/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
சிந்தனைக்களம்: நக்சல்களை ஒழித்துக்கட்டி வரும் மோடி அரசு
/
சிந்தனைக்களம்: நக்சல்களை ஒழித்துக்கட்டி வரும் மோடி அரசு
சிந்தனைக்களம்: நக்சல்களை ஒழித்துக்கட்டி வரும் மோடி அரசு
சிந்தனைக்களம்: நக்சல்களை ஒழித்துக்கட்டி வரும் மோடி அரசு
PUBLISHED ON : ஜூன் 30, 2025 12:00 AM

நக்சலைட் அச்சுறுத்தல், உள்நாட்டு பாதுகாப்புக்கு நீண்ட காலமாகவே பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் பீஹார் மாநிலங்களில், 2014க்கு முன், நக்சலைட்கள் தங்களின் செல்வாக்கை ஆழமாக பதித்திருந்தனர். இவர்களின் செயல்பாடுகளால், பல மாவட்டங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருந்தன. இவர்களது தாக்குதல்களில், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பலர் உயிரிழந்தனர். நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில், அரசின் சேவைகள் பெரும்பாலும் இல்லாத நிலையே இருந்தது.
கடந்த 2004 முதல் 2014 வரை, 16,463 நக்சலைட் வன்முறைகள் நிகழ்ந்ததாக மத்திய உள்துறை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த வன்முறைகளில், பாதுகாப்பு படையினர் 1,851 பேரும், பொதுமக்கள் 4,766 பேரும் பலியாகி உள்ளனர். 2010ல் மட்டும், 2,213 வன்முறைகள் நிகழ்ந்து, அதில் 1,005 பேர் உயிரிழந்துள்ளனர்.
நக்சலைட்களை ஒடுக்க, 2009ல் மத்திய காங்கிரஸ் அரசு துவக்கிய, 'ஆப்பரேஷன் கிரீன்ஹன்ட்' நடவடிக்கையும் முழுமையான வெற்றியை அடையவில்லை. அத்துடன், 18,000 சதுர கி.மீ., அளவுக்கு நக்சலைட்கள் ஆதிக்கம் பரவியிருந்தது.
கடந்த 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பதவியேற்ற பின், நக்சலிசத்தை ஒழிக்க ஒரு உறுதியான, ஒருங்கிணைந்த அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டது. இது, வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையல்ல; சமூக, பொருளாதார வளர்ச்சி சார்ந்த பிரச்னை என்றும் அங்கீகரித்தது. அத்துடன், 'சமாதான்' போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தது.
அதாவது, கடுமையான பாதுகாப்பு தாக்குதல்கள், உளவு தகவல்களை மேம்படுத்துதல், நக்சல் பகுதிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல், சரணடையும் நக்சல்களுக்கு மறுவாழ்வு அளித்தல் என, பலமுனை உத்திகள் பின்பற்றப்பட்டன.
துல்லியமான உளவு தகவல்கள் அடிப்படையில், முக்கிய நக்சல் தலைவர்களும், இயக்கத்தின் முக்கிய புள்ளிகளும் குறிவைக்கப்பட்டனர். 'ஆப்பரேஷன் பிரஹார்' மற்றும் 'ஆப்பரேஷன் ஆக்டோபஸ்' போன்ற அதிரடி திட்டங்களும் நக்சல் அமைப்புகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. நக்சல் அமைப்புகளின் மூத்த தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.
கைமேல் பலன்
* மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளால், 2014 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், நக்சல் வன்முறைகள் 53 சதவீதம் குறைந்தன. 2013ல் 1,091 நக்சல் வன்முறைகள் நிகழ்ந்த நிலையில், 2023ல் 412 மட்டுமே நிகழ்ந்தன
* பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு 73 சதவீதமும்; பொதுமக்கள் உயிரிழப்பு 70 சதவீதமும் குறைந்தன. 2014-ல், பாதுகாப்பு படையினர் 88 பேர் உயிரிழந்த நிலையில், 2024-ல் 19 பேர் மட்டுமே பலியாகினர்
* நக்சல் பாதிப்பு மாவட்டங்களின் எண்ணிக்கையும், 2014ல், 126 ஆக இருந்து தற்போது 38 ஆக குறைந்துள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும், 12-ல் இருந்து ஆறாக குறைந்துள்ளது
* கடந்த 2014-ல், 66 ஆக இருந்த வலுவூட்டப்பட்ட காவல் நிலையங்களின் எண்ணிக்கை, தற்போது 612 ஆக அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், 302 புதிய பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன
* நக்சல் பாதிப்பு பகுதிகளில், 2014 முதல் தற்போது வரை, 11,503 கி.மீ.,-க்கும் அதிகமாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன
* நக்சல் ஆதிக்க பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் கவரேஜ், 30 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த நிலையில், இப்போது 90 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 7,700-க்கும் மேற்பட்ட மொபைல் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன
* கடந்த 2014 முதல் தற்போது வரை, 8,000-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர். கடந்த 16 மாதங்களில் மட்டும், 1,600 பேர் சரண் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் மூலமாக புதிய வாழ்க்கை அமைத்து தரப்படுகிறது
* நக்சலைட் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மத்திய அரசின் சிறப்பு உதவி திட்டம் மூலம் ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. காவல் துறை திறனை மேம்படுத்த, உள்கட்டமைப்பை உருவாக்க, பாதுகாப்பு படைகளை நவீனமயமாக்க, 6,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டு உள்ளது.
நக்சலைட்கள் ஒழிப்பில் பிரதமர் மோடியின் செயல்பாடு, வளர்ச்சியை நோக்கி இருந்தது.
நக்சல்களாக இருந்து சரண் அடைந்தவர்களுக்கு மறுவாழ்வு வசதிகள் ஏற்படுத்தி தருதல், நக்சல் பாதித்த பகுதிகளை பொருளாதார ரீதியாக முன்னேற்றுதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. அதற்கு மாறாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செயல்பாடுகள் அதிரடியாக இருந்தன.
நக்சல்களுக்கு எதிராக என்கவுன்டர் நடவடிக்கை; அவர்களது தலைவர்களை ஒழித்து கீழ்மட்ட நக்சல்களை முற்றிலுமாக முடக்குவது; ஆயுதங்கள் செல்லும் வழிகளை அடைப்பது போன்றவை மேற்கொள்ளப்பட்டன.
இதன் பலனாக, பா.ஜ., ஆட்சியில் நக்சல்கள் இல்லாத இந்தியா என்ற நிலைமை விரைவில் உருவாக உள்ளது.
பிரதமர் மோடி அரசின் அசைக்க முடியாத உறுதியும், குறிப்பாக நக்சல் தலைவர்களை குறிவைத்து மேற்கொண்ட துல்லியமான நடவடிக்கைகளும், பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் மறுவாழ்வு சார்ந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையும், நக்சலிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
வன்முறை குறைப்பு, புவியியல் ரீதியான சுருக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, சரணடைவோர் அதிகரிப்பு போன்றவை இந்த வெற்றியின் தெளிவான அறிகுறிகளாகும். 2026 மார்ச்சுக்குள், நக்சலைட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இலக்குடன் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது
- டாக்டர் எஸ்.ஜி.சூர்யா -
மாநில செயலர், தமிழக பா.ஜ., 98944 47177