PUBLISHED ON : பிப் 24, 2019

கைவசம் இருக்கும் போனை மாற்றலாமா என யோசிப்பவர்கள்கூட, 5ஜி தொழில்நுட்பம் வந்த பிறகு மாற்றிக்கொள்ளலாமோ என தயங்குகிறார்கள். காரணம், ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பமான 5ஜி வந்துவிட்டால், எல்லாமே மாறிவிடும் என்பதால்தான். குறிப்பாக வேகம். இப்போதைய 4ஜி போனை விட, 100 மடங்கு வேகம் அதிகம் இருக்கும் என்கிறார்கள். இது ஒன்று போதாதா தயங்குவதற்கு! பல நிறுவனங்கள், நடப்பு ஆண்டிலேயே தங்களது 5ஜி போன்களை அறிமுகம் செய்துவிடும் முயற்சியில் இறங்கி உள்ளனர். அப்படி இந்த ஆண்டில் அறிமுகமாகக்கூடும் என கருதப்படும் போன்கள் குறித்த லிஸ்ட் இதோ:
விவோ
விவோவை பொருத்தவரை முதற்கட்ட சோதனை முயற்சிகள் முடிவடைந்து விட்டதாக தெரிகிறது. இதற்காக சீனா மொபைல் மற்றும் குவால்காம் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
வாவேய்
சீன நிறுவனமான வாவேய், 5ஜி போனை அறிமுகம் செய்வதில் மிகவும் வேகம் காட்டி வருகிறது.ஏர்டெல் நிறுவனத்துடன் இணை ந்து, இந்தியாவில் 5ஜி சோதனைகளை ஏற்கனவே துவக்கி விட்டது. வாவேய் மேட் 30 போன், 5ஜி வசதியுடன் வரும் என வதந்தியும் உலவுகிறது.
ஒன்பிளஸ்
இந்த ஆண்டின் பிற்பாதியில், ஒன்பிளஸ், தன்னுடைய 5ஜி போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 7 போன், 5ஜி வசதியுடன் இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், 5ஜி போன்கள் தனியாகவே அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 5ஜி போன்களுக்காக, எலிஸா நிறுவனத்துடன் ஒன்பிளஸ் கைகோர்த்துள்ளது. வர்த்தக ரீதியிலான, 5ஜி தொழில்நுட்பத்தை உலகில் முதலில் அறிமுகம் செய்ய உள்ள நிறுவனங்களுள் எலிஸாவும் ஒன்று.
நோக்கியா
5ஜி போனை அறிமுகம் செய்ய துடிக்கும் நிறுவனங்களில் நோக்கியாவும் சேர்ந்துள்ளது. ஆனால், எந்த மாடல் போன், 5ஜி தொழில்நுட்பத்துடன் வருகிறது என்பது தெரியவில்லை. 5ஜி தொழில்நுட்ப சோதனையை தீவிரமாக செய்து வருகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
சயோமி
'சயோமி மி மிக்ஸ் 3' போன், 5ஜி தொழில்நுட்பத்துடன் அறிமுகம் ஆகும் என தெரிகிறது. கூடவே இந்த போன், 10 ஜிபி ரேமுடன் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் லீ ஜுன், மி மிக்ஸ் 3 போன் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்குவது போன்ற படத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
எல்.ஜி.,
குவால்காமுடன் இணைந்து, 5ஜி போன்களை வெளியிடும் நிறுவனங்களின் பட்டியலில் இந்நிறுவனமும் இருக்கிறது. அமெரிக்காவில் இந்த ஆண்டின் முற்பாதியிலேயே தன்னுடைய, 5ஜி போனை அறிமுகம் செய்துவிடும் என கருதப்படுகிறது.
லெனொவோ, மோட்டோ
குவால்காம் ஸ்நாப்டிராகன் 855 சிப்செட்டுடன், முதல், 5ஜி போன் தங்களுடையதாகத்தான் இருக்கும் என சொல்கிறது லெனொவோ. மோட்டோவும் ரெடிதான். ஏற்கனவே ஸ்நாப்டிராகன் எக்ஸ்50, 5ஜி மோடத்தின் துணையுடன் சோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டது, மோட்டோ.
ஒப்போ
விவோவின் துணை நிறுவனமான, ஒப்போ, குவால்காம் எக்ஸ்50 மோடத்தை பயன்படுத்தி, 5ஜி சோதனைகளை செய்து வருகிறது. இந்நிறுவனமும் இந்த ஆண்டே அதன் 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது.
சாம்சங்
இந்நிறுவனம், 'கேலக்ஸி எஸ்' வரிசை போன்களின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. பிப்ரவரி, மார்ச்சில், 'கேலக்ஸி எஸ்10' மாடலில், மூன்று போன்கள் அறிமுகம் ஆகலாம். ஆனால், நான்காவது போன், 5ஜி தொழில்நுட்பத்துடன் ஆண்டு இறுதியில் அறிமுகமாகலாம் என்கிறார்கள்.

