இனி 'நெட்பிளிக்ஸ்' தளத்தில் வீடியோ கேம்களும் விளையாடலாம்
இனி 'நெட்பிளிக்ஸ்' தளத்தில் வீடியோ கேம்களும் விளையாடலாம்
PUBLISHED ON : நவ 07, 2021

'நெட்பிளிக்ஸ்' நிறுவனம், அதன் தளத்தில் வீடியோ கேம்களையும் அறிமுகம் செய்துள்ளது. திரைப்படங்கள் மற்றும் டெலிவிஷன் சீரிஸ்களை மட்டுமின்றி, பயனர்களுக்கு வீடியோ கேம்களையும் வழங்குவதற்கான முயற்சியில் அண்மைக்காலமாக நெட்பிளிக்ஸ் இறங்கி இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது உலகெங்கிலும் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு, ஐந்து மொபைல் கேம்களை விளையாடும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது. முதற்கட்டமாக, இந்த மொபைல் கேம்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.
மொபைல் போனிலோ அல்லது டேப்லெட்டிலோ விருப்பமான கேமை தேர்ந்தெடுத்து, அதை 'கூகுள் பிளே' வாயிலாக இறக்கி கொள்ள வேண்டும். அப்படி தரவிறக்கம் செய்துவிட்டால், அதன் பின் நேரடியாக நெட்பிளிக்ஸ் செயலி வாயிலாக கேம்களை அணுக இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்த கேம்களுக்காக தனியாக எந்த கட்டணமும் வசூலிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும் இந்த வீடியோ கேம்கள் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
