PUBLISHED ON : செப் 03, 2024 12:00 AM
கடந்த, 2017ல் மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப் பட்டார். இந்த சம்பவத்தில் முன்னணி நடிகரான திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப் பட்டதை அடுத்து, கேரள திரைத்துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்களை விசாரிக்க கமிட்டி ஒன்று அமைக்க வேண்டும் என, அம்மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்தே, ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டு, பெரும் சவால்களுக்கு மத்தியில் அக்கமிட்டி விசாரணை நடத்தி, 2019ல் கேரள அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டதன் வாயிலாக, மலையாள சினிமா துறையில் புயல் கிளம்பியுள்ளது.
இதையடுத்து, நடிகையர் சிலர் அளித்த புகார்கள் அடிப்படையில், பிரபல இயக்குனர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, முகேஷ் உள்ளிட்ட பலர் மீது பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த விவகாரத்தால், கேரள நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.
ஹேமா கமிட்டி, கேரள திரைத்துறையில் பாலியல் சீண்டல்கள் நடப்பதை விசாரணை வாயிலாக உறுதி செய்தது மட்டுமின்றி, சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், அறிக்கையில் பரிந்துரைத்திருந்தது. இருந்தும், அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிர்ப்பந்தங்கள் காரணமாக, கிடப்பில் போடப்பட்டிருந்த அறிக்கை, தகவல் உரிமை ஆணையம் மற்றும் கேரள உயர் நீதிமன்றத்தின் தலையீடுகளுக்கு பிறகே வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதுவும், சில விஷயங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 87 பக்கங்கள் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்தே, எந்த அளவுக்கு அந்த அறிக்கை வெளியாகாமல் இருக்க பிரபலங்கள் பலர், சில ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டிருப்பர் என்பதை அறியலாம்.
கமிட்டி அறிக்கை வெளியான பின், பல நடிகையர் வெளிப்படையாக பேசத் துவங்கி விட்டனர். தாங்கள் சந்தித்த துன்புறுத்தல்களை பகிரங்கமாக கூறி வருகின்றனர். இதனால், பல நடிகையருக்கு வெளிப்படையாக பிரச்னைகள் உருவாகலாம் என்பதை மறுப்பதற்கு இல்லை. அதேநேரத்தில், இந்தப் பாலியல் புகார்கள், மலையாள திரையுலகில் மட்டுமின்றி, கோலிவுட், பாலிவுட் என மற்ற திரையுலகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழ் சினிமாவிலும் பாலியல் சீண்டல்கள் இருக்கின்றன என்று, சில நடிகையரை வெளிப்படையாக பேசவும் வைத்திருக்கிறது. பெரிய அளவிலான விவாதத்திற்கும் வழி வகுத்திருக்கிறது.
கடந்த, 2012 டிசம்பரில் டில்லியில் நடந்த, 'நிர்பயா' கூட்டு பலாத்கார வழக்கு நாட்டையே உலுக்கி, மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் நிலைமையை உருவாக்கியது. அதையடுத்து, 2018 ல், 'மீ டூ' இயக்கம் முன்னெடுக்கப்பட்டு, பணியிடங்களில் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி, பல பெண்கள் வெளிப்படையாக பேசும் நிலையை ஏற்படுத்தியது.
இதன்பின், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கால், மல்யுத்த வீராங்கனை யர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்டது, பெரிய அளவில் பேசப்பட்டது.
சமீபத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவமும் தேசிய அளவில் புயலை கிளப்பியுள்ளது.
அந்த வரிசையில், மலையாள திரையுலகில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாலியல் தில்லு முல்லுகள், தற்போது அம்பலமாகி உள்ளதுடன், அங்கு நிலவும் பிரச்னைகளை தீர்ப்பதற்கும், சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்குமான வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. அதாவது, மாற்றத்திற்கான ஒரு கிரியா ஊக்கியாக அமைந்துள்ளது.
மேலும், பணியிடத்தில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சுரண்டல்களை ஒடுக்க வேண்டியது அவசியம் என்பதையும் தெளிவுபடுத்தி யுள்ளது. இனியும், இதுபோன்ற பாலியல் புகார்கள் தொடராமல் இருக்க வேண்டும் எனில், ஹேமா கமிட்டி பரிந்துரைகளை, கேரள மாநில அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியம்.