வேட்டையாடப்படும் காட்டின் காவலாளி: அழிவின் விளிம்பில் 'அலுங்கு'
வேட்டையாடப்படும் காட்டின் காவலாளி: அழிவின் விளிம்பில் 'அலுங்கு'
PUBLISHED ON : பிப் 23, 2026 08:58 PM

இயற்கையின் விந்தையான படைப்புகளில் ஒன்று 'அலுங்கு' பார்ப்பதற்கு ஊர்வன வகை போலத் தெரிந்தாலும், இது ஒரு பாலூட்டி இனமாகும். 'உயிருள்ள தொல்பொருள்' என்று அழைக்கப்படும் இந்த விலங்கு, இன்று மனிதர்களின் பேராசையால் உலகிலேயே அதிக அளவில் கடத்தப்பட்டு கொல்லப்படும் உயிரினமாக மாறியுள்ளது.
அலுங்குகளைச் சூழலியலாளர்கள் 'காட்டின் காவலாளிகள்' அல்லது 'இயற்கையின் பூச்சிக்கொல்லிகள்' என்று அழைக்கிறார்கள். ஒரு வளர்ந்த அலுங்கு ஓராண்டில் சுமார் 7 கோடி எறும்புகள் மற்றும் கரையான்களை உணவாக உட்கொள்கிறது. இவை இல்லையென்றால், கரையான்களின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி பெருகி காடுகளிலும், விவசாய நிலங்களிலும் உள்ள மரங்களுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தும்.
அலுங்கின் உடல் முழுவதும் 'கெரட்டின்' என்ற புரதத்தால் ஆன கடினமான செதில்கள் உள்ளன. இந்தச் செதில்கள் மருத்துவ குணம் கொண்டவை என்றும், இவற்றை மோதிரமாக அணிந்தால் அதிர்ஷ்டம் வரும் என்றும் நிலவும் பலத்த மூடநம்பிக்கைகளே இதன் அழிவுக்கு முக்கியக் காரணமாகின்றன.
சர்வதேசச் சந்தையில் இதன் செதில்கள் ஒரு கிலோ பல லட்ச ரூபாய்க்கு விற்கப்படுவதால், ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து சீனா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு இவை பெருமளவில் கடத்தப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 லட்சம் அலுங்குகள் வேட்டையாடப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்.
இந்தியாவில் 'இந்திய அலுங்கு' மற்றும் 'சீன அலுங்கு' என இரண்டு வகைகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இவை பரவலாக வாழ்கின்றன. இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி ஒரு புலியைக் கொன்றால் என்ன தண்டனையோ, அதே கடும் தண்டனை (7 ஆண்டுகள் சிறை) அலுங்கைக் கொல்பவர்களுக்கும் உண்டு.
அலுங்குகளைச் செயற்கையாகப் பண்ணை அமைத்து வளர்ப்பது சாத்தியமற்றது. இவை மிகவும் உணர்ச்சிகரமானவை; கூண்டில் அடைக்கப்பட்டால் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உணவு உட்கொள்ளாமல் இறந்துவிடும். மேலும், இவை ஆண்டுக்கு ஒரு குட்டி மட்டுமே போடும் என்பதால், இவற்றை அழிவிலிருந்து காக்கக் காடுகளில் அவை சுதந்திரமாக வாழ்வதை உறுதி செய்வதே ஒரே வழி.
பாதுகாப்பு அரணாகக் கருதப்படும் இதன் செதில்களே இன்று அதற்கு எமனாக மாறியுள்ளன. ஆபத்து வரும்போது பந்து போலச் சுருட்டிக்கொள்ளும் இதன் குணம், வேட்டைக்காரர்களுக்குச் சாதகமாகிவிடுகிறது. காட்டின் சமநிலையைப் பேணும் இந்தக் காவலாளியைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
-எல்.முருகராஜ்

