கண்ணதாசன் நுாற்றாண்டு: சிறுகூடல்பட்டியிலிருந்து புதையலாக கிடைத்த மாபெரும் பொக்கிஷம்!
கண்ணதாசன் நுாற்றாண்டு: சிறுகூடல்பட்டியிலிருந்து புதையலாக கிடைத்த மாபெரும் பொக்கிஷம்!
PUBLISHED ON : ஜூன் 30, 2026 12:00 AM

- ரவி பாரதி -
தமிழக மக்களின் இதயங்களில் எந்த கவிஞருக்கும் கிடைக்காத சி ம்மாசனம், கண்ணதாசனுக்கு மட்டுமே கிடைத்தது. தமிழன்னையின் தவப்புதல்வர்களில் தனித்துவம் நிறைந்த செல்லப் பிள்ளையாக வலம் வந்தார். பிரபலமான கண்ணதாசனை மட்டுமே எல்லாரும் அறிவர். முத்தையா என்ற அவரது இளமைக் காலம் பற்றி அதிகமாக அறிய மாட்டார்கள். இந்த உயரத்தைப் பெறுவதற்காக, முத்தையா என்ற கண்ணதாசன் நடந்து வந்த பாதையும், கடந்து வந்த கஷ்டங்களும், அடைந்த நஷ்டங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.
முத்தையா பிறந்தது, சிறு கூடல்பட்டி என்பது சிவகங்கை மாவட்டத்திலே உள்ள ஒரு சிற்றுார். நாற்பது, ஐம்பது வீடுகள், ஒரு ஊரணி, ஊருக்கு வெளியே சின்ன தென்னந்தோப்பு, சின்னதாக ஒரு கடை வீதி. இதுதான் அந்த ஊரின் அமைப்பு வடிவம்.
ஒரே ஒரு வாசக சாலை தான் அவ்வூரின் பொக்கிஷம். எட்டாம் வகுப்பு வரை படித்தது போதும் என்று நினைத்த முத்தையாவுக்கு, வாசக சாலை தான் பொழுதுபோக்கு. அதற்குப் பின், மலை யரசி கோவிலுக்குச் சென்று சிறிது நேரம் அங்கிருந்து விட்டு இல்லம் திரும்புவார் முத்தையா.
புத்தகங்களை தேடி வாசிக்கும் பழக்கம் என்பது ஒரு விதமான போதை நிறைந்தது. ஒன்றை வாசித்து முடித்துவிட்டால், அடுத்த புத்தகம் கிடைக்கிறவரை மனம் ஓயாது. தேடிக் கொண்டே இருக்கும்.
இப்படித்தான் முத்தையா, அடுத்த கிராமங்கள் வரை சென்று புத்தகங்களை தேடிக் கண்டுபிடித்து தனது அறிவாற்றலை வளர்த்துக் கொண்டிருந்தார்.
-ஒரு பை நிறைய புத்தகங்களைச் சுமந்து கொண்டு, கால்நடையாகவே மூன்று மைல் துாரம் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு நடந்து சென்று, அங்கே ஆசை தீரும் வரை அத்தனை இலக்கியங்களையும் படித்து விட்டு, மாலையில் வீடு திரும்புவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் முத்தையா.
பிள்ளையார்பட்டி கோவிலில் வழங்கப்படும் பிரசாதமே அவருக்கு மதிய உணவாயிற்று.
இந்த ஊரிலே நமக்கு இனிமேல் வேலை இல்லை என்ற முடிவுக்கு வந்த முத்தையா, கால் போன போக்கில் பஸ்சில் ஏறி, திருச்சி சென்று, அங்கே படிப்பில்லாதவனுக்கு வேலை இல்லை என்பதை உணர்ந்து, சென்னை பயணித்தார்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கி, எழும்பூரிலிருந்து பிராட்வே வரை நடந்து சென்றபோது, பசி மயக்கம் அவரைத் தள்ளாடச் செய்தது.
எப்போதோ சந்தித்த நண்பர் ஒருவர் சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். சாப்பிட்ட கையோடு, இரண்டு மூன்று இடங்களுக்கு சென்று வேலை கேட்டு விட்டு, 'மெரினா பீச்' நோக்கி அவரது கால்கள் நடந்தன.
அசதியில் உறங்கினார்; போலீஸ்காரர் எழுப்பி, துரத்தி விட்டார்.
இப்படித்தான் தொடங்குகிறது ஒரு மாபெரும் கவிஞனின் வாழ்க்கை. இதற்குப் பிறகு சில மாதங்கள் சென்னையில் சில இடங்களில் வேலைக்குச் சேர்ந்து விட்டு, எதிர்பார்த்த வாழ்க்கை அமையாததால், சிறுகூடல்பட்டிக்கே திரும்பிவிட்டார் கண்ணதாசன்.
பின், புதுக்கோட்டை அருகில் உள்ள ராமச்சந்திராபுரத்தில் இருந்து வெளிவந்த, 'திருமகள்' பத்திரிகையில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
'புரூப் ரீடராக' இருந்தபடி, மற்ற வேலைகளையும் சேர்த்துப் பார்த்து, ஆசிரியரையே வியக்க வைத்தார் முத்தையா. 'இனிமேல் பத்திரிகை தலையங்கத்தை நீங்களே எழுதலாம்' என்று உத்தரவு போட்டு விட்டார் பத்திரிகை முதலாளி.
வேலை கேட்டு வந்தபொழுது என்ன புனைப் பெயரில் எழுதுகிறீர்கள் என்று முதலாளி கேட்டபோது, பாரதிதாசன், கம்பதாசன், காளிதாசன், வாணிதாசன் என்ற பெயர்கள் பிரபலமாகி இருந்த காலகட்டம் அது.
எனவே, 'நாமும் ஒரு தாசனாக இருந்து விட்டுப் போவோமே...' என்று எண்ணி, சாத்தப்ப செட்டியாருக்கும், விசாலாட்சி ஆச்சிக்கும் தான் எட்டாவது மகனாக பிறந்ததையும், தேவகிக்கு எட்டாவது மகனாக கண்ணன் பிறந்தான் என்பதையும் மனதில் இருத்தி, குருட்டாம்போக்கில், 'கண்ணதாசன்' என்று, தன் பெயரைச் சொல்லி வைத்தார் முத்தையா; அதுவே நிரந்தரமாக நிலைத்து விட்டது.
ஆரம்பத்தில் இருந்தே கண்ணதாசனுக்கு கவிதை எழுதுவதில் இருந்த ஆர்வத்தை விட கதை எழுதுவதிலேயே அவரது நாட்டம் இருந்தது.
வெங்கடசாமி என்ற புரடக் ஷன் மானேஜர் மூலமாக, பட்சிராஜா ஸ்டூடியோவில் ராம்நாத் என்ற திரைப்பட இயக்குநரைச் சந்தித்தார் கண்ணதாசன்.
'எனக்கு கதை எழுதத் தெரியும், நன்றாக வசனம் எழுதுவேன்' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
'கதை, வசனம் எழுதுவதற்கு நிறையப் பேர் எங்கள் கம்பெனியில் இருக்கிறார்கள். பாட்டு எழுதுவதற்காக ஒரு நல்ல கவிஞரை தேடிக் கொண்டிருக்கிறேன்' என்றார் இயக்குநர் ராம்நாத்.
'ஓ... நான் நன்றாக பாட்டு, கவிதை எல்லாமே எழுதுவேன்' என்று குருட்டு தைரியத்தில் கூறி விட்டார் கண்ணதாசன். 'அப்படியா... நாளை பாட்டெழுதிக் கொண்டு வாருங்கள்' என்று பாட்டெழுத வேண்டிய சூழ் நிலையை சொல்லி விட்டார் இயக்குநர் ராம்நாத்.
தங்கியிருந்த அறைக்குத் திரும்பிய கண்ணதாசன், இரவெல்லாம் கண்விழித்து ஒரு பாட்டை எழுதிக் கொண்டு போய் இயக்குநரிடம் மறுநாள் காலை கொடுத்தார்.
அந்தப் பாட்டு தான், 'கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்பது.
இயக்குநருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. அடுத்த பாட்டையும் நீங்களே எழுதுங்கள் என இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் இயக்குநர் ராம்நாத்.
இப்படித்தான் கவிஞராக மலர்ந்தார் கண்ணதாசன்.
காலம் ஒரு மனிதனை எப்படி உருவாக்குகிறது என்பதற்கு கண்ணதாசனே உதாரண புருஷனாக திகழ்ந்தார். நன்மை பயக்குமெனில் ஒரு பொய்யைத் துணிந்து சொல்வதில் தவறில்லை என்ற வள்ளுவர் வாக்கு, கண்ணதாசன் வாழ்வில் உண்மையாகவே நிகழ்ந்து விட்டது.
ஞானமார்க்கம் கண்ணதாசன் சொன்ன ஒரு பொய், அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்து விட்டது. கண்ணதாசனுக்குள்ளே ஒளிந்திருந்த அறிவாற்றல் படிப்படியாக வளர்ந்து முழுமதியாய் ஒளி வீசி உலகம் போற்றுகிற ஒப்பற்ற கவிஞராக ஒளிர்வாரென எவருமே எதிர்பார்க்கவில்லை. காதல், சோகம், இலக்கியம், அரசியல், ஆன்மிகம், ஞானமார்க்கம் என அவர் தொடாத துறைகளே இல்லை.
வானொலியிலும், தொலைக்காட்சியிலும், மேடைக் கச்சேரிகளிலும் கண்ணதாசன் பாட்டு ஒலிக்காத நாட்களே இல்லை.
இதைத்தான், 'நான் நிரந்தரமானவன், அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்று கல்வெட்டாக பதித்து விட்டுப் போயிருக்கிறார் கண்ணதாசன்.
கண்ணதாசன் தனக்கு எதிரியாக எவரையுமே நினைத்ததில்லை. குழந்தை மனம் கொண்டவர். இல்லை என்று வருவோர்க்கு ஓசைப்படாமல் உதவி செய்தவர். அவரது தோற்றத்தில் ஒரு கம்பீரம் இருந்தது உண்மை. ஆனால், சொந்த வாழ்க்கையில் அத்தனை எளிமையானவர்.
இரக்க குணம் மிகுந்தவர். சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு கவிஞனுக்கு இருக்க வேண்டிய இலக்கணமெல்லாம் ஒரு சேர அமையப் பெற்றவர்.
அவரது நுாற்றாண்டினை விமரிசையாகக் கொண்டாடுவது தமிழக அரசின் கடமை. தமிழ் மக்களின் கடமையும் ஆகும். திரை உலகமும், இலக்கிய உலகமும், அரசியல் உலகமும் போட்டி போட்டுக் கொண்டு கண்ணதாசனின் நுாற்றாண்டைக் கொண்டாடி மகிழ வேண்டும்.
அயலகத் தமிழர்களும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழ் மன்றங்களும் ஆனந்தமாய் கொண்டாடி மகிழ வேண்டும். இதுவே கண்ணதாசனுக்கு நாம் காட்டும் மரியாதை. கவியரசர் கண்ணதாசன் புகழ் உலகம் முழுதும் ஓங்கி ஒளிரட்டும்!
