ஏகலைவன் வழியில்... பழங்குடியின கல்விக்கு புதியதோர் எழுச்சி!
ஏகலைவன் வழியில்... பழங்குடியின கல்விக்கு புதியதோர் எழுச்சி!
PUBLISHED ON : நவ 15, 2026 04:46 AM

சி. பி. ராதாகிருஷ்ணன்,துணை ஜனாதிபதி
பழங்குடியின மக்களின் மகத்தான விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரும், துணிச்சல், தியாகம், காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்பவருமான பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15-ம் தேதியை, 'ஜன்ஜாதிய கவுரவ் திவஸ்' எனப்படும், பழங்குடியினப் பெருமை தினமாக நாம் கொண்டாடுகிறோம்.
இந்த நன்னாளில், பழங்குடியினக் குழந்தைகளின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதே நம் பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.
ஒரு குழந்தைக்குக் கல்வி அளிப்பது என்பது அதன் தனிப்பட்ட எதிர்காலத்தை மட்டும் வடிவமைப்பதல்ல. அது ஒரு குடும்பத்தை மேம்படுத்துகிறது; ஒரு சமூகத்தை வலுப்படுத்துகிறது; முன்னேற்றம் மிக்க தேசத்தைக் கட்டமைக்கிறது.
புதிய உத்வேகம்
ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கவர்னராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது, பழங்குடியினக் குழந்தைகளின் கல்விக்கு நான் எப்போதும் கூடுதல் முக்கியத்துவம் அளித்தேன்.
எந்தவொரு குழந்தையும் கல்வி வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கில், பல்கலைகளும் பள்ளிகளும் இணைந்து செயல்படும், 'ஸ்கூல் கனெக்ட்' திட்டத்தை நான் தொடர்ந்து வலியுறுத்தினேன்.
இன்று, கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் பாரதம் புதிய வளர்ச்சிப் பாதையில் பயணித்து வரும் நிலையில், பழங்குடியினக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் ஏகலைவா மாதிரிக் குடியிருப்புப் பள்ளிகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
பழங்குடியினக் குழந்தைகள் தங்களது சமூகச் சூழலிலேயே தங்கிப் பயிலவும், கல்வியுடன் முழுமையான ஆளுமை வளர்ச்சியைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இப்பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
'ஏகலைவன்' என்ற பெயரே ஆழமான உத்வேகத்தைத் தருகிறது. கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால், மிகப்பெரிய தடைகளையும் தகர்த்தெறிய முடியும் என்பதை ஏகலைவனின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
அந்த வரலாற்றின் நவீனத் தொடர்ச்சியாகவே இன்று ஏகலைவா மாதிரிக் குடியிருப்புப் பள்ளிகள் திகழ்கின்றன.
இத்திட்டத்தின் மூலம் பழங்குடியினக் குழந்தைகளுக்குத் தரமான கல்வி, நிறுவன ரீதியிலான ஆதரவு, தங்களது கனவுகளை நனவாக்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் புதிய உத்வேகம் பெற்றுள்ளது.
2018 - -19-ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்தின் விரிவாக்கத்தை அறிவித்த பிரதமர், 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 50 சதவீதத்துக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் தொகையையும், குறைந்தபட்சம் 20,000 பழங்குடியின மக்களையும் கொண்ட ஒவ்வொரு வட்டாரத்திலும் ஓர் ஏகலைவா மாதிரிக் குடியிருப்புப் பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்ற இலக்கை முன்வைத்தார்.
இதன் மூலம், இதுவரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின்படியான கல்வி வசதி கிடைக்காத தொலைதூரப் பகுதிகளுக்கும் தரமான கல்வி வாய்ப்பு கொண்டுசெல்லப்படுகிறது.
ஏகலைவா மாதிரிக் குடியிருப்புப் பள்ளிகளின் நோக்கமும் செயல்பாட்டு வடிவமும் தனித்துவமானவை. பிற பள்ளிகளில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், ஏகலைவா பள்ளிகளில் குறைந்தபட்சம் 90 சதவீத மாணவர்கள் பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இதில் மேலும் மகிழ்ச்சியளிக்கும் அம்சம், மொத்த இடங்களில் 50 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகும். இது பழங்குடியினப் பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வரவேற்கத்தக்க முன்னெடுப்பாகும்.
இரு மொழி கற்பித்தல் முறை
மாநில அளவிலான நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது.
ஏகலைவா மாதிரிக் குடியிருப்புப் பள்ளிகளின் வளர்ச்சியை இரண்டு கட்டங்களாகப் பிரித்துப் பார்க்கலாம். 1997 முதல் 2018 வரையிலான முதல் கட்டத்தில் மொத்தம் 288 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும், இந்தக் காலகட்டத்தில் இப்பள்ளிகள் பல்வேறு கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுச் சவால்களை எதிர்கொண்டன.
கடந்த, 2018ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும், 'ஏகலைவா 2.0' திட்டம், முந்தைய நடைமுறைகளில் இருந்த குறைபாடுகளைக் களைந்து, பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதில் புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, குடும்பத்தில் முதல் தலைமுறையாகக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. அவர்கள் எதிர்கொள்ளும் கற்றல் இடைவெளிகளைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான ஆதரவும் வழங்கப்படுகிறது.
தொடக்க வகுப்புகளில், குழந்தைகள் தங்களுக்குப் பரிச்சயமான மொழியில் எளிதாகக் கற்கும் வகையில் இருமொழிக் கற்பித்தல் முறை பின்பற்றப்படுகிறது.
அதன்பிறகு, படிப்படியாக ஆங்கில வழிக் கல்விக்கு அவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். இதன் மூலம் தாய்மொழியில் கற்றலுக்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதுடன், எதிர்காலக் கல்விக்கும் அவர்களைத் தயார்படுத்த முடிகிறது.
'ஏகலைவா 2.0' திட்டத்தின் மற்றொரு முக்கிய முன்னெடுப்பு, 2019-ம் ஆண்டில் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ், 'பழங்குடியின மாணவர்களுக்கான தேசியக் கல்விச் சங்கம்' அமைக்கப்பட்டதாகும்.
ஏகலைவா பள்ளிகளை நிறுவுதல், அவற்றுக்குத் தேவையான நிதி மற்றும் வளங்களை வழங்குதல், பராமரித்தல், நிர்வகித்தல் ஆகிய பொறுப்புகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு குழந்தைக்கும் வலுவான கல்வி அடித்தளம் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், புதிதாக ஆறாம் வகுப்பில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் கற்றல் தேவைகளை மதிப்பீடு செய்து, 65 நாட்கள் கொண்ட சிறப்புப் பாடத்திட்டமான, 'பிரிட்ஜ் கோர்ஸ்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அடிப்படைக் கற்றலில் உள்ள இடைவெளிகளைக் களைவதுடன், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆங்கிலப் பாடத் தொகுதிகள் மூலம் மாணவர்களின் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்துவதற்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.
'பழங்குடியின மாணவர்களுக்கான தேசியக் கல்விச் சங்கம்' மற்றும் மத்திய அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்கள், விதிமுறைகளின்படி, ஏகலைவா பள்ளிகள் தற்போது மாநில அரசுகளின் சங்கங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு, பள்ளிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.
பள்ளிகளின் செயல்பாடுகளில் பொறுப்புணர்வையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்தும் வகையில், அவற்றின் செயல்திறன் அடிப்படையில் மாவட்டங்களுக்குத் தரவரிசை வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
'ஏகலைவா 2.0' திட்டத்தின் கீழ், 50 சதவீதத்துக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் தொகையையும், குறைந்தபட்சம் 20,000 பழங்குடியின மக்களையும் கொண்ட பழங்குடியினர் வாழும் வட்டாரங்களில் புதிதாக 440 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உண்மையான அஞ்சலி
இப்பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான நிதி ஒதுக்கீடும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில், ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டடம் உள்ளிட்ட மூலதனச் செலவாகச் சமவெளிப் பகுதிகளில் 20 கோடி ரூபாயும், வடகிழக்கு மாநிலங்கள், மலைப்பகுதிகள் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24 கோடி ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 2021-ஆம் ஆண்டில் இந்தத் தொகை முறையே 37.80 கோடி ரூபாயாகவும், 48 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டன.
மேலும், 2026 - -27 நிதியாண்டின் தொடக்கத்திலிருந்து, ஒரு மாணவருக்கான ஆண்டு செலவின வரம்பு 1,47,356 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் உணவு, சீருடை, பாடப்புத்தகங்கள், மருத்துவச் செலவுகள், சி.பி.எஸ்.இ., தேர்வுக் கட்டணங்கள் மற்றும் இணையவழிப் பாடத்திட்டச் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் இதில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில், மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் எனக்கு அளித்த விளக்கக் கூட்டத்தில், ஏகலைவா பள்ளிகளின் தற்போதைய வளர்ச்சி குறித்த விவரங்களை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
இப்பள்ளிகளில் தற்போது மொத்தம் 1,72,953 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 84,636 பேர் மாணவர்கள்; 88,317 பேர் மாணவிகள்.
மாணவிகளின் எண்ணிக்கை மாணவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பது, இத்திட்டத்தின் உள்ளடக்கிய கல்வி நோக்கத்திற்குக் கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
ஏகலைவா மாதிரிக் குடியிருப்புப் பள்ளிகளில் கல்வி என்பது வகுப்பறைப் பாடங்களுடன் மட்டும் நின்றுவிடுவதல்ல. வேகமாக மாறிவரும் உலகில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான அறிவு, திறன்கள், தன்னம்பிக்கை ஆகியவற்றை அவர்களிடம் வளர்ப்பதில் இப்பள்ளிகள் கவனம் செலுத்துகின்றன.
வகுப்பறைக் கற்றலை மேம்படுத்துவதற்கு இப்பள்ளிகள் தொழில்நுட்பத்தையும் சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றன. 365 ஏகலைவா பள்ளிகளில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் பிற திட்டங்களின் ஒருங்கிணைப்புடன், 'ஸ்மார்ட் போர்டு' வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஏகலைவா பள்ளி மாணவர்களின் சாதனைகள், 'ஜன்ஜாதிய கவுரவ் திவஸ்' தினத்தின் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கின்றன.
இப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இன்று ஐ.ஐ.டி., எனப்படும், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள், எய்ம்ஸ் எனப்படும், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் உள்ளிட்ட நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று வருவது எனக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த வேளையில், அவரது கனவுகளையும் இலட்சியங்களையும் முன்னெடுத்துச் செல்வதே நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
பழங்குடியினக் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், தங்களது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தவும், நாட்டின் வளர்ச்சியில் சமமான பங்காளிகளாகத் திகழவும் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
