PUBLISHED ON : பிப் 17, 2019

'கூகுள்' நிறுவனம், 'ஸ்மார்ட் வாட்ச்' உள்ளிட்ட மின்னணு அணிகலன்கள் தயாரிப்பில் ரகசியமாக களமிறங்கி உள்ளதாக தெரிகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், கைகளில் அணியும் ஸ்மார்ட் வாட்ச், ஆரோக்கிய அளவீட்டு கருவிகளுக்கு, வியர் ஓ.எஸ்., என்ற இயக்கத் தொகுப்பை, கூகுள் அறிமுகப்படுத்தியது.
ஆனால், நேரடியாக, ஸ்மார்ட் அணிகலன்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்தது. இந்நிலையில், 'ஆப்பிள், பிட்பிட்' போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கருவிகளை தயாரிக்க உள்ளதாக தெரிகிறது.
கூகுள், சமீபத்தில், 'பாசில்' நிறுவனத்திடம் இருந்து, ஸ்மார்ட் வாட்ச் தொழில்நுட்பத்தை, 280 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மேலும், பாசில் நிறுவன ஊழியர்கள் பலரை, அமெரிக்காவில், மவுன்ட்வியூ தலைமை அலுவலகத்திற்கு மாற்றியுள்ளது.
அத்துடன், மின்னணு சாதனங்கள் வடிவமைப்பு உள்ளிட்ட பிரிவுகளுக்கு, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் தேவை எனவும் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, திடீரென்று கூகுள் ஸ்மார்ட் வாட்ச் சந்தைக்கு வந்தாலும் வியப்பதற்கில்லை.

