PUBLISHED ON : ஜூலை 16, 2026 04:35 AM

- திரவுபதி முர்மு
ஜனாதிபதி
ஸ்ரீ ஜகந்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரார்த்தனைகளும், துதிப்பாடல்களும் சிறு வயது முதல் என் நினைவில் இடம் பெற்றுள்ளன. பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் போது, மகாபிரபு ஜகந்நாதரின் பக்திப் பாடல்களைப் பாடியதில் நான் மகிழ்ச்சி அடைந்தேன் .
நான் கிராமத்தில் பள்ளியில் படித்தபோது, பக்த சல்பேக் எழுதிய, 'ஆஹே நீல ஷைலா' என்ற பிரார்த்தனைப் பாடல் வழக்கமாக பாடப்பட்டது. மகாபிரபு ஜகந்நாதரைப் பற்றி எங்கள் ஆசிரியர் நிறைய கூறுவார்.
ரதயாத்திரை
புரியில் ஒரு பிரமாண்ட தளம் உள்ளது. அதைப் போன்ற கம்பீரமான கோவில் வேறு எங்கும் கிடையாது. அக்கோவிலில் மகாபிரபு ஸ்ரீ ஜகந்நாதர், தன் சகோதரி சுபத்ரா, மூத்த சகோதரர் பாலபத்திரருடன் இணைந்து வழிபடப்படுகிறார்.
புரி, என் சொந்த கிராமமான மயூர்பஞ்ச் மாவட்டத்தின் உபர்பேடாவிலிருந்து மிகத் தொலைவில் இருந்தது. நான் வளர்ந்து புவனேஷ்வருக்கு சென்று, மகளிர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.
அதன் பின், புரி, புவனேஷ்வர், கோனார்க் ஆகிய இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மகா பிரபு ஜகந்நாதரின் முதல் தரிசனம் குறித்த நினைவு, தற்போதும் என் மனதில் உள்ளது.
மகாபிரபு ஜகந்நாதரின் ரதயாத்தி ரையை எவராலும் மறக்க இயலுமா? ஸ்ரீ ஷேத்திரத்தில் ஒரு ஆண்டின் 12 மாதங்களில், 13 திருவிழாக்கள் கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், ரத யாத்திரையின் பிரமாண்டம் தனித்துவமிக்கது.
ஜனாதிபதி பதவிக்கான என் வேட்பு மனு அறிவிக்கப்பட்டபோது, மகாபிரபுவின் திரு நாமத்தை பக்தியுடன் நினைவுகூர்ந்தேன்.
பதவியேற்பு
'நீங்கள் என்னை இவ்வளவு உன்னதமிக்க உயரத்திற்கு அழைத்துச் செல்கிறீர்கள். ஒவ்வொரு அடியிலும் எனக்கு வழிகாட்டவும், என்றும் என்னோடு இருக்கவும் வேண்டுகிறேன்' என்று பிரார்த்தித்தேன்.
ஜனாதிபதியாக பதவியேற்க பார்லிமென்ட் மத்திய மண்டபத்திற்கு செல்லும் வழியில், நான் மகாபிரபு ஜகந்நாதரிடம் பிரார்த்தித்தேன். அவருடைய ஆசியுடன் பதவியேற்பு சிறப்பாக நடைபெற்றது.
எனினும், மகாபிரபுவை தரிசிக்க என் மனம் ஏங்கியது. விரைவில், புரிக்கான ஒரு பயணம் திட்டமிடப்பட்டது. கடந்த 2022, நவம்பர் 10 அன்று புரிக்கு சென்றபின், எங்கள் பயணம் ஸ்ரீ மந்திர் நோக்கிச் சென்றது.
பிரமாண்ட சாலையில் வெறுங்காலுடன் நடக்கத் தொடங்கினேன். கோவிலின் சிங்க வாயிலை அடைந்த கணத்தில், சாஷ்டாங்கமாக விழுந்து, மகாபிரபுவுக்கு என் பணிவான வணக்கத்தைச் செலுத்தினேன்.
மகாபிரபு, பிரபஞ்சத்தின் பாதுகாவலர். அவரது கருணையால் ஆசீர்வதிக்கப்பட்டு, நான் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சேவை செய்ய, என்னை அர்ப்பணித்துள்ளேன்.
