/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
சிந்தனைக்களம்: அணுசக்தி துறையில் நுழைய உங்களை அன்புடன் அழைக்கிறாள், 'சாந்தி!'
/
சிந்தனைக்களம்: அணுசக்தி துறையில் நுழைய உங்களை அன்புடன் அழைக்கிறாள், 'சாந்தி!'
சிந்தனைக்களம்: அணுசக்தி துறையில் நுழைய உங்களை அன்புடன் அழைக்கிறாள், 'சாந்தி!'
சிந்தனைக்களம்: அணுசக்தி துறையில் நுழைய உங்களை அன்புடன் அழைக்கிறாள், 'சாந்தி!'
PUBLISHED ON : ஜன 13, 2026 06:40 AM

கடந்த 2025, டிசம்பர் மாதம், அணுசக்தித் துறையில் வரலாற்று சிறப்பு மிக்க சட்டத்தை நம் மத்திய அரசு இயற்றியது. தனியார் நிறுவனங்களை அணுசக்தித் துறையில் ஈடுபட அனுமதிப்பதே, அச்சட்டத்தின் நோக்கம்.
இச்சட்டத்திற்கு, 'சஸ்டெய்னபில் ஹார்னெசிங் அண்டு அட்வான்ஸ்மென்ட் ஆப் நியூக்ளியர் எனர்ஜி பார் டிரான்ஸ்பார்மிங் இண்டியா' என்று பெயர். சொல்வதற்கு கடினமாக உள்ளதா... 'சாந்தி சட்டம்' என சுருக்கமாக, இனி நாம் அழைத்துக் கொள்ளவோம்.
இதுவரை அரசு மட்டுமே அணுசக்தித் துறையைக் கையாண்டு வந்தது. இத்துறையில் மேலும் நாம் வளர்ச்சி அடைய வேண்டுமானால், தனியார் பங்களிப்பும் இதில் இருந்தால் நல்லது எனக் கருதி, தனியாருக்கு இத்துறையை அரசு திறந்து விட்டிருக்கிறது; ஏனோதானோவெனச் செய்யாமல், சட்டத்திற்கு உட்பட்டு, பாதுகாப்புடன் எப்படி தனியாரை ஈடுபடுத்தலாம், எந்தெந்த பிரிவுகளில் அவர்களின் செயல்பாடு அமைய வேண்டும் என்பதற்கான சட்டங்களை வகுத்துக் கொடுக்கிறது.
இப்படிச் செய்வதன் மூலம், சுகாதாரம், உணவு, நீர், விவசாயம் போன்ற துறைகளிலும், அணு அறிவியலைப் பயன்படுத்தி, ஆராய்ச்சி மற்றும் புது உருவாக்கங்களைச் சாத்தியப்படுத்துவதே இதன் நோக்கம்.
தனியார் நிறுவனங்களுக்கு என்னவெல்லாம் அனுமதிக்கப்படுகின்றன?
அணுமின் நிலையங்கள் மற்றும் உலைகளை உருவாக்குவது, சொந்தமாக வைத்துக் கொள்வது, இயக்குவது மற்றும் இனி பயன்படுத்த முடியாது என்ற நிலையில் அதை, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் செயலற்றதாக்குவது
யுரேனியம் - 235 உட்பட அணுசக்தி எரிபொருட்களை உற்பத்தி செய்வது, சுத்திகரிப்பது, செறிவூட்டுவது அணு எரிபொருளின் போக்குவரத்தைக் கையாள்வது, சேமிப்பில் ஈடுபடுவது.
அணு எரிபொருளை ஏற்றுமதி செய்வது, இறக்குமதி செய்வது, வெளியிலிருந்து வாங்கி, தன்னுடையதாக, 'ஸ்டாக்' செய்வது.இந்தியாவிலேயே துவக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த பணிகளுக்கான உரிமங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவை. இந்நிறுவனங்கள், இந்த பணிகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குமுறையை மத்திய அரசு மேற்பார்வையிட்டு, கண்காணிக்கும். தனக்கு மட்டுமேயான பணி என, மத்திய அரசு எதையெல்லாம் வைத்துக் கொள்ளும்?
அணு ஆய்வு மற்றும் சுரங்கப் பணிகள், மத்திய அரசின் பிரத்யேக உரிமை மட்டும் கட்டுப்பாட்டில் இருக்கும். கதிரியக்கப் பொருட்களைச் செறிவூட்டுதல், பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை நிர்வகித்தல் மற்றும் கன நீர் உற்பத்தி ஆகியவற்றில் மத்திய அரசு தொடர்ந்து பிரத்யேகமாக ஈடுபடும்.
அணு உலை விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?
அணு உலை விபத்து ஏற்பட்டால் பொறுப்பைப் பிரிப்பதற்கான கட்டமைப்பையும், சாந்தி சட்டம் உருவாக்குகிறது.கடுமையான இயற்கைப் பேரழிவுகள், தங்கள் நிறுவனங்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஆயுத மோதல்கள், விரோத நடவடிக்கைகள், உள்நாட்டுப் போர், கிளர்ச்சி, பயங்கரவாதம் ஆகியவற்றிலிருந்து தனியார் நிறுவனங்களுக்கு விலக்கு உண்டு.அதேநேரம், சந்தேகத்திற்கிடமில்லாத வகையில், தனியார் நிறுவனங்களால் ஏற்படுத்தப்படும் சேதங்களுக்கு, அவையே முற்றிலும் பொறுப்பு.
தனியார் நிறுவனங்கள், 3,000 கோடி ரூபாய் வரையிலான அணு திட்டங்களில் ஈடுபடலாம்;
அத்தகைய பணிகளுக்கான நிதிப் பொறுப்பு, அந்நிறுவனங்
களுடையதே. நிறுவனத்தைத் துவங்குவதற்கு முன், அதனதன் பணிப் பொறுப்புகளுக்கேற்ற காப்பீடுகளை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும்.
தனியார் நிறுவனங்களின் சக்திக்கு மீறிய அணு சேதங்களுக்கு மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும்; அரசு சாரா நிறுவனங்களின் சேதங்களுக்கும் அரசு முழு பொறுப்பு ஏற்க வாய்ப்பு உண்டு.அணு உலை இயக்குவதற்கு பயன்படும் எந்தப் பொருளை வாங்கினாலும், அப்பொருட்களின் திறனற்ற செயல்பாடுகளால் ஏற்படக் கூடிய விபத்துகளால் ஏற்படும் நஷ்டத்தைச் சரிகட்டும் பொறுப்பை ஏற்கும் ஒப்பந்தத்தை, அவற்றின் சப்ளையரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி பெற்றுக் கொண்டால், விபத்தால் பாதிப்பைச் சந்திப்பவர்களுக்குக் கொடுக்கும் நிவாரணத் தொகையை, இந்த சப்ளையர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.
கண்ணுக்குத் தெரியாத குறைபாடுகள் அல்லது தரமற்ற சேவைகளைக் கொண்ட உபகரணங்கள் அல்லது பொருட்களை பெறும் நிறுவனங்கள், அவற்றின் சப்ளையர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெறலாம் என்ற சாந்தி சட்டம், முந்தைய நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது.
இந்த சட்ட மாற்றம், இந்திய சட்டத்தை, உலகளாவிய அணுசக்தி பொறுப்புகளுடன் ஒத்துப் போக உதவுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு என்ன பலன்?
தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் உட்பட சில முக்கிய சந்தர்ப்பங்கள் தவிர, நல்ல விதமான ஆராய்ச்சி, மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் புது தொழில்நுட்பங்களை கையாள, அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ள, சாந்தி சட்டம் அனுமதிக்கிறது.
இந்த பணிகளை மேற்கொள்ளும்போது,பொதுமக்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க போதுமான முன்னேற்பாடுகளை, தனியார் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், அணுசக்தி மற்றும் கதிர்வீச்சைப் பயன்படுத்தி பெறப்படும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கிடைக்கும் வகையிலான வழிகளையும், இந்த சாந்தி சட்டம் சொல்கிறது. இதன் மூலம், கண்டுபிடிப்புகளுக்கான முழு காப்புரிமையை பெற முடியும்.
இந்த முன்னேற்றங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், அணு மருத்துவம் மற்றும் விவசாயத்தில் கதிர்வீச்சு தொழில்நுட்பத்தின் பயன்பாடு போன்ற துறைகளில், ஆராய்ச்சி மற்றும் முதலீட்டை அதிக அளவில் ஈர்க்க வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.இன்றைய அணுசக்தியின் நிலை என்ன?
தற்போது வரை, 8.78 ஜிகாவாட் திறனுடன், 24 அணுமின் நிலையங்கள் மத்திய அரசுக்கு சொந்தம். இவை, மத்திய அணுசக்தித் துறையால் நிர்வகிக்கப்படும், இந்திய அணுசக்திக்
கழகமான, என்.பி.சி.ஐ.எல்.,லால் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம், மற்ற அனைத்து வகையான மின் நிலையங்களின் உற்பத்தியில், வெறும் 3 சதவீதம் மட்டுமே.
வரும், 2047ம் ஆண்டுக்குள், அணுசக்தித் திட்டத்தின் கீழ் மட்டுமே, 100 ஜிகாவாட் உற்பத்தித் திறன் இலக்கை எட்டும் வகையில், அரசு வேகமாகச் செயல்படத் துவங்கி உள்ளது.
செயற்கை நுண்ணறிவு, உயர் செயல்திறன் கொண்ட கணினி, குவாண்டம், மருத்துவம், விவசாயம் போன்ற துறைகளில் முன்னேற்றத்தை எட்ட, அணுசக்தித் துறையிலான மாற்றம் இன்றியமையாதது. தொழில்துறை முன்னேற்றத்துக்கு வழி வகுப்பதன் மூலம், சாந்தி சட்டம், இந்தியாவின் அணுசக்தி எதிர்காலத்திற்கான திறவுகோலாக இருக்கும்!

