/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
இலங்கை தமிழர்களின் நம்பிக்கையை இழக்கும் கட்சிகள்
/
இலங்கை தமிழர்களின் நம்பிக்கையை இழக்கும் கட்சிகள்
PUBLISHED ON : ஜூன் 08, 2025 12:00 AM

நம் அண்டை நாடான இலங்கையில், இனப் பிரச்னைக்கு இன்னமும் முடிவு தெரியாத நிலையில் இலங்கைவாழ் தமிழர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதே நேரத்தில், தமிழர் கட்சிகள், அமைப்புகளின் தலைமைகள் என்ன செய்கின்றனர்? எதை நோக்கி பயணிக்கின்றனர்? என்ன எதிர்பார்ப்புடன் செயல்படுகின்றனர்?
எதிர்பார்ப்பு, பயணித்தல் போன்ற பதங்கள் மூத்தோரிடமும் இளைய சமுதாயத்தினரிடமும் வித்தியாசமான எண்ணவோட்டங்களை எழுப்பி உள்ளன. குறிப்பாக தமிழ் இனத்தின் எதிர்காலம் குறித்து சிந்தித்துச் செயல்பட வேண்டிய இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்பது, முந்தைய தலைமுறை எதிர்பார்க்கும் அரசியல் தீர்வுக்கு எதிராக உள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் இளைஞர்கள், தாங்கள் பொருளாதார ரீதியாக மேம்பட எவ்வாறாவது, ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளனர்.
அதே நேரத்தில் முந்தைய தலைமுறையினரோ, எவ்வாறாவது இனப்போரில் தொலைந்து போன தங்களுடைய வாழ்க்கை மீண்டும் துளிர் விடாதா என்ற எண்ணவோட்டத்தில் காலத்தை கழிக்கின்றனர். அவர்களுக்கும், தமிழர் தலைமைகளின் போராட்ட உணர்வு 'போர்' அடித்து விட்டது.
இதனால்தான், தமிழர் அமைப்புகள் மேற்கொள்ளும் போராட்டங்கள் பிசுபிசுத்துப் போயின. அனைத்து தமிழ் கட்சிகளும் ஒருமித்து முன்னெடுத்த மனிதச்சங்கிலியில், மனிதர்களும் இருக்கவில்லை. சங்கிலி தொடரும் இருக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் அழைப்புவிட்ட கடையடைப்பு போராட்டமும், வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்தில் ஓரளவுகூட வெற்றி பெறவில்லை.
மியூசிக்கல் சேர்
அண்மையில் நடந்து முடிந்த நாடு தழுவிய உள்ளாட்சித் தேர்தல்களில், தமிழர் பகுதிகளில் தமிழர் கட்சிகளும் கூட்டணிகளுமே முன்னணி வகித்துள்ளன. ஆனாலும் அவர்களில், எந்தவொரு அணியினராலும் எந்தவொரு உள்ளாட்சி சபையிலும் தனிப் பெரும்பான்மை பெற்று தலைமைப் பொறுப்பை ஏற்க முடியவில்லை.
அதனால், அவர்களுக்குள்ளேயே, 'ரிலே' ரேஸ் ஒடி வருகின்றனர். அல்லது, 'மியூசிக்கல் சேர்' விளையாடுகின்றனர்.
மொத்தமுள்ள தமிழ் கட்சிகள் முக்கியமாக மூன்று அணிகளாக உள்ளாட்சி தேர்தலை சந்தித்தன. இதுதவிர, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி., கட்சி, சீண்டுவார் யாரும் இல்லாததால், தனித்துப் போட்டியிட்டது.
தேர்தல் முடிவில், தொங்கு சபைகளே சாத்தியம் என்பதை உணர்ந்துகொண்ட அதன் தலைமைகள், தங்களை ஒருவருக்கு ஒருவர் பகைத்துக் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்வதில்லை என்ற எழுதப்படாத ஒப்பந்தத்துடன் களமிறங்கின.
எதிர்பார்த்தது போல் தேர்தல் முடிவு அமைந்ததால், அந்த கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, உள்ளாட்சி சபைகளின் தலைமைப் பொறுப்பை தங்களுக்குள் பிரித்துக் கொள்வர் என்ற நம்பிக்கை நிலவியது.
ஆனால் அந்த நம்பிக்கையை அந்த கட்சிகள் தகர்த்து விட்டன. குறிப்பாக, குடும்ப வாரிசுகளால் வழிநடத்தப்படும் இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும், தமிழ் அரசு கட்சியும், இந்த தலைமைப் பொறுப்புகளை தங்களது சொந்த கவுரவ பிரச்னையாகவே முன்னெடுத்துள்ளன.
தமிழ் காங்கிரஸ் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் குடும்ப சொத்தாகவே தொடருகிறது. அதுபோலவே, தமிழ் அரசு கட்சி, தற்போது நான்காவது தலைமுறையைச் சேர்ந்த சுமந்திரனின் 'கன்ட்ரோலில்' உள்ளது.
ஜீரணிக்க முடியாது
தற்போதைய தமிழர் அரசியல், மூத்த வழக்கறிஞரான சுமந்திரனை சுற்றியே நகர்கிறது. ஆனாலும், அவருடைய கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு உள்ளது. மற்ற தமிழர் கட்சிகளுடன் எந்த ஒரு ஒருங்கிணைப்பும் இல்லை. தமிழர் அரசியல், 'சுமந்திரன் ஆதரவு அல்லது எதிர்ப்பு' என்ற பாதையில் நகர்கிறது. இத்தனைக்கும் கடந்த ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் தனது இடத்தை சுமந்திரனால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. என்றாலும், அவரை சுற்றியே தமிழ் அரசியல் நிகழ்கிறது என்பது பலராலும் ஜீரணிக்கப்பட முடியாத உண்மை.
நம்பிக்கை இழப்பு
இந்த பின்னணியில், தற்போது உள்ளாட்சி சபைகளில் தலைமை பொறுப்பை ஏற்பதில் ஆகட்டும், அதனை தொடர்ந்து நடக்கவிருக்கும் மாகாண சபை தேர்தலாக இருந்தாலும், தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே, அவர்களால் பதவிக்கு வரமுடியும்.
அப்படி இல்லாமல், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டால், தமிழ் வாக்காளர்களும் பொதுவாழ்விலும், தேர்தல் அரசியலிலும் நம்பிக்கை இழந்து விடுவர்.
குறிப்பாக, கொள்கை ரீதியாக இல்லாமல் 'ஈகோ' போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் தலைமைகளை மீண்டும் புறந்தள்ள தயங்கமாட்டர்கள்.
கடந்த ஆண்டு நடந்த பார்லிமென்ட் தேர்தலில், நாட்டின் பிற பகுதிகளை போலவே, தமிழர் பகுதிகளிலும். அதிபர் அனுர குமார திசநாயகாவின் இடதுசாரி ஜே.வி.பி., தலைமையிலான அணி முன்னிலை வகித்தது.
குறிப்பாக, இலங்கை தமிழர்களின் கலாசார தலைநகரம் என்று அறியப்படும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஜே.வி.பி., அணியே ஓட்டு சதவீதத்தில் முன்னிலை வகித்தது.
வடக்கு மாகாணத்திலும் அந்த அணியே அதிக இடங்களை வென்றது.
அது தமிழ் வாக்காளர்கள் ஆளுங்கட்சியின் மீதோ, அதிபர் அனுரவின் மீதோ வைத்த நம்பிக்கையால் அல்ல. மாறாக, தங்களை சார்ந்த தமிழ் கட்சி தலைமைகள் மீது நம்பிக்கை இன்மையால்தான்
என். சத்தியமூர்த்தி
சர்வதேச அரசியல் ஆய்வாளர்.