PUBLISHED ON : ஜூலை 02, 2018

அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே கல்வி பேதம் தோன்றுவதற்குப் பல காரணங்களைக் கூறலாம். அதில் முக்கியமானது ஆங்கில மொழியறிவில் உள்ள வித்தியாசம். தனியார் பள்ளி மாணவர்கள் பேசும் நுனிநாக்கு ஆங்கிலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்குள் ஒருவித தாழ்வுமனப்பான்மையை உருவாக்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், ஆங்கிலம் அவர்களுக்கு அன்னியமாக இருந்து வருகிறது.
இப்பிரச்னையை இலகுவாகச் சரிசெய்ய முடியும் என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தான், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில உச்சரிப்புத்திறன் பயிற்சித் திட்டம். இதற்கு முன்னோடியானவர் ஆசிரியர் ஐயப்பன். இவர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்போரூர் ஒன்றியம் ராயமங்களம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
அந்தப் பள்ளிக்குள் செல்பவர்கள் எல்லோருமே ஆச்சரியப்பட்டுப் போவர். காரணம், பிரிட்டிஷ் ஆங்கில உச்சரிப்பு, அதற்கே உரித்தான உடல்மொழி, சரளமான பேச்சு, புதுப்புதுச் சொற்கள், எதையும் எழுதும் திறமை என்று கிராமப்புற மாணவர்கள் ஆங்கில மழை பொழிந்தனர். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஐயப்பன்தான், இந்த ஆச்சரியத்துக்கு மூல காரணம். ஆங்கிலத்தை அதிக நேசத்துடன் கற்றுத்தேர்ந்த அவர், அதே நேசத்துடன் மாணவர்களுக்கும் போதித்தார்.
அதைத் தொடர்ந்து, ஐயப்பனின் ஆங்கில போதனைமுறை அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான், ' PHONETIC METHOD DVD' என்ற ஆங்கிலத்துக்கான வீடியோ பயிற்சி வகுப்புகள். தற்போது, இந்தப் பயிற்சி முறையை மையமாக வைத்து, மாவட்டக் கல்வி அதிகாரிகள், அரசுப் பள்ளிகளில் பயிற்சி முகாம்களை மும்முரமாக நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள நெல்லிக்குப்பம் அரசு துவக்கப் பள்ளிக்கு மாற்றலாகி, அங்கு தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஆசிரியர் ஐயப்பனிடம் பேசியபோது, 'ஆங்கில மொழிப்புலமை என்பது மட்டுமே அறிவல்ல என்றாலும், அது இன்றைக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அது தன்னம்பிக்கையைக் கூட்டும் ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. புத்தகத்தைப் பார்த்து, ஆசிரியர் வாசிப்பதால் மட்டும் ஆங்கிலம் கற்றுத்தர முடியுமா என்றால், கண்டிப்பாகக் கிடையாது. ஒட்டுமொத்தச் சூழலுமே ஆங்கிலப் பேச்சுக்கு ஏதுவாக மாற்றப்பட வேண்டும். பயிற்சிதரும் ஆசிரியர்கள், முதலில் ஆங்கிலத்தைப் பார்த்துப் பயப்படக் கூடாது. ஆங்கிலத்தின் முறையான உச்சரிப்பை மாணவர்களுக்குப் போதித்தால், வகுப்பறையின் இறுக்கம் குறையும். 'பயிற்சி நடத்தப்பட்ட இடங்களில், மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு பிரமிப்பூட்டும் வகையில் இருக்கிறது; ஆங்கில உச்சரிப்பில், மாணவர் சிலர் ஆசிரியர்களுக்கே முன்னுதாரணமாக இருக்கிறார்கள்' என்று பிறர் சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.' என்கிறார்.
இத்திட்டம் சரியாக நிறைவேறினால், அரசுப் பள்ளிகளில் இடம் கேட்டுப் பெற்றோர்கள் காத்திருக்கும் நிலை உருவாகலாம்.
