ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது இனியும் சந்தேகம் வேண்டாம்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது இனியும் சந்தேகம் வேண்டாம்
PUBLISHED ON : மே 07, 2024 12:00 AM

கடந்த காலங்களில், ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுவது, கள்ள ஓட்டு போடுவது உட்பட பல வழிகளில், தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்தன. இதை தவிர்க்க, வாக்காளர் அடையாள அட்டைகள் அறிமுகம், பல கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்துவது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு வாயிலாக, தேர்தல் கமிஷன் பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்று கூறப்பட்டாலும், இதுபற்றி அவ்வப்போது சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அவற்றுக்கு தேர்தல் கமிஷனும் விளக்கம் அளித்து வருகிறது.
இந்நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் ஓட்டுகள், 'விவிபாட்' இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளுடன், 5 சதவீத அளவில் தான் ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றன. அதனால், அனைத்து ஓட்டுச்சாவடிகளில் பதிவாகும் ஓட்டுகளின், அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் சரிபார்க்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்துடன், மீண்டும் பழைய ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு செல்ல முடியாது' என்று கூறியதுடன், 'விவிபாட்' இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகள் சரிபார்ப்பு வரம்பை தற்போதுள்ள, 5 சதவீதத்தில் இருந்து, 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து விட்டனர்.
இருப்பினும், ஒப்புகை சீட்டுகள் சரிபார்ப்பு தொடர்பாக யாரேனும் சந்தேகம் எழுப்பினால், அந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில், சில நடவடிக்கைகளை எடுக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அதாவது, ஓட்டு எண்ணிக்கை முடிந்தவுடன் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து, 45 நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் போது, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பதிவாகும் ஓட்டுகளில் 5 சதவீதத்தை, ஒப்புகை சீட்டுக்களுடன் சரிபார்க்கலாம். இதில், 2வது, 3வது இடம் பிடிக்கும் வேட்பாளர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், அவர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்கும்படி கோரலாம்.
அப்போது, தொழில்நுட்ப வல்லுனர்களை வைத்து சரிபார்க்கும் வாய்ப்பை, தேர்தல் கமிஷன் ஏற்படுத்தி தர வேண்டும். இயந்திரத்தை சரிபார்க்க கோரிக்கை வைத்த வேட்பாளரே, அதற்கான முழு செலவை ஏற்க வேண்டும். இயந்திரம் பழுதடைந்தது உறுதி செய்யப்பட்டால், வேட்பாளர் செலுத்திய செலவுத்தொகை திருப்பி தரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த விவகாரத்தில், விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுகளுடன், 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை, நீதிபதிகள் நிராகரித்தது சரியானதே. இல்லையெனில், அது தேர்தல் கமிஷனுக்கு மிகப்பெரிய சுமையாக அமைந்து விடும். தேர்தல் முடிவுகளை அறிவிப்பதிலும் பெருத்த தாமதம் ஏற்படும்.
அதேநேரத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 100 சதவீதம் பாதுகாப்பானவை என, கடந்த மாதம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் உறுதிபட தெரிவித்திருந்தாலும், அதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் அவ்வப்போது எழுவது தொடர்கிறது. எனவே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை, அவற்றில் எந்த விதமான குளறுபடிகளையும் யாராலும் செய்ய முடியாது. அதற்கேற்ற வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன என, மீண்டும் ஒரு முறை தேர்தல் கமிஷன் உறுதி செய்வது காலத்தின் கட்டாயம்.
மேலும், ஓட்டுப்பதிவு நடைபெறும் நேரங்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்ப ரீதியாக சில பிரச்னைகள் ஏற்படுவது அரிதாக நிகழும் விஷயம் என்றாலும், அவை இயந்திரங்களின் செயல்பாடு குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு வலுவூட்டுவதாக உள்ளன. அரசியல் கட்சிகள், இதை பூதாகரமான விஷயமாக மாற்றுவதற்கும் வழி வகுக்கிறது. ஆதலால், பொருத்தமான தொழில்நுட்பத்தை புகுத்துவதன் வாயிலாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவது அவசியம். இதன் வாயிலாக, அர்த்தமற்ற புகார்களை புறந்தள்ளலாம்.