/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
தாமிர உற்பத்தி போச்சு; யாருக்கு இழப்பு... சிந்திப்போம்!
/
தாமிர உற்பத்தி போச்சு; யாருக்கு இழப்பு... சிந்திப்போம்!
தாமிர உற்பத்தி போச்சு; யாருக்கு இழப்பு... சிந்திப்போம்!
தாமிர உற்பத்தி போச்சு; யாருக்கு இழப்பு... சிந்திப்போம்!
PUBLISHED ON : ஏப் 05, 2025 12:00 AM

துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் உருக்காலை, 2018-ல் மூடப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதற்கு கூறப்பட்ட காரணம், காற்று மாசுபாடு மற்றும் நிலத்தடி நீர் மாசுபாடு போன்ற குற்றச்சாட்டுகள். அதே 2018-, மே மாதம் நடந்த காவல்துறையின் துப்பாக்கி சூட்டில், 13 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் என்றும் மறக்க முடியாதது.
சமீபத்தில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் உரிமையாளரான வேதாந்தா ரிசோர்சஸ் எடுத்த ஒரு முடிவு, மிகவும் முக்கியமானது; கவனிக்கத்தக்கது.
ஏழு ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட அனைத்து இயந்திரங்களையும், தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் சில்சாவுக்கு எடுத்துச் செல்கிறது.
இது தவறான முடிவல்ல; ஏனெனில் ஒரு உருக்காலையை கட்டமைக்க, மூலதன செலவு 6,000 கோடி ரூபாய்க்கும் மேல். இயந்திரங்களை ஏழு ஆண்டுகளாக வெறுமனே போட்டு வைப்பதில் அர்த்தமே இல்லை.
இந்த தாமிர உருக்காலைக்கு, 1997-ல், 'சிவப்புக் குறியீடு வகை' என்ற அலகு வழங்கப்பட்டது.
அதாவது, மாசு குறியீட்டு மதிப்பெண், 60 மற்றும் அதற்கு மேல் உள்ள தொழிற்துறைகளான அனல் மின் உற்பத்தி, சிமென்ட் உற்பத்தி, உர உற்பத்தி, தாமிர உருக்குதல், பட்டாசு உற்பத்தி, காகிதக்கூழ் உற்பத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் மருந்து உற்பத்தி போன்றவை இதில் அடங்கும்.
சென்னை உயர் நீதிமன்றம், ஆகஸ்ட் 2020-ல், இந்த உருக்காலையை மூட உத்தரவிட்டது. பிப்ரவரி 2024-ல், உச்சநீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. அக்டோபர் மாதத்தில், உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த ஒரு மறுஆய்வு மனுவும், அதே நிலையை சந்தித்தது.
தற்போது ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை, சட்டத்தில் அமைந்துள்ள கடைசி வழியாகும்.
இப்போதைய கேள்வி...
உருக்காலை மூடப்பட்டதிலிருந்தே காற்றின் மாசு கணிசமாக குறைந்துள்ளதா? நிலத்தடி நீரின் மாசு குறைந்துள்ளதா? மழையின் அளவு முன்பை விட அதிகரித்துள்ளதா? புற்றுநோய் மற்றும் சுவாசப் பிரச்னைகள் முன்பை விட குறைந்துள்ளதா?
ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை முழுமையாக மூடுவதற்கு பதிலாக கூடுதல் ஒழுங்குமுறை நெறிமுறைகள் உருவாக்கி, அதன் அடிப்படையில் ஆலையை இயக்க அனுமதி கொடுத்திருக்கலாம்.
தாமிர உருக்குதல் போன்ற ஒரு நுட்பமான தொழிலைப் பற்றி முழுமையான புரிதலைப் பெறுவது, சாதாரண மனிதனுக்கு எளிதானதல்ல.
ஆனால், ஒரு பெரிய நிறுவனம் மூடப்படுவதால் ஏற்படும் தாக்கம் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். அதற்கு கடந்த காலத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
கடந்த, 2008ல், மே.வங்க எதிர்க்கட்சியினர், மாநிலத்தின் 400 ஏக்கர் நிலத்தில் துவக்க இருந்த கார் உற்பத்தி நிறுவனத்தை துவக்க முடியாத வகையில், நிலத்தை விவசாயிகளிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தொழிலதிபர் ரத்தன் டாட்டாவிடம் முன்வைத்தன. அதன் விளைவாக, டாட்டா, ஆலையை குஜராத்-துக்கு மாற்றினார்.
இது மே.வங்கத்தின் வளர்ச்சியை பாதித்து, துணை நிறுவனங்களையும் முடக்கியது.
தமிழகத்தில், ஸ்டெர்லைட் விவகாரம் பல ஆண்டுகளாக சட்டசபை விவாதத்தில் இடம் பெற்றதால், தமிழக அரசு இவ்விவகாரத்தில் குறுக்கிடவில்லை என்பதை புரிந்த கொள்ள முடிந்தது. தற்சமயம், எந்த வழக்கும் நிலுவையில் இல்லை மற்றும் நீதிமன்றத்தில் விசாரணையும் முடிந்துள்ளது.
ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, படிப்படியாக மாநிலத்திலிருந்து வெளியேறுவது நம் மாநிலத்திற்கும், சமூகத்திற்கும் நன்மை பயக்காது என்பதை மாநிலத் தலைமை நம்பினால், நிறுவனம் தொடர்ந்து செயல்பட, முயற்சிகளை எடுக்க இது சரியான நேரம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் முனைப்பு காட்டி வருவதைப் பார்க்க முடிகிறது. உற்பத்தித் திறனில் நம் மாநிலம் புதிய அளவுகோல்களை எட்டி இருப்பதும் சாதனை தான்.
தேசிய அளவில், தாமிரப் பற்றாக்குறை இருப்பதை பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. தாமிர உள்நாட்டு உற்பத்தி, அதிகரித்து வரும் தேவையை ஈடுகொடுக்க முடியாமல் போராடுவதாக, சர்வதேச தாமிர சங்க நிர்வாக இயக்குநர் மயூர் கர்மார்கரும் கூறி இருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், 'இந்தியாவின் உருக்கும் திறன் கொண்ட, 50 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
'கடந்த, 2018 மே மாதம் வரை நிகர ஏற்றுமதியாளராக இருந்து, சமீபத்திய ஆண்டுகளில் தாமிர இறக்குமதியை நம்பியிருக்கும் நிலைக்கு மாறி இருப்பது தெரிய வருகிறது.
'துாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூடப்பட்டதன் எதிரொலி, தாமிரத்தின் தேவையை கணிசமாக பாதித்துள்ளது' என்றார்.
இதன் பின்னணியில் யார் லாபம் அடைவர், யார் நஷ்டம் அடைவர்? குஜராத்தில் அமைந்துள்ள, அதானியின், 'கட்ச் காப்பர்' உருக்காலை துவங்கப்பட்டவுடன், அம்மாநிலத்தின் தொழிற்சாலைகள், சூரிய மற்றும் காற்றாலை நிறுவனங்கள் மிளிர்கின்றன.
உற்பத்தி மற்றும் பசுமை எரிசக்தி மாற்றத்தில் இணையான முன்னணியில் இருக்கும் தமிழகம், நாட்டின் பிற பகுதியிலிருந்து முக்கியமான உள்ளீட்டு பொருட்களை பெற வேண்டும் அல்லது வெளிநாட்டிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை இறக்குமதி செய்ய வேண்டும்.
இது யாருக்கு பேரிழப்பு... சிந்திப்போம்!
சந்திரமவுலி
தொலைதொடர்பு வல்லுநர், மும்பை.