கான ஆசனம் தாடாசனம். 'தாடா' என்றால் பனை மரம். இந்த ஆசனத்தின் உச்ச நிலையில், நம் உடல் பனை மரம் போன்று தோற்றமளிப்பதால், இந்த ஆசனத்திற்கு தாடாசனம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.
செய்யும் முறை:
முதலில் நேராக நிமிர்ந்து நின்றுகொள்ளவும். கால்களைச் சேர்த்து வைத்துக்கொள்ளவும் அல்லது பத்து சென்டிமீட்டர் வரை அகட்டி வைத்துக்கொள்ளவும்.
கைகளை உடலுக்குப் பக்கவாட்டில் தொடைகளை தொட்டுக்கொண்டு வைத்துக் கொள்ளவும்.
மெதுவாக கைகளை உயர்த்தி, தலைக்கு மேல் கொண்டு சென்று, கைவிரல்களை கோத்துக் கொண்டு, உள்ளங்கைகளை மேல் நோக்கி திருப்பிஅப்படியே மேலே இழுக்கவும். இந்த நிலையில் தலைக்கு நேராக பார்வையை செலுத்தவும். இந்த பயிற்சி முடியும் வரை நம் பார்வை, அதே இடத்திலேயே நிலைத்திருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்து கைகளையும், தோள்களையும், மார்பையும் மேல் நோக்கி இழுத்தவாறே குதிகால்களையும் தரையிலிருந்து மெதுவாக மேலே தூக்க வேண்டும். இந்த நிலையில், உடலை மேற்புறமாக முழுவதும் இழுத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இதே நிலையில் 10 முறை மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் நேரம் வரை இருக்கவும். முதலில் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும்போது, உடல் ஆடாமல் நிலையாக நிற்பது சிரமமாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம், இது கைகூடும்.
பிறகு மெதுவாக குதிகால்களை கீழே இறக்கி, கைகளையும் மெதுவாக கீழே கொண்டு வரவும்.
பலன்கள்
* இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதன் மூலம், மாணவர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தும் சக்தி, திறன், கவனம் ஆகியவை அதிகமாகும்.
* உயரமாக வளரவும் உதவும்.
* ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
* கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும்.
- ஆர்.தங்கலக்ஷ்மி, விவேகானந்தகேந்திரம்.

