PUBLISHED ON : நவ 24, 2020

சாம்சங் நிறுவனம், புதிதாக, 'தி சீரோ டிவி' எனும், புதுமையான ஸ்மார்ட் டிவியை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஒரு பட்டனை தட்டுவதன் மூலம், டிவியை செங்குத்தாகவோ; படுக்கைவசமாகவோ மாற்றி பார்க்க முடியும் என்பது தான் இந்த டிவியின் சிறப்பு.
இந்த டிவி, 43 அங்குல திரை கொண்டதாகும். மேலும் சிறப்பான ஒலி வசதிக்காக, 4.1 சேனலுடன், 60 வாட் ஸ்பீக்கர்கள் முன்பக்கத்தில் இருக்கின்றன.
'போன் மிரரிங்' சேவைக்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது. போனில் உள்ளதை அப்படியே, மிரரிங் மூலமாக, டிவியில் பார்க்கலாம் என்பதுடன்; வீடியோ போன்றவற்றை பார்க்கும்போது, ரிமோட்டில் ஒரு பட்டனை தட்டுவதன் மூலம், டிவியை படுக்கை வசத்திற்கு மாற்றி பார்க்கலாம். மொத்தத்தில், 43 அங்குல திரை கொண்ட மெகா போன் என்றே சொல்லலாம்.
டிவியை சுழலச் செய்ய, ரிமோட் பட்டன் மூலமாக மட்டுமின்றி, குரல் வழியாகவும் உத்தரவு பிறப்பிக்கலாம்.
இந்த புதுமை டிவி தற்போது, இந்தியாவில் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கிறது.
விலை: 1,24,999 ரூபாய்.
