PUBLISHED ON : டிச 31, 2018

2019ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான அரசின் தடை அமலாகிறது. நம் அன்றாட வாழ்வோடு நீக்கமற இணைந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களை விலக்குவது அனைவருக்கும் சவால்தான்; ஆனால் முடியாததல்ல.
சாலையில் குப்பைகளைப் பார்த்தாலே முகம் சுளித்தபடி விலகிச் செல்வது நமது வழக்கம். இந்தக் குப்பைக் குவியல், பெருமளவு நம் வீடுகளிலிருந்துதான் உருவாகிறது.
செயற்கை வேதிப்பொருட்களால் செய்த சோப்பு, சலவைத்தூள், ஷாம்பு போன்ற பொருட்கள் நம் நீர்நிலைகளைக் கெடுக்கின்றன என சூழலியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இரசாயனப் பொருட்கள் நிலத்தடி நீரில் கலந்து, பயன்படுத்த முடியாத அளவுக்கு நீரின் தரத்தைக் கெடுக்கின்றன.
மிதமிஞ்சிய நுகர்வினால் இன்று ஏரி, குளம், குட்டைகள் ஆகியவற்றின் நீர்ப்பரப்பில் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் மிதப்பதைப் பார்க்கலாம். இதற்கு அரசையும் சுகாதார அதிகாரிகளையும் குறைசொல்வதைக் கைவிட்டு, இயற்கையைப் பாதுகாக்க நாமே முயற்சிக்கலாம். நமது தினசரி செயல்களை மாற்றுவதன் மூலம் எப்படி இயற்கையைப் பாதுகாக்கலாம்?
* தினசரி நாம் பயன்படுத்தும் பொருட்கள் இயற்கையைப் பாதிக்கிறதா? என அறிந்துகொள்வது அவசியம். ஷாம்புவிற்கு மாற்றான இயற்கை குளியல் பொருட்களைப் பயன்படுத்தலாம்; சூழலுக்கு ஆதரவான பல்வேறு பொருட்களை சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ அமைப்புகள், பழங்குடிகள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இப்பொருட்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.
* வீட்டுக் குப்பைத்தொட்டியிலுள்ள குப்பைகளைக் குறைக்க முயற்சிக்கலாம். மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டாக பிரித்துப் போடலாம். இதன்மூலம் மக்காத குப்பைகளின் அளவைக் குறைக்க வாய்ப்புக் கிடைக்கும். நம் தேவையை முன்னரே திட்டமிட்டு பொருட்களை வாங்கினால், 'ஸீரோ வேஸ்ட்' (Zero waste) வாழ்க்கைக்குப் பழகலாம்.
சந்தையில், கோடிக்கணக்காக நுகர்வோர் பொருட்கள் இருக்கலாம். எது நமக்குத் தேவை என்பதை இருமுறை யோசித்து அங்காடிகளில் பொருட்களை வாங்குவது நல்லது. நீடித்த நிம்மதியான வாழ்க்கை, ஸீரோ வேஸ்ட் வாழ்க்கை என்பது வார்த்தைகளில் மட்டுமலல, அதை நம் வாழ்க்கை முறையாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.
- சாரதா பாலசுப்ரமணியன்
