PUBLISHED ON : மே 11, 2021

புதிதாக தன்னை தகவமைத்துக் கொண்டு, மீண்டும் தாக்க வரும், கொரோனா வைரஸ் கதையாகத் தான் இருக்கிறது, 'பப்ஜி' விளையாட்டும். மொபைல் போன் விளையாட்டான, பப்ஜியை இந்திய அரசு தடைசெய்துவிட்டது. அதுவும் பல வழிகளில் தடையை நீக்க முயற்சிகள் எடுத்தும் எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது.
இப்போது வேறு பெயருடன், மீண்டும் வருவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. 'பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா' என்ற பெயரில், புதிய விளையாட்டை, இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது, பப்ஜியின், 'கிராப்டன்' நிறுவனம்.
சீனாவைச் சேர்ந்த, 'டென்சென்ட்' நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாலேயே, இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்டது. தற்போது, டென்சென்ட்டை கழட்டிவிட்டு, தனியாக இந்தியாவில் இந்தப் புதிய விளையாட்டை அறிமுகம் செய்யவிருக்கிறது, கிராப்டன்.
இந்தியாவை மட்டுமே குறி வைத்து இந்த புதிய விளையாட்டு உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இந்தியப் பயனர்களைக் கவரும் வண்ணம் இது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பயனர்கள் தரவுகள் அனைத்தும் இந்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு, இங்கேயே சேமிக்கப்படும், வெளிநாடுகளுக்குச் செல்லாது என்றும் தெரிவித்துள்ளது, கிராப்டன்.
எப்போது இந்தப் புதிய விளையாட்டு வெளியாகும் என்பது குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
