PUBLISHED ON : செப் 15, 2026 04:28 PM

இந்த வருட விநாயகர் சதுர்த்தி வழக்கத்தை விட மிகவும் கோலாகலமாகவே கொண்டாடப்பட்டது எனலாம்.
சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காத விநாயகர் சிலைகளைத் தயாரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததன் பலனாக, இந்த முறை பெரும்பாலான இடங்களில் சுற்றுச்சூழல் நட்பு சிலைகளே இடம்பெற்றிருந்தது வரவேற்கத்தக்கது.
கதர் ஆடைகள்: சென்னையில் ஒரு சில இடத்தில் கதர் வேட்டிகள் மற்றும் சேலைகளால் ஆன விநாயகர் சிலைகளை உருவாக்கியிருந்தனர். விழா முடிந்த பிறகு, அந்த ஆடைகள் பிரசாதமாக ஏழை எளியோருக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் நெகிழ்ச்சியs அளிப்பதாக இருந்தது.
கலை நயம் மிக்க சிலைகள்: சிப்பிகளாலும், ஆயிரக்கணக்கான சிறிய விநாயகர் படங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிலைகளும், நறுமணம் வீசும் வெட்டிவேரால் ஆன விநாயகரும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன.
வேலுாரில் விநாயகரை ரொம்ப சிரமப்படுத்தாமல் அவர் கையில் இளநீர் கொடுத்து கோவளத்தில் ஒய்வு எடுப்பது போல அமைத்திருந்தனர்.
இதைக்கண்டு 'விநாயகரை இப்படி மாற்றிவிட்டார்களே' என்று வருந்துவதை விட, 'இப்படியாவது மக்கள் விநாயகரை மகிழ்ச்சியோடு நினைக்கின்றனரே' எனச் சமாதானம் அடைந்து கொள்வதே நலம்.
விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்காக (விஜர்சனம்) கடலுக்கு எடுத்துச் செல்லும் போதுதான் தெரியும், இன்னும் எத்தனை எத்தனை விசித்திரமான மற்றும் கலைநயம் மிக்க சிலைகள் உருவாக்கப்பட்டிருந்தன என்ற வியப்பு நமக்குப் புரியவரும்!
