இங்குள்ள விவசாய பண்ணையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பூசணிச்சிற்ப திருவிழா உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கிறது. இந்த ஆண்டு “பெண்கள் சக்தி” என்ற தலைப்பில் பூசணிக்காய் திருவிழா நடந்துவருகிறது.அந்த தலைப்பை மையமாகக் கொண்டு, முழுக்க முழுக்க பூசணிக்காய்களால் உருவாக்கப்பட்ட அதிசயமான பல சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.சிறிய பூசணிக்காய்களிலிருந்து பெரிய அளவிலான பூசணிவரை பயன்படுத்தப்பட்டுள்ளது.பெரும்பாலான சிற்பங்கள் பெண்களின் வலிமை, தைரியத்தை போற்றும் வகையில் இடம் பெற்றுள்ளது.
இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன இதற்காக சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிறிதும் பெரிதுமானபூசணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன பூசணிகளில் பல ரகங்களில் பல வண்ணங்களில் உள்ளன என்றும் அந்த ரகங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டு உள்ளது .
முதலாவது சிற்பத்தில், ஒரு பெண் கலைஞரைப் பிரதிபலிக்கும் அழகிய முகம், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முடி, சிவப்பு மற்றும் பச்சை நிற பூசணிக்காய்களால் உருவாக்கப்பட்ட ஆடை, அவரின் வலிமையான பார்வை, பறக்கும் பட்டாம்பூச்சிகள் ஆகியவை அந்த சிற்பத்தின் உயிரோட்டத்தை மேலும் கூட்டுகின்றன.
மற்றொன்றில் குதிரை மீது கொடி ஏந்தியபடி வலம்வரும் தைரியமான போர்வீர பெண் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குதிரையின் உடல் முழுவதும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பூசணிக்காய்களால் வடிவமைக்கப்பட்டு, போர்வீர பெண்ணின் போராட்ட ஆற்றலை வெளிப்படுத்துகிறது. பின்னணியில் உள்ள கோட்டைகள், அந்த காட்சிக்கு ஒரு வரலாற்று நிறத்தை அளிக்கின்றன.
இந்த விழா கலைத்திறனையும் சமூகச் செய்தியையும் இணைத்து, பெண்கள் பல துறைகளிலும் தங்கள் திறமையாலும் தன்னம்பிக்கையாலும் சாதித்து வருகிறார்கள் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதத்திலும் அமைந்துள்ளது.
பூசணி சிற்பத்திருவிழா நவம்பர் முதல் வாரம் வரை நடைபெறும் பெரியவர்களுக்கு அனுமதி கட்டணம் உண்டு கண்காட்சியை காணவரும் பொதுமக்கள் பூசணியால் தயாரிக்கப்பட்ட பலவித சாறு,உணவு வகைகளை ருசிப்பதற்கு ஏற்ற உணவகங்களும் இடம்பெற்றுள்ளன.
ஒரு சாதாரண பூசணிக்காய் கலைஞர்களின் கைவண்ணத்தால் பெண்மையின் பெருமையை வலிமையைப் பேசும் வண்ணச் சிற்பமாக மாறியதைச் சொல்வதே இந்த பூசணி சிற்ப திருவிழா
-எல்.முருகராஜ்