தொகுதி மறுவரையறை பிரச்னை சுமுகமாக தீர்ப்பது அவசியம்
தொகுதி மறுவரையறை பிரச்னை சுமுகமாக தீர்ப்பது அவசியம்
PUBLISHED ON : மார் 10, 2025 12:00 AM

'நீட்' தேர்வு பிரச்னை, தேசிய கல்வி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக ஏற்கனவே போர்க்கொடி துாக்கியுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் கையில் எடுத்துள்ள மற்றொரு பிரச்னை, தொகுதி மறுவரையறை தொடர்பானது.
நாடு முழுதும் 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், லோக்சபா தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க, மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டினார். 58 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, 'தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்களுக்கு தற்போதுள்ள பிரதிநிதித்துவத்தை குறைக்கக் கூடாது' என்று வலியுறுத்தப்பட்டது.
'லோக்சபா தொகுதிகள் மறுவரையறையின் போது, தென்மாநிலங்கள் வகையிலும் பாதிக்கப்படாது' என, மத்திய அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தாலும், அதை நம்ப முடியாது என, பிப்ரவரி 27ல் கர்நாடக காங்., முதல்வர் சித்தராமையா குரல் எழுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்தே, ஸ்டாலினும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக, ஆறு மாநிலங்களின் முதல்வர்களுக்கும், 29 கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதமும் எழுதியுள்ளார்.
1971க்கு பின், பீஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் போன்ற வடமாநிலங்களை ஒப்பிடுகையில், தென் மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி குறைவே. இதனால், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு, ஒன்று முதல் எட்டு தொகுதிகள் வரை குறையலாம். குறிப்பாக, 5 தென்மாநிலங்களில், 26 தொகுதிகள் குறையலாம் என, சில ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சட்டத்தின், 82வது பிரிவின்படி, ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதும், லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையானது மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதன்படியே, 1952, 1963 மற்றும் 1972ம் ஆண்டுகளில், லோக்சபா தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன.
1976ல் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கு, மத்திய அரசு முக்கியத்துவம் அளித்ததால், லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையை மாற்றி அமைப்பது, 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்பின், அரசியல் சட்டத்தில் 2002ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, தொகுதிகளை மாற்றி அமைப்பது, 2026 வரை மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. 'மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்காமல் இருக்க, இந்த நடவடிக்கை அவசியமானதே' என, அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் தெரிவித்தார்.
மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறையை மேற்கொண்டு, தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தை குறைத்தால், அது அநீதியாகவே அமையும். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டாத மாநிலங்களுக்கு, மத்திய அரசின் வழிகாட்டி விதிமுறைகளை கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு சலுகை காட்டியதாகவும், தென் மாநிலங்களுக்கு தீங்கிழைத்ததாகவும் அமையும்.
கூட்டாட்சி அமைப்பில், மத்திய, மாநில அரசுகள் இடையே சுமுக உறவு தொடர்வது அவசியம். அப்போது தான், பெரிய அளவிலான சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும். எனவே, தொகுதிகள் மறுவரையறை விஷயத்திலும், அச்சம் தெரிவித்துள்ள மாநிலங்களுக்கு பாதிப்பு வராத வகையிலான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.
எனவே, தொகுதி மறுவரையறை பிரச்னையில், அனைவரும், குறிப்பாக தென் மாநிலங்கள் ஏற்கத்தக்க தீர்வு காணப்பட வேண்டும். யாருக்கும் வெற்றி இல்லை, யாருக்கும் தோல்வி இல்லை என்ற நிலைமையை ஏற்படுத்துவது தேவையானது. இந்தப் பிரச்னையாது, மத்திய அரசு, தனக்குள்ள அதிகாரத்தின் வாயிலாக தீர்க்கப்பட வேண்டியதல்ல. தென் மாநிலங்களின் கவலைகளை கருத்தில் கொண்டு, அவற்றின் பிரதிநிதிகள் எண்ணிக்கை குறையாமல் பாதுகாக்க, மத்திய அரசு முக்கியத்துவம் தருவதே நல்லது.