ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடப்பது அவசியம்!
ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடப்பது அவசியம்!
PUBLISHED ON : ஆக 27, 2024 12:00 AM

இந்திய அரசியல் சட்டத்தின், 370வது பிரிவின் கீழ், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை, 2019 ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாகவும், அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது. இந்நிலையில், ஐந்து ஆண்டு இடைவெளிக்கு பின், ஜம்மு - காஷ்மீரில் செப்டம்பர், 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என, மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று, சமீபத்தில் தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதன் வாயிலாக, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் திரும்புவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. மாநிலமாக இருந்த ஜம்மு - காஷ்மீர், இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதையும், அம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையும் எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
அதில், 'இந்தாண்டு செப்டம்பருக்குள், ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் முழு மாநில அந்தஸ்து வழங்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்திருந்தது. அந்த உத்தரவை நிறைவேற்றும் வகையிலும், ஜம்மு - காஷ்மீருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், ஜம்மு - காஷ்மீரில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டதில், ஜம்மு பிராந்தியத்தில், சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை, 37லிருந்து, 43 ஆகவும், காஷ்மீர் பிராந்தியத்தில் தொகுதிகள் எண்ணிக்கை, 46லிருந்து, 47 ஆகவும் அதிகரித்துள்ளன. இந்த மாற்றங்கள் தேர்தல் முடிவுகளிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீரில், கடந்த பல மாதங்களாக ஓய்ந்திருந்த பயங்கரவாத தாக்குதல்கள், சமீப நாட்களாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, ஜம்மு பிராந்தியத்தில் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அத்துடன், பயங்கரவாதிகள், ஹிந்துக் கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், முஸ்லிம் அதிகம் வசிக்கும் காஷ்மீர் பகுதியில் தாக்குதல்கள் குறைந்துள்ளன.
இப்படி பயங்கரவாதிகளின் அணுகுமுறை மாறியதால், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ., தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், தேர்தல் கமிஷனும், அரசியல் கட்சிகள் அமைதியான முறையில் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டியதையும், வன்முறைகள் இல்லாமல் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்த விஷயத்தில், இரு தரப்பினரும் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகலாம்.
ஏனெனில், நாட்டிற்கு எதிரான சக்திகள், தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்க எந்த வகையிலாவது முற்படலாம் என்பதால், மக்கள் பயமின்றி வெளியே வந்து, அச்சமின்றி ஓட்டளிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
கடந்த 2020 டிசம்பரில், ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் மற்றும் இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற லோக்சபா தேர்தல் போன்றவை, பயங்கரவாதிகள் தாக்குதல் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தன. அதுவே, சட்டசபை தேர்தலையும் அமைதியாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதன்படியே, பாதுகாப்பு படையினரின் முழுமையான பாதுகாப்புடன், சட்டசபை தேர்தலும் அமைதியாக நடைபெறும் என நம்பலாம்.
ஜம்மு - காஷ்மீர் மக்களும், இந்திய தேர்தல் முறையின் மீது நம்பிக்கை வைத்து, அச்சமின்றி ஓட்டளிக்க வேண்டியது அவசியம். இதன் வாயிலாக, தங்களின் சொந்த பிரதிநிதிகளை அவர்கள் தேர்ந்தெடுக்க முடியும். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதன் வாயிலாக, சில சட்டங்கள் மாற்றப்பட்டு இருக்கலாம். துணை நிலை கவர்னருக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டு இருக்கலாம்.
ஆனால், தேர்தல் வாயிலாக மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் போது, இவற்றில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் நிகழும். தேர்ந்தெடுக்கப்படும் அரசால் நிர்வாகத்திலும் முன்னேற்றம் ஏற்படுவதுடன், மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் உத்வேகம் பெறலாம்.