/
வாராவாரம்
/
சிந்திப்போமா
/
'ஆட்டிசம்' பாதிப்புக்கு பயிற்சியே தீர்வு
/
'ஆட்டிசம்' பாதிப்புக்கு பயிற்சியே தீர்வு
UPDATED : ஜன 10, 2024 08:29 AM
ADDED : ஜன 10, 2024 01:08 AM

கவின் திருமுருகன்
கட்டுரையாளர், எம்.எஸ்.சி., உளவியல்மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான பி.எட்., பட்டதாரி. கல்வி மற்றும் உளவியல் ஆலோசகர்.திருப்பூர், பெருமாநல்லுார் பகுதிகளில்சாய்கிருபா சிறப்பு பள்ளி நடத்துபவர். சிறப்பு மாணவர்களை பள்ளிகளில் சேர்த்து உயர்நிலைகல்வி பயில உதவி வருபவர். சிறப்பு மாணவர்களுக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அளிப்பவர்; இதற்காக, பல விருதுகளை பெற்றுள்ளவர்.
ஆட்டிசம் பாதிப்பு பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. முன்பு, 151 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் பாதிப்பு இருந்தது. தற்போது, 65 குழந்தைக்கு ஒன்று, என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, மூளை வளர்ச்சியில் ஏற்படும் நரம்பு கோளாறால் ஏற்படுகிறது. ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியில் உள்ள சிறு குறைபாடு. இதை குறைபாடு என்பதைவிட, ஒரு விதமான நிலைப்பாடு என்பதே சரி.
தனிப்பட்ட திறனை பாதிக்கும்
பிறந்த குழந்தை ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு நடைமுறையை கற்று வளருகிறது. அவ்வகையில் உறக்க நிலை, தவழுதல், கழுத்து நேராக நிற்றல், பேச்சு, உணர் திறன், சொல்வதைக் கேட்டு அதற்கு பதில் அல்லது உத்தரவை ஏற்று செயல்படுவது போன்றவற்றில் ஏற்படும் தொய்வு நிலை இதன் ஆரம்ப அறிகுறி. சராசரியாக 2 வயது என்ற அளவில் தான் இது குறித்து தெரிய வரும்.
குறிப்பாக தகவல் தொடர்பு மற்றும் தனிப்பட்ட திறனை இது பாதிக்கும். பெயர் சொல்லி அழைத்தால் கூட அதற்கு உரிய பதில் தராமல் போவது; கண்களை நேராக பார்க்காமல் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் இதன் அறிகுறிகள். அதீத வெளிச்சம், அதிக சப்தம் ஆகியன தேவைப்படுவதோ அதை முற்றிலும் தவிர்ப்பதோ கூட இதன் ஒரு அறிகுறியாக இருக்கும்.
'ஸ்பீச் தெரபி'யில் தீர்வு
பெருமளவு குழந்தைகள் பேச துவங்கும் காலத்தில் இதை அறிய முடியும். பேசுவதில் தாமதம் ஏற்படுதல், பேச்சு வந்த குழந்தை பின்னர் தடுமாறுதல் போன்றவையும் இதற்கான ஒரு அறிகுறி. இதற்கான தெரபிஸ்ட்டை அணுக வேண்டும். சிறு வயதில் குழந்தைகளுக்கு 'டி.வி.,' கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்கள் பயன்படுத்தக் கொடுத்தாலும் இது போல் பேச்சு வருவது தாமதமாகலாம். இது ஒரு வகையான ஆட்டிசம் பாதிப்பு என்றாலும், 'ஸ்பீச் தெரபி' வாயிலாக இதற்கு தீர்வு காண முடியும். இந்த சிறப்பு நிலை குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்பு இருக்காது.
வெளிப்படையாக தெரியும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு விதமான மன இறுக்கம் இருக்கும். உடனடியாக மருத்துவ ரீதியாக கையாள வேண்டியதில்லை. சிலர் ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளை வேறுபடுத்தி மற்ற குழந்தைகளிடமிருந்து விலக்கி வைக்கின்றனர். சிறப்பு நிலை குழந்தைகளிடம் பரிதாபம் காட்ட வேண்டியதில்லை. அவர்களை நல்ல முறையில் கவனித்து உரிய பயிற்சி வழங்கினால் போதும்.
நல்ல முன்னேற்றம் ஏற்படும்
அவர்களிடமுள்ள திறமையை கண்டறிந்து பயிற்சி அளிக்கலாம். என்ன செயலில் பயிற்சி தேவை எனக் கண்டறிந்து வழங்க வேண்டும். அன்றாட வாழ்க்கைக்கான நடவடிக்கை முதல் அவர்களிடம் உள்ள தனித் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், சிறப்பு ஆசிரியர்களை கொண்டு தகுந்த பயிற்சி வழங்கும் போது நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நாம் சாதாரணமாக கருதும் சமையல் வேலை கூட, பல திறமைகளை அடிப்படையாக கொண்டது. ஒவ்வொரு செயலும் ஒரு திறனை, ஒரு குணத்தை நமக்குள் ஏற்படுத்தும். சமையலறையை திறம்பட நிர்வகிப்பது ஒரு தனித்திறமை. புத்தகமும், நோட்டும் கற்றுத்தருவதைவிட கூடுதலாக, சமையல் அறை கற்றுத்தரும். உடல் மற்றும் உணர்வு ரீதியான முன்னேற்றம் இதில் பெற முடியும். சமையலுக்கான காய்கறி வெட்டுவது முதல் அதை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் அளவு கணக்கிடுவது; முறையாக பரிமாறுவது என பல விசயங்கள் உள்ளன. சமையல் கலை பயிற்றுவிப்பதன் வாயிலாக பல விசயங்களை பயிற்றுவிக்க முடியும்.
விழிப்புணர்வு வேண்டும்
ஆட்டிசம் பாதிப்பு ஏற்படுவதற்கான முழுமையான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை. இருப்பினும், தவறான உணவு பழக்கம், நெருங்கிய ரத்த சொந்த உறவு முறை திருமணம், மிக அரிய வகை மரபணு கோளாறு, வயது தகுதிக்கு முன் தாய்மை அடைதல், கர்ப்ப கால நோய்கள், பிரசவ சிக்கல், சிசுவுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காதது போன்ற சில காரணங்களாலும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மேற்கண்ட காரணிகளை அறிந்து மக்கள் விழிப்புணர்வு அடைதல் நல்லது. கர்ப்ப காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். தற்போது தனிக்குடித்தன நிலைப்பாட்டில் பலரும் உள்ளனர். கூட்டுக்குடும்ப காலத்தில் தாய்மை அடையும் பெண்களுக்கு போதிய ஆதரவும், வழிகாட்டலும், ஆரோக்கியம் பேணுதலும் இருந்தது. தனிக்குடித்தன காலமான இன்று அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது. தம்பதியருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. இது மேலும் சிக்கல்களை அதிகரிக்கிறது.
சிறப்பு பள்ளிகள் தேவை
கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வகுப்புகள் பல இடங்களிலும் தற்போது நடத்தப்படுகிறது. இது போன்ற பயிற்சிகளில் பங்கேற்பதன் வாயிலாகவும், ஆலோசனை வல்லுநர்களை அணுகியும் தீர்வு காணலாம். சிறப்பு நிலை குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் சேர்க்கை வழங்க வேண்டும். பெற்றோருக்கு உதவித் தொகையும் பல்வேறு சலுகைகளும் அரசு வழங்கி வருகிறது. சலுகைகள் முறையாக சென்று சேர வேண்டும்.
அரசு பள்ளிகளில், சிறப்பு குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகள் துவங்க வேண்டும். இதை மாவட்ட அளவில் குறைந்த பட்சம் ஒரு பள்ளி என்ற அளவிலாவது அமைக்க வேண்டும். அதற்குரிய சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் உரிய மருத்துவ வல்லுநர்களை நியமிக்க வேண்டும். சிறப்பு பள்ளிகள் நடத்துவோரை ஊக்குவிக்கும் வகையில் அரசு தரப்பில் உதவிகள் வழங்கினால் குழந்தைகள் பயன்பெறும்.