தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சிந்தனைக் களம்/ தேஜஸ் விபத்து: ஊகங்களால் சாதனைகளை மறைக்க முடியுமா?: சிந்தனைக்களம்

 தேஜஸ் விபத்து: ஊகங்களால் சாதனைகளை மறைக்க முடியுமா?: சிந்தனைக்களம்

 தேஜஸ் விபத்து: ஊகங்களால் சாதனைகளை மறைக்க முடியுமா?: சிந்தனைக்களம்


PUBLISHED ON : நவ 30, 2025 01:57 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2025 01:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் முக்கிய நகரங்களில் ஒன்று துபாய். கடந்த 1986ம் ஆண்டு முதல், துபாயின் அல் மக்தோம் சர்வதேச விமான நிலையத்தில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை விமான கண்காட்சி நடந்து வருகிறது. துவக்கத்தில் அரபு விமான கண்காட்சி என அழைக்கப்பட்டது. அப்போது, 200 நிறுவனங்களும், 25 விமானங்களும் மட்டுமே பங்கேற்றன.

நாளடைவில் இந்த விமான கண்காட்சி விரிவடைந்து, தற்போது துபாய் விமான கண்காட்சி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 19வது முறையாக இந்த ஆண்டு, கடந்த நவ., 17 முதல் 21ம் தேதி வரை நடந்த கண்காட்சியில், 115 நாடுகளில் இருந்து 1,500 நிறுவனங்கள் பங்கேற்றன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, 2 லட்சத்து 48,000 பார்வையாளர்களை இந்த கண்காட்சி ஈர்த்தது. கண்காட்சியில், 200க்கும் மேற்பட்ட அதிநவீன விமானங்கள் இடம் பெற்றிருந்தன. பிரமிப்பான முறையில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சி மூலம், 2023ம் ஆண்டை விட இம்முறை வர்த்தகம் இரட்டிப்பாகிஉள்ளது.

சாதனை

அதாவது, கடந்த முறை 9 லட்சம் கோடி ரூபாய்க்கு விமான நிறுவனங்களுக்கு வர்த்தகம் நடந்தது. ஆனால், இம்முறை 18 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்தது. துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவும் தன் ராணுவ மற்றும் விமான உற்பத்தி திறனை வெளிப்படுத்தியது. நம் ராணுவ இணையமைச்சர் சஞ்சய் சேத் தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் பங்கேற்று, நம் நாட்டின் முக்கிய விமான நிறுவனங்களின் திறன்களை விளக்கினர்.

இந்தியாவின் முன்னணி ஏரோஸ்பேஸ் கம்பெனியான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், பல்வேறு ரக தேஜஸ் போர் விமானங்கள் உட்பட பல விமானங்களின் மாடல்களை காட்சிப்படுத்தியது. இந்திய விமானப் படையின் சூர்ய கிரண் அமைத்த குழுவுடன் கைகோர்த்து தேஜஸ் எம்.கே., 1 ரக விமானமும், வானில் பறந்து தன் திறமையை வெளிப்படுத்தியது. இதில், ஒன்பது ஹாக் ரக விமானங்களும் இடம் பெற்றிருந்தன.

மற்ற விமான கண்காட்சிகளை போல் அல்லாமல் இந்த கண்காட்சி, விமான நிறுவனங்களுக்காகவே நடத்தப்பட்டது. 18 வயதுக்கு உட்பட்டோருக்கு அனுமதி தரப்படவில்லை. விமான கண்காட்சி என்றாலே, போர் விமானங்களின் சாகச நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம். விமானப் படைகள் மற்றும் அந்தந்த விமான நிறுவனங்களின் தேர்ச்சி பெற்ற விமானிகள் தான், சாகச நிகழ்வுகளில் விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுவர்.

உலகிலேயே மிகவும் சிறிய மற்றும் இலகு ரக நவீன போர் விமானமாக தேஜஸ் திகழ்கிறது. பாதுகாப்பு விஷயத்திலும் சமரசத்துக்கு இடம் கொடுக்காத சாதனையை வைத்திருக்கிறது.


விமானங்களின் பறக்கும் திறன், செயல்பாடு, வேகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவது தான் விமான கண்காட்சியின் நோக்கம். இதனால், பார்வையாளர்களுக்கு விமானம் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக, தரை மட்டத்தில் இருந்து 500 முதல் 2,000 அடி உயரத்தில் விமானங்கள் தாழ்வாக இயக்கப்படும்.

விபத்து

குறிப்பாக, போர் விமானங்களின் திறனை நிரூபிக்க சிக்கலான சாகசங்களும் நிகழ்த்தப்படும். தாழ்வான உயரத்தில் பறந்தபடி திடீரென செங்குத்தாக கீழே இறங்கி, விமானத்தை சட்டென மேலே எழுப்பும் மயிர் கூச்செறியும் சாகசங்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தும். அப்படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜஸ் எம்.கே., 1, கண்காட்சி நடந்த அனைத்து நாட்களிலும் வானில் பறந்து பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. கடந்த ஆண்டுகளில் நடந்த சர்வதேச விமான கண்காட்சிகளிலும் தேஜஸ் எம்.கே., 1 போர் விமானம் வானில் பல்டி அடித்து பறந்து, பார்வையாளர்களின் கைத்தட்டல்களை பெற்றிருந்தது.

தவிர, உலகிலேயே மிகவும் சிறிய மற்றும் இலகு ரக நவீன போர் விமானமாகவும் தேஜஸ் திகழ்கிறது. பாதுகாப்பு விஷயத்திலும் சமரசத்துக்கு இடம் கொடுக்காத சாதனையை வைத்திருக்கிறது. ஆனால், துபாய் விமான கண்காட்சியின் கடைசி நாளில், தேஜஸ் விமானம் துரதிர்ஷ்டவசமாக கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்புவதற்கு கூட நேரம் கிடைக்காததால், நம் இந்திய விமானியான விங் கமாண்டர் நமன்ஷ் சன்யால் உயிரிழக்க நேரிட்டது.

விமான சாகசங்களின்போது மேலே எழும்புவதற்கான நேரத்தை சரியாக கணிக்க வேண்டும்; இல்லையென்றால் கரணம் தப்பினால் மரணம் என்றாகிவிடும். அப்படியொரு தவறு இந்த சாகசத்தின்போது நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்ற பேச்சுகள் அடிபடுகின்றன. தேஜஸ் விமானத்தின் திறமையை, அதன் பாதுகாப்பு அம்சங்களை இந்த விபத்தை வைத்து புறந்தள்ளிவிட முடியாது.

எனவே, விபத்துக்கான காரணம் முழு விசாரணைக்கு பிறகே வெளி வரும். அதுவரை ஊகங்களுக்கு இடம் அளிக்காமல் இருப்பது தான், நம் சுதேசிய நிறுவனத்துக்கு நாம் அளிக்கும் மரியாதையாக இருக்கும்.

ஏர் மார்ஷல் எம்.மாதேஸ்வரன்,

ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us