PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

குழலுாதும் ராதையாகிய அஷ்வினி கவுசிக்..
![]() |
அஷ்வினி கவுசிக்
பெங்களூரைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக்கலைஞர்.
இவரை மையமாக வைத்து 'அம்ருதவர்ஷம்' இசைக்குழுவின் ரம்யா நந்தகுமார் ஏற்பாடு செய்திருந்த 'குழலுாதும் ராதை' என்ற தலைப்பிலான இசை நிகழ்வு சென்னை மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது.
மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் மேடையில் தோன்றிய அஷ்வினி கவுசிக்,தனது மகிழ்ச்சிகரமான உணர்ச்சிகளுக்கு காரணம், இதே அரங்கில் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து நிறைய இசைக்கச்சேரி கேட்டு இருக்கிறேன்,நான் ரசித்த இந்த மேடையில், இன்று நானே நடு நாயகமாக இருந்து கச்சேரி செய்ய இருக்கிறேன் என்பதால் மகிழ்வின் உச்சத்தில் இருக்கிறேன்,நான் பெங்களூரில் இருந்தாலும் இசை படித்தது எல்லாம் இந்த மைலாப்பூரில்தான் என்று நல்ல தமிழில் பேசிவிட்டு கச்சேரியை ஆரம்பித்தார்.
![]() |
முதல் பாடல் மட்டும்தான் பக்தி பாடல் அதன்பிறகு இளையராஜா இசையில் சொக்கிப்போயிருப்பவள் நான் என்று சொல்லிவிட்டு, 'இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…' என்ற பாடலை தனது புல்லாங்குழலில் இசைத்து கைதட்டலை அள்ளினார்.
தொடர்ந்து நிறைய பாடல்கள் இசைத்தார், ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்றவாறு புல்லாங்குழலை மாற்றிக் கொண்டே இருந்தார்.வெறுமனே புல்லாங்குழல் மட்டும் இருந்தால் பார்வையாளர்களுக்கு போர் அடித்துவிடலாம் என்று நினைத்த நிகழ்ச்சி அமைப்பாளர்கள் டூயட் பாடல் வரும் போது ஆண் குரலுக்கு பாடகர்கள் மூலமாக பாடவைத்து பெண் குரலுக்கு புல்லாங்குழலை வைத்துக் கொண்டனர்.
சிப்பியிருக்குது முத்துமிருக்குது பாடலைப்பாடிய கார்த்திக்கை பலரும் பாராட்டினர்,இந்த நிகழ்வில் ரவி முருகையாவின் தாய் மண்ணே என்று தேசபக்தி காணொளியும் திரையில் ஒளிபரப்பப்பட்டது.
-எல்.முருகராஜ்.