நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்காக வாழ்வையே அர்ப்பணித்தவர் முகர்ஜி
நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்காக வாழ்வையே அர்ப்பணித்தவர் முகர்ஜி
PUBLISHED ON : ஜூலை 06, 2026 05:18 AM

- நரேந்திர மோடி -பிரதமர்
தேசிய உணர்வு மற்றும் சுயநலமற்ற சேவை போன்ற கொள்கைகளை போற்றிப் பாதுகாக்கும் மக்களுக்கு, ஜூலை, 6ம் தேதியான இன்று, ஒரு சிறப்பான நாள். இன்று தான், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின், 125வது பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். பாரத அன்னை மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், துணிச்சலும் மிக்க அவரின் வாழ்க்கை, காலத்தால் அழிக்க முடியாத உதாரணம். நவீன இந்தியாவில், அறிவுத்திறன், பொதுச்சேவை மற்றும் தார்மீக உறுதி போன்றவற்றின் சங்கமமாகத் திகழ்ந்த டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு நிகரான தலைவர்கள் மிகச் சிலர் தான்.
இந்திய பிரிவினையின் சவாலான சூழலிலும், மேற்கு வங்கம், இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக தொடர்வதை உறுதி செய்வதிலும், அவர் உறுதியாக இருந்தார்.
அதே உறுதி தான், சில ஆண்டுகளுக்குப் பின், அவரை ஜம்மு -- காஷ்மீரை நோக்கி ஈர்த்தது. அவரை சிறைவாசத்தால் தடுக்கவோ, தனிமை சூழலால், அவரின் மன உறுதியை சீர்குலைக்கவோ முடியவில்லை.
எண்ணற்ற மக்களின் நலனுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த டாக்டர் முகர்ஜி, சிறைக்காவலில் இருந்த போதே திடீரென உயிர் நீத்தார்.
'தாம் உறுதியாக நம்பிய ஒரு லட்சியத்திற்காகவே, அவர் தன் உயிரை தியாகம் செய்தார்' என, ஆச்சார்ய வினோபா பாவே குறிப்பிட்டார். பல ஆண்டுகளுக்குப் பின், 2019ல் அரசியலமைப்பின் 370 மற்றும் 35 - ஏ ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட நிகழ்வு, அவரின் தியாகத்திற்குச் செலுத்தப்பட்ட உன்னத மரியாதையாக அமைந்தது.
இந்தியாவின் வளர்ச்சி பற்றிய டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் கண்ணோட்டம் எவ்வளவு விரிவானதாகவும், மனிதத்தன்மை நிறைந்ததாகவும் இருந்தது என்பதை, முதல் தொழில் மற்றும் வழங்கல் துறை அமைச்சராக, அவர் பதவி வகித்த காலம் வெளிப்படுத்துகிறது.
தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனம், சிந்திரி உரத்தொழிற்சாலை மற்றும் வலுவான தொழில் கொள்கை போன்ற முன்னோடி முன்முயற்சிகளின் வாயிலாக, நவீன தொழில் சார் இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தார்.
அதேவேளையில், இந்தியாவின் பாரம்பரிய வலிமைகளும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை அவர் உறுதி செய்தார்.
கடந்த, 1943ல் மேற்குவங்கத்தில் மிகக்கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்வதில், அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். மக்களுக்கு உணவளிப்பதற்கு, பல்வேறு உணவகங்களும், நிவாரண மையங்களும் திறக்கப்படுவதை, அவர் உறுதி செய்தார்.
ஒருபுறம் மக்களின் துயர நிலை, அவரை கடும் வேதனைக்கு உள்ளாக்கியது. மறுபுறம், காலனித்துவ ஆட்சியாளர்களின் உணர்வற்ற செயல்பாடு, அவரை மிகுந்த அதிருப்திக்கு உள்ளாக்கியது. தனது வேதனையை வெளிப்படுத்தும் வகையில், 'பஞ்சஷர் மான்வந்தர்' என்ற நுாலையும் அவர் எழுதினார்.
கடந்த, 1942ல் மேதினிப்பூரைத் தாக்கிய கடும் புயலுக்குப் பின், இயல்பு நிலையை மீட்டெடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பரவலாகப் போற்றப்பட்டன. இப்படிப்பட்ட தனது மனிதாபிமான பணிகளால், டாக்டர் முகர்ஜி தனித்து விளங்கினார்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி, நம் நாடு முன்னேறி வரும் இந்த வேளையில், அவர் ஆழமாக நம்பிய வலிமையான, ஒற்றுமையான, தன்னம்பிக்கையான, கருணைமிக்க இந்தியாவை உருவாக்க, நாள்தோறும் பாடுபடுவதே, நாம் அவருக்குச் செலுத்தும் மிகச்சிறந்த அஞ்சலி.
இன்றைய இளைஞர்களை பற்றி, நான் நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு, அதைச் சரியாகச் செய்து முடிப்பர் என்பதில் சிறிதளவும் அய்யமில்லை.
