/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
சிந்தனைக்களம்: பெரிய மீன்களை விட்டு, சின்ன மீன்களை குறிவைக்கும் இலங்கை அதிபர்!
/
சிந்தனைக்களம்: பெரிய மீன்களை விட்டு, சின்ன மீன்களை குறிவைக்கும் இலங்கை அதிபர்!
சிந்தனைக்களம்: பெரிய மீன்களை விட்டு, சின்ன மீன்களை குறிவைக்கும் இலங்கை அதிபர்!
சிந்தனைக்களம்: பெரிய மீன்களை விட்டு, சின்ன மீன்களை குறிவைக்கும் இலங்கை அதிபர்!
PUBLISHED ON : ஜூன் 02, 2025 12:00 AM

நம் அண்டை நாடான இலங்கையில், லஞ்ச ஊழல் வழக்கில் இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு முறையே, 25 மற்றும் 20 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது, நம் நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இத்தனைக்கும், அவர்கள் நாட்டிலுள்ள விளையாட்டு கிளப்புகளுக்கு கேரம் போர்டு மற்றும் செக்கர்ஸ் போர்டுகள் வாங்கியதில், நம் ரூபாய் மதிப்பில் 15 கோடி அளவுக்கே ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு.
அவ்வாறென்றால், முந்தைய ஆட்சியாளர்கள் காலத்தில், நுாறு மற்றும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்தவர்களுக்கு கிடைக்கவிருக்கும் தண்டனை என்ன?
இதற்கிடையில், தற்போதைய ஆளுங்கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி நடத்தி வரும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தன்னோடு சேர்ந்து மேலும் 40 முன்னாள் பார்லிமென்ட் உறுப்பினர்கள், ஊழல் வழக்குகளில் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கூறியுள்ளார்.
இதில், அவருக்கு எதிரான வழக்கு ஜூலை 15ல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
கடந்தாண்டு செப்.,ல் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்ற அனுர குமார திசநாயகே, அழுக்கற்ற ஆட்சி தருகிறார் என்ற பரவலான எண்ணம் அந்த நாட்டில் இருக்கிறது.
அவரது தலைமையிலான ஜே.வி.பி., என்று அறியப்படும் இடதுசாரி மக்கள் விடுதலை முன்னணியும் சரி, அந்த கட்சி தலைமை ஏற்கும் ஆளும் தேசிய மக்கள் சக்தி அணியும் சரி, பதவிக்கு வருவது வரை எதிர்க்கட்சி அரசியல் செய்தே பழக்கப்பட்டவை.
அதிலும் குறிப்பாக, கடந்த 1965-ம் ஆண்டு தோன்றிய ஜே.வி.பி., முதலில் வன்முறை அமைப்பாகவே செயல்பட்டது.
பின்னர், 1971 மற்றும் 1987- - 89 என இரண்டு கட்டங்களில், அரசை எதிர்த்து அந்த கட்சி மேற்கொண்ட ஆயுத கிளர்ச்சிகளில், இலங்கை ராணுவம் அதனை உருத்தெரியாமல் அழித்தது.
அதனை தொடர்ந்தே, ஜே.வி.பி., ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்து, கடைசியில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலிலும், பின்னர் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலிலும் வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சிகளின் ஆரூடம்
அதிபர் தேர்தலுக்கு முன்பிருந்தே, அனுர குமார திசநாயகே தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆட்சி அனுபவம் இல்லாத காரணத்தால் அவர் எந்த நேரத்திலும் பதவி விலகும் சூழ்நிலை உருவாகும் என, எதிர்க்கட்சிகள் செய்த பிரசாரம் எடுபடவில்லை.
தற்போதும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் அவர் பதவி விலக உள்ளிருந்தே நிர்பந்தங்கள் தோன்றும் என, சமூக வலைதளங்கள் ஆரூடம் கூறுகின்றன.
அன்றும் சரி, இன்றும் சரி, இத்தகைய ஆரூடங்களை மக்கள் நம்பவில்லை. இன்னும் சொல்லப்போனால், இத்தகைய பிரசாரமே, எதிர்க்கட்சிகளின் கையாலாகாத நிலையையும், பேராசையையுமே பிரதிபலிக்கிறது என்பதே பொதுவான கருத்து.
எனினும், எதிர்க்கட்சிகள் சொல்லத் தவறியது அல்லது சொல்ல மறுக்கும் ஒரு விஷயம் உள்ளது. அது, கட்டுப்படுத்தப்படாத விலைவாசி தான்.
கடந்த 2022ல் வெடித்த பொருளாதார பிரச்னை மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களே, ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டன.
ஜே.வி.பி., ஆட்சிக்கு வந்தால் தான் விலைவாசி குறையும் என்று ஆதரித்த மக்கள், தாங்கள் ஏமாந்து விட்டோமோ என்று தற்போது சந்தேகப்படுகின்றனர்.
கடந்த மே தினத்தன்று தன் அணியின் தொழிலாளர் பேரணியில் உரையாற்றிய அதிபர் அனுர குமார திசநாயகே, தொழிற்சங்கங்கள், சம்பள உயர்வு மற்றும் பணப்பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் அரசிற்கு எதிரான போராட்டங்களில் இறங்கக்கூடாது என, பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார். இதுவும், அவரது இடதுசாரி தரப்பில் பிளவு ஏற்படுத்தி உள்ளது.
இந்த பின்னணியில், பொருளாதார சீர்திருத்தங்களின் பெயரில் தனியார்மயமாக்கல், மின்சார கட்டண உயர்வு போன்ற கசப்பு மருந்துகளை மக்களுக்கு புகட்ட வேண்டிய கட்டாயத்தில் அனுர குமார திசநாயகேவின் தலைமை இருக்கிறது.
பதவியேற்றதில் இருந்து விலைவாசி குறையவில்லை என்பது மட்டுமல்ல, இதுபோன்ற முக்கிய பொருளாதார பிரச்னைகளின் நீள-, ஆழம் குறித்து தற்போதைய அரசு தலைமைக்கு சரியான புரிதல் இல்லை என்று, பலரும் நம்ப துவங்கி விட்டனர். இதுவே, அனுர அரசின் சட்ட- - ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் பொருந்தும்.
பெரிய மீன்
இதற்கிடையே, முன்னாள் அதிபர்களான மஹிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே மற்றும் மைத்திரிபால சிறிசேனா ஆகியோர் காலத்திய லஞ்ச -ஊழல் வழக்குகள் மீது மட்டுமே, அனுர அரசு தன் பார்வையை செலுத்தி உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.
அதிலும் குறிப்பாக 'பெரிய மீன்' எதுவும் குறிவைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இது அரசின் மீதான நம்பிக்கையை மேலும் குறைத்துள்ளது.
மொத்தத்தில், அனுர அரசு, லஞ்ச -ஊழல் பிரச்னைகள் எதிலும் சிக்காமல், அதே சமயம் கடந்த ஆட்சிகளில் நடைபெற்ற ஊழல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் வெற்றிபெற்று வருகிறது.
ஆனால், ஆட்சி அதிகாரத்தில் நேர்மை வேறு, ஆளும் திறமை வேறு என்பதையும் அனுர குமாரா திசநாயகே தலைமை வெகுவாக வெளிப்படுத்தி வருகிறது.
பார்லிமென்டில் பெரும்பான்மை பலம் இருந்தாலும், ஆளும் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டால் மட்டுமே, அரசு நெருக்கடியை சந்திக்கும். மற்றபடி, எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புகளும் கணிப்புகளும் அரசியல் ஸ்திரத்தன்மையை குலைத்துவிடாது.
தற்போதைய நிலையில், இலங்கைக்கு அதுவும் முக்கியம். அதுவே மிக மிக முக்கியம்.
என்.சத்திய மூர்த்தி