தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சிந்தனைக் களம்/சல்பர் பற்றாக்குறையும், இந்திய விவசாயத்தின் எதிர்காலமும்

சல்பர் பற்றாக்குறையும், இந்திய விவசாயத்தின் எதிர்காலமும்

சல்பர் பற்றாக்குறையும், இந்திய விவசாயத்தின் எதிர்காலமும்


PUBLISHED ON : நவ 08, 2026 02:02 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026 02:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாக்டர் அர்த்தநாரி பிரபுராஜ்

போன் : - 988 4353288

கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் போது, கழிவுப் பொருளாக வெளியேறும் சல்பர், தற்போதைய போர் சூழல்களால், கடும் தட்டுப்பாட்டைச் சந்தித்து, மிகப்பெரிய பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சல்பருக்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும்... உரத் தொழிலுக்கு சல்பர் தான் முக்கியம்!

விவசாயத்தையே கண்ணில் பார்க்காத சவுதி அரேபியா, சல்பர் குறைகிறதே என்று கவலைப்படுகிறது. ஏன்? உரம் தயாரிப்போர், இங்கிருந்து சல்பரை அள்ளிச் செல்கின்றனர் என்பதால்!

சவுதிக் கு சல்பர் எங்கிருந்து கிடைக்கிறது? கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் போது சல்பர் கிடைப்பதால், சல்பரைத் தயாரிக்க யாரும் ஆலைகள் இயக்கத் தேவையில்லை. சுத்திகரிப்பு ஆலைகளின் உற்பத்தி குறையும் போது, சல்பரின் சப்ளையும் இயல்பாகவே குறைந்துவிடுகிறது. தற்போதைய சூழல் இது தான்!

ஒரு டன் சல்பரிலிருந்து, கிட்டத்தட்ட மூன்று டன் சல்பியூரிக் அமிலம் தயாரிக்கப்படும் சூழலில், இந்த அமிலத்தைப் பெறுவதற்கு உலகளவில் இரண்டு முக்கிய தொழில்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒன்று, உலகிற்கு உணவளிக்கும் உரத் தொழில்; இரண்டாவது மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி தயாரிப்புத் தொழில்!

த

பத்து டன் பாஸ்பேட் உரம் தயாரிக்க, கிட்டத்தட்ட நான்கு டன் சல்பர் தேவைப்படும் அதேவேளையில், இந்தோனேஷியாவின் நிக்கல் ஆலைகளில், ஒரு டன் நிக்கல் எடுக்க, பத்து டன் சல்பர் தேவைப்படுகிறது. இதனால் பேட்டரி மற்றும் தாமிரச் சுரங்க நிறுவனங்கள், அதிக விலை கொடுத்து சல்பரை வாங்குகின்றன.

ஏற்கனவே சல்பர் கையிருப்பு குறைவாக இருந்த நிலையில், 2025 நவம்பரில், ரஷ்யா, அதன் ஏற்றுமதிக்குத் தடை விதித்து, அதை கையிருப்பில் வைத்தது. பிப்ரவரி மாதத்தில் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், உலக உற்பத்தியில் கால் பங்கும், கடல்வழி ஏற்றுமதியில் பாதியும் முடங்கியது.

சீனா தன் அமில ஏற்றுமதியை, 99 சதவீதம் வரை குறைத்ததோடு, இந்தியா, கஜகஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் ஏற்றுமதியை நிறுத்தின.

இதன் விளைவாக சல்பர் விலை, ஒரு டன், 280 டாலரி-லிருந்து 1,000- டாலரை தாண்டியது. உர உற்பத்தியாளர்களால் இந்தச் கூடுதல் செலவை விவசாயிகளின் தலையில் உடனடியாக சுமத்த முடியாது என்பதால், பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ளன அல்லது குறைத்துவிட்டன.

த

இந்தியாவைப் பொறுத்தவரை, நாட்டுக்கு தேவையான சல்பரில் கிட்டத்தட்ட, 84 சதவீதத்தை, வளைகுடா நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. இந்நிலையில், சல்பர் வழங்குவதில், உர நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்குமாறு, சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

சல்பர் நெருக்கடியால் உரங்களின் உள்ளீட்டுச் செலவு இரட்டிப்பான நிலையிலும், வறட்சி காலத்தில் உர விலையை உயர்த்த முடியாது என்பதாலும், அரசு இந்த நிதிச் சுமையை ஏற்றுக் கொள்கிறது.

இதனால் மத்திய அரசின் உர மானியம், 1.71 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, மழைப்பொழிவைக் குறைத்த எல் நினோ பிரச்னையும், நிச்சயமற்ற பருவ நிலையும் இந்திய விவசாயத்தை ஒரே நேரத்தில் பாதித்துள்ளன.

குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் பருத்தி மற்றும் சோள விதைப்பு பரப்பளவு, கடுமையாகச் சரிந்துள்ளது. இதன் தாக்கம், விவசாயம் சார்ந்த நிறுவனங்களின் நிதி அறிக்கைகளில், தெளிவாகத் தெரிகிறது.

எனினும், போர் தணிந்தால், அடுத்த ஆண்டில், உர விலை, 25 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகளாவிய விளைச்சல் குறையும் போது, வேளாண் பொருட்கள் விலையும், குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயரும் வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில், உர நிறுவனங்களின் லாபத்தை விட, விவசாயிகளின் வருமானம் வேகமாக மீட்சியடையும் என்று எதிர்பார்க்கலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us