PUBLISHED ON : ஏப் 17, 2022

ஸ்மார்ட்வாட்சில் துாக்க கண்காணிப்பு, இதய துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவீடு என பல வசதிகள் வந்துவிட்டன. இந்த வரிசையில், தற்போது ஆப்பிள் நிறுவனம், ஸ்மார்ட்வாட்ச் வாயிலாக, ரத்த அழுத்தத்தை கணக்கிடும் வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இருப்பினும், இதில் தொழில்நுட்ப ரீதியாக சில தடைகள் இருப்பதால், 2024ல் தான், இந்த வசதி, ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்சில் அறிமுகம் ஆகும் என சொல்லப்படுகிறது. ஸ்மார்ட்வாட்சை பயன்படுத்தி, ரத்த அழுத்தத்தை கண்டுபிடித்து விடலாம் என்றாலும், துல்லியமாக கணக்கிடுவது என்பது தான் பெரும் சவாலாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
வரும் ஆண்டுகளில், ரத்த அழுத்தத்தை அறிந்து கொள்ளும் வசதி தான், ஸ்மார்ட்வாட்ச் விற்பனையில் குறிப்பிடத்தக்க பங்காற்றும் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். 'சாம்சங்' நிறுவனம், இத்தகைய வசதியை அறிமுகம் செய்தாலும், அது முழுமையானதாக இல்லை. பாரம்பரிய மானிட்டரின் வாயிலாக மாதாந்திர அளவு திருத்தம் தேவைப்படுகிறது.
இதேபோல், 'ஆல்பபெட்' நிறுவனத்துக்கு சொந்தமான 'பிட்பிட்' ஸ்மார்ட்வாட்ச் நிறுவனமும் இது குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. இதேபோல், சர்க்கரை அளவை ஸ்மார்ட்வாட்ச் வாயிலாக கண்டறியும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இது போன்ற அம்சங்கள் தான் எதிர்காலத்தில் ஸ்மார்ட்வாட்சின் தேவையை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும் என நிறுவனங்கள் நம்புகின்றன.
