PUBLISHED ON : ஆக 22, 2026 05:59 PM

நவீன ஸ்போர்ட்ஸ் ஷூக்கள், ஜிம் ஆடைகள், ஆனால் தலையில் மட்டும் 16-ஆம் நூற்றாண்டு ரஷ்ய அரசிகளின் கம்பீரமான மரபுவழிக் கிரீடம்! - இப்படி ஒரு காட்சியை நீங்கள் கற்பனை செய்து பார்த்ததுண்டா? ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் விக்டரி பூங்காவில் ஆண்டுதோறும் நடக்கும் 'கோகோஷ்னிக் ரன்' , பழமையையும் நவீனத்தையும் ஒரே மைதானத்தில் இணைக்கும் ஒரு சுவாரஸ்யமான கலாச்சாரக் கொண்டாட்டம்.


பெண்கள் மட்டுமல்லாது, சிறுவர்- சிறுமியர், முதியவர்கள், ஏன் சில சமயங்களில் கிண்டலாகப் பாரம்பரிய வேடமிடும் ஆண்கள்கூட தலையில் இந்த பிரம்மாண்டக் கிரீடத்தை கட்டிக்கொண்டு ஓடுவதைப் பார்க்க முடியும்.

குழந்தைகள் தங்கள் குட்டித் தலைகளில் வண்ணமயமான கிரீடங்களைப் பெருமையோடு சாய்ந்துவிடாமல் பிடித்துக்கொண்டு ஓடுவதும், அவர்களுக்குப் பின்னால் பெற்றோர் உற்சாகப்படுத்தி ஓடுவதும் மாஸ்கோ வீதிகளைத் திருவிழாக்கோலமாக மாற்றுகிறது.
நவீன நாகரிகத்தின் அலையில் மறைந்துபோகும் நாட்டுப்புறக் கலைகளையும், கலாச்சார அடையாளங்களையும் அடுத்த தலைமுறைச் சிறுவர்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த வினோதமான ஓட்டப்பந்தயம் நடத்தப்படுகிறது. முடிவில், ஓட்டப்பந்தய வீரர்களுக்கு மட்டுமல்லாமல், 'மிகச் சிறந்த கைவினை கோகோஷ்னிக்', 'மிகவும் அழகிய பாரம்பரிய ஆடை' போன்ற பிரிவுகளுக்கும் பரிசுகள் வழங்கி அசத்துகிறார்கள்.
ரஷ்யாவின் உறைபனி நிலப்பரப்பில், செவ்வகக் கிரீடங்கள் காற்றில் ஆட, குட்டிச் சிறுவர்களின் சிரிப்பொலியுடன் கூடும் இந்தக் 'கோகோஷ்னிக் ரன்', விளையாட்டு என்பதையும் தாண்டி ஒரு தேசத்தின் பண்பாட்டுப் பெருமிதத்தின் அடையாளமாகத் திகழ்கிறது!
